Published : 08 May 2017 09:11 AM
Last Updated : 08 May 2017 09:11 AM

இலங்கையுடனான உறவு மேம்படட்டும்!

இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் இந்திய வருகை, இந்திய இலங்கை உறவு மேலும் வலுவடையும் எனும் நம்பிக்கையைத் தந்திருக்கிறது. 2015 ஜனவரிக்குப் பிறகு, இந்தியாவுக்கு அவர் மூன்றாவது முறையாக வருகை தந்தது, இந்தியாவுடனான உறவில் இலங்கை கொண்டிருக்கும் ஈடுபாட்டை வெளிக்காட்டுகிறது. கடந்த வாரம் புதுடெல்லி வந்து பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு உறவுகள் தொடர்பாக விரிவான பேச்சு நடத்தினார். பொருளாதார, வளர்ச்சித் திட்டங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

ஒருபக்கம், இலங்கையில் சீனத்தின் பங்கேற்பு அதிகமாகிக்கொண்டே வருவதை இந்தியா கவனித்த படிதான் இருக்கிறது. எனினும், இரு நாடுகளும் கூட்டாகச் செயல்படுத்தக்கூடிய திட்டங்களைக் கை விடாமல் தொடர்ந்து செயல்படுத்திக்கொண்டிருக்கிறது. இலங்கையின் வளர்ச்சிப் பணிகளுக்கு 260 கோடி அமெரிக்க டாலர்களைத் தரவும் உறுதியளித்திருக்கிறது இந்தியா.

இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்கள், முஸ்லிம்களின் தேவைகளையும் உணர்ந்து அதற்கேற்ப இலங்கை அரசிடம் பேசிவருகிறது. இலங்கை ராணுவத்துக்கும் போராளிகளுக்கும் இடையிலான போர் முடிந்து எட்டு ஆண்டுகள் ஆன பிறகும் தமிழர்களுடைய பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. அவர்களிட மிருந்து பறிக்கப்பட்ட காணிகளைத் திரும்பத் தந்து மீள்குடியேற்றம் செய்வதிலும், அகதிகளாக முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை ஒருங்கே அளிப்பதிலும் வேகம் போதவில்லை.

மர்மமான முறையில் காணாமல்போன தங்கள் உறவினர்கள் குறித்து இலங்கைத் தமிழர்கள் தொடர்ந்து கவலை தெரிவித்துவருகின்றனர். தங்கள் நிலங்களை ராணுவம் விரைவாகத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். இலங்கையின் அனைத்து மக்களுக்கும் சமமான அரசியல் உரிமைகளை அளிக்க புதிய அரசியல் சட்டத்தை வகுக்கும் பணியில் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவும் பிரதமர் விக்ரமசிங்கேவும் மிகவும் கவனமாகச் செயல்படுகின்றனர்.

இலங்கையின் வட பகுதியில் மக்களுடைய வாழ்க்கைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டும் நடவடிக்கை களில் இந்தியா முனைப்புக் காட்ட வேண்டும். மீன்பிடிக்கும் இடம் தொடர்பாக இந்திய மீனவர்களுக்கும் இலங்கைத் தமிழ் மீனவர்களுக்கும் இடையே தொடர்ந்து சச்சரவு ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. காணாமல்போன தங்களுடைய உறவினர்கள் குறித்து இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்ந்து குரல் எழுப்பிவருகின்றனர். மத்திய அரசு இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.

போரின்போதும் போருக்குப் பிறகும் இலங்கையின் வடக்குப் பகுதியில் பல தொழிற்சாலைகள் செயல்படாமல் முடங்கியிருக்கின்றன. அவற்றுக்கு முதலீடும் அரசின் கவனிப்பும் கிடைக்க வேண்டும். இலங்கையில் சீன ஆதிக்கம் குறித்து இந்தியா கவலைப்படுவதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால், கவலையுடன் நிறுத்திவிடாமல், இயன்றவரை எல்லாத் துறைகளிலும் இலங்கை அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். இலங்கையைத் தனக்குச் சமமான கூட்டாளியாக இந்தியா பாவித்தால், உறவு மேலும் வலுவடைந்து வளர்ச்சி பெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x