Published : 09 May 2017 09:31 AM
Last Updated : 09 May 2017 09:31 AM

தவறைத் தவறுகளால் நியாயப்படுத்த முடியாது!

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தப் பட்ட ஆசிரியர்களையும் அலுவலர்களையும் அரசு கல்லூரி களுக்கு இடமாற்றம் செய்ய தமிழக அரசு முடிவெடுத்திருக்கிறது. இம்முடிவு, தமிழக உயர்கல்வித்துறையில் மிகவும் மோசமான நிலையைத் தோற்றுவிப்பதோடு, தவறான முன்னுதாரணமாகவும் அமைந்துள்ளது.

1929-ல் சிதம்பரத்தில் தொடங்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இலக்கியம், தத்துவம், இசை, வரலாறு என்று பல துறை களிலும் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சி மையமாக விளங்கியது. தமிழ் கலாச்சாரத்தின் அடையாளமாகவும் அது புகழ்பெற்றிருந்தது. தமிழக அரசியலில் அது செல்வாக்கு செலுத்திய காலமும் உண்டு. தனியாரால் தொடங்கப்பட்டது என்ற அடிப்படையில் இப்பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தில் நிறுவனரின் குடும்பத்திற்கு சில சிறப்புச் சலுகைகள் இருந்தன.

அச்சலுகைகள், காலப்போக்கில் நிதி மேலாண்மை சீர்கேட்டிற்குக் காரணமாயிற்று. விளைவாக, தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழக அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கிறது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அப்பல்கலைக்கழகத்தை மீண்டும் நல்ல திசை நோக்கி நடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு. ஆனால் அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளோ ஏற்கெனவே நடந்த சீர்கேடு களை நியாயப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளன.

2016 ஜனவரி 23 தேதியிட்ட அரசாணையின்படி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவந்த 370 ஆசிரியர்கள் அரசுக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். தற்போது மேலும் 1031 ஆசிரியர்களையும் 4722 அலுவலகப் பணியாளர்களையும் அரசுத் துறைக்கு இடமாற்றம் செய்ய இருப்பதால் அதுவரையில் புதிய நியமனங்கள் எதுவும் செய்யக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழுவில் தமிழக உயர்கல்வித்துறை இயக்குநர் உறுப்பினர். நிதிக்குழுவில் தமிழக நிதிச் செயலாளர் உறுப்பினர். மேலும் அந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழகக் கணக்கு தணிக்கைக் குழு செயல் படுகிறது. பல்கலைக் கழக நியமனங்களிலும் அரசுப் பிரதிநிதிகள் அங்கம் வகித்துள்ளனர். இந்நிலையில் பல்கலைக்கழக நிதி மேலாண்மை சீர்கேட்டிற்கு தமிழக அரசும் பொறுப்பேற்க வேண்டும்.

பல்கலைக் கழகத்தின் நிதி மேலாண்மையில் மட்டுமின்றி, ஆசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோரின் நியமனத்திலும் முறை கேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கல்வித் தகுதிகள் மட்டும் பல்கலைக்கழக ஆசிரியர் பதவிக்குப் போதுமானது அல்ல. துறைசார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் தகுதியும் அவர்களுக்கு இருந்தாகவேண்டும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தால் முறைகேடாகப் பணியமர்த்தப்பட்ட விரிவுரை யாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் அந்த ஆய்வுத் தகுதியைப் பெற்றிருக்கிறார்களா என்பது தவிர்க்க முடியாத கேள்வி.

அந்தத் தகுதியை அவர்கள் பெற்றிராத பட்சத்தில், கருணை அடிப்படையில் அவர்களைப் பணியில் நீடிக்கச்செய்வதும் ஏனைய கல்லூரிகளுக்கு அவர்களை இடம் மாறுதல் செய்வதும் உயர்கல்வித் துறையில் பெரும் கேட்டினை விளைவிக்கக் கூடிய நடவடிக்கை. பல்கலைக்கழகத்தில் ஏற்கெனவே செய்யப்பட்ட தவறுகள் சரிசெய்யப்பட வேண்டும்.

பல்கலைக்கழக நிர்வாகம் செய்த அதே தவறுகளை தமிழக அரசும் செய்யக் கூடாது. உயர்கல்வித் துறையில் ஆசிரியராவதற்குத் தேவையான சகல தகுதிகளோடும் ஆயிரக்கணக்கானவர்கள் காத்துக்கிடக்கும் மாநிலத்தில்தான் இப்படியான கூத்துகளும் நடக்கின்றன என்பது சமூக அவலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x