Published : 26 Sep 2017 10:07 AM
Last Updated : 26 Sep 2017 10:07 AM

இவ்வளவுதான் தரம் தாழ முடியுமா?- இன்னும் இருக்கிறதா?

மிழக அரசியலின் தரத்தை எவ்வளவு கீழே கொண்டுசெல்ல வேண்டுமோ அவ்வளவு கீழே செல்ல வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதுபோல இருக்கிறது ஆளும் அதிமுகவின் இரு பிரிவுகளும், பழனிசாமி தலைமையிலான அரசும்! தங்கள் இடையேயான அதிகாரச் சண்டையின் ஊடாக அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலரான மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை முன்வைத்து அதிமுகவினர் நடத்திவரும் விவாதங்கள் அரசியல் அசிங்கத்தின் உச்சத்தைத் தொடுகின்றன.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, தமிழகப் பொறுப்பு ஆளுநர், மத்திய அமைச்சர்கள், பல மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என்று பலர் மருத்துவமனைக்குச் சென்று வந்தனர். அவர்களில் யாருமே ஜெயலலிதாவைப் பார்த்ததாகச் சொல்லவில்லை; மாறாகத் தொற்று ஏற்படும் என்பதால் தாங்கள் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்றே தெரிவித்தனர். சிலர் அவரது உடல்நிலை தேறிவருவதாக மருத்துவர்கள் சொன்னதாகவும் குறிப்பிட்டனர். மருத்துவமனை வட்டாரத்திலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கைகளாலும் இந்தக் குழப்பங்களைத் தீர்க்க முடியவில்லை. கிட்டத்தட்ட 75 நாட்கள் கழித்து ஜெயலலிதாவின் மரணச் செய்தி வெளியானது. மறைவைத் தொடர்ந்து ஆளுங்கட்சிக்குள் நடந்துவரும் அதிகாரச் சண்டையில் எவ்வளவு மோசமான எல்லைகளைத் தொட முடியுமோ அவ்வளவையும் செய்துவருகிறார்கள் அதிமுகவினர்.

இதன் சமீபத்திய உச்சம் மதுரையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரைப் பார்த்ததாகவும், அவர் சாப்பிட்டதாகவும் சொன்னது பொய் என்று குறிப்பிட்டிருக்கிறார் சீனிவாசன். உள்ளபடி ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரை அவருடைய கட்சியின் யாருமே பார்க்கவில்லை என்றும் எல்லோருமே மக்களிடம் திரும்பத் திரும்ப பொய்களையே சொல்லிவந்திருக்கின்றனர் என்பதையுமே சீனிவாசனின் இந்த ஒப்புதல் வாக்குமூலம் நிரூபிக்கிறது. ஜெயலலிதாவின் நலம் விசாரிக்கச் சென்றவர்களிடம் இப்படி ‘ஜெயலலிதா நன்றாக இருக்கிறார், உடல் நலம் மேம்பட்டுவருகிறது, சாப்பிடுகிறார்’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தவர்களில் இன்றைய முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும்கூட இருந்தவர்கள் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது. பின்னாளில் அதே பன்னீர்செல்வம் ‘ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது; நீதி விசாரணை வேண்டும்’ என்றும் கேட்டார். பழனிசாமி நீதி விசாரணை நடத்தப்படும் என்றார். இப்போது ஆணையத்தையும் அறிவித்திருத்திருக்கிறார்.

ஆனால், ஆட்சியும் அரசும் அதிமுகவினர் அவர்கள் கையிலேயே இருக்கும்போது, இதுபற்றி மேலும் மேலும் குழப்பத்தை உருவாக்கும் வகையில் பேசிக்கொண்டே இருப்பது ஏன்? சீனிவாசனின் கருத்து தொடர்பாக இந்த அரசின், முதல்வரின் கருத்து என்ன? தங்களுடைய சொந்தக் கட்சியின் தலைவரின் உடல்நிலை, மரணம் தொடர்பாகவே இப்படி மாறி மாறிப் பேசுபவர்களினுடைய நம்பகத்தன்மை எப்படிப்பட்டதாக இருக்கும்? இவர்கள் மீது இம்மாநிலத்தின் சாமானிய மக்கள் எப்படி நம்பிக்கை வைக்க இயலும்? இன்னும் என்னென்ன இழிவுகளையெல்லாம் தமிழ் மக்கள் வேடிக்கை பார்த்திருக்க வேண்டுமோ தெரியவில்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x