Published : 11 May 2017 08:55 AM
Last Updated : 11 May 2017 08:55 AM
குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான ஆலோசனைகளை தேசிய எதிர்க்கட்சிகள் தொடங்கிவிட்டன. கருத் தொற்றுமை மூலம் பொது வேட்பாளரை அடையாளம் காண்பதற்கு, ஆளும் பாஜகவுக்கு நெருக்கடி தரும் முயற்சியாகவும் இதைப் பார்க்கலாம். நரேந்திர மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுப்பதிலும், சட்டமியற்றுவதிலும் எதிர்க்கட்சிகளிடம் ஆலோசிப்பதில் அக்கறை காட்டியதே இல்லை. குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளரைத் தீர்மானிக்க பாஜக கருத்தொற்றுமை வழியை ஏற்கும் என்று உறுதியாக நம்ப முடியாது. பிற கட்சிகளுடன் காங்கிரஸ் ஆலோசனையைத் தொடங்கியிருப்பதன் காரணம் இதுதான்.
2002-ல் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக அப்துல் கலாமை, இடதுசாரிகளைத் தவிர பிற தேசியக் கட்சிகள் ஏற்றன. தேர்தலில் போட்டியிட ஒப்புக்கொண்ட அப்துல் கலாம், அனைத்துக் கட்சிகளாலும் தான் ஏற்கப்படுவதையே விரும்பினார். அப்போதைய பிரதமர் வாஜ்பாய் காங்கிரஸ் தலைவர் சோனியா இணைந்து ஒருமித்த முடிவை எடுத்தனர். அப்துல் கலாமுக்குப் பின்னர் குடியரசுத் தலைவர்களாகப் பதவிவகித்த பிரதீபா பாட்டீல், பிரணாப் முகர்ஜி இருவருமே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால் பாஜக தனது சார்பில் வேட்பாளர்களை நிறுத்தியது.
வாஜ்பாய் கடைப்பிடித்த கருத்தொற்றுமையை பாஜக மீண்டும் கடைப்பிடிக்கும் என்பதற்கான அறிகுறிகள் இன்றைக்கு இல்லை. 2002-ல் பாஜகவுக்கு 200-க்கும் குறைவான உறுப்பினர்களே இருந்தனர். பல மாநிலங்களில் அக்கட்சி ஆட்சியிலும் இல்லை. இன்றைக்கு நிலைமை வேறு.
எதிர்க்கட்சிகள் நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெற்றுவிடுவார் என்று கூற முடியாவிட்டாலும், பெரும்பான்மை வாக்குகளைவிட சற்று குறைவாகவே பாஜகவிடமும் இருப்பது உண்மை. எனவே எதிர்க்கட்சிகள் தங்களுடைய சார்பில் வேட்பாளரை நிறுத்தி முயற்சி மேற்கொள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சமாஜவாதி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனைகளைத் தொடங்கிவிட்டார்.
திரிணமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் போன்றவைக் கூட்டணிக் கட்சிகள் இல்லையென்றாலும் காங்கிரஸின் முயற்சிக்கு அவை ஆதரவு தரக்கூடும். அதிமுகவுக்கு பாஜகவுடன் நெருக்கமான உறவு இல்லையென்ற நிலை வரும்போது காங்கிரஸுக்கு அக்கட்சியின் ஆதரவைப் பெற வாய்ப்பு இருக்கிறது. காங்கிரஸின் வலுவான தோழமைக் கட்சியான திமுகவின் ஆதரவு நிச்சயம்.
இந்நிலையில், இந்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஏற்கும்படியான தகுதிவாய்ந்த பொது வேட்பாளரை அடையாளம் காண்பதுதான் காங்கிரஸின் முக்கியப் பொறுப்பு. பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் என்று காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாகப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். பொது வேட்பாளருக்கு பாஜக முயற்சிசெய்ய வாய்ப்பில்லை எனும் சூழலில் காங்கிரஸ் கட்சி திறந்த மனதுடன் பிற கட்சிகளை அணுகி பொது வேட்பாளருக்கு ஆதரவு திரட்ட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT