Published : 12 May 2017 08:50 AM
Last Updated : 12 May 2017 08:50 AM
நாடாளுமன்றத்தில் நிறைவேறியிருக்கும் எச்.ஐ.வி.- எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தல் மசோதா, இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பெரும் நம்பிக்கை அளிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். பாதிக்கப் பட்டவர்களுக்கு மருந்துகளும் சிகிச்சையும் இலவசமாகக் கிடைக்கும் என்பதை இம்மசோதா உறுதிப்படுத்தவில்லை. எச்.ஐ.வி. அல்லது எய்ட்ஸ் பரவுவதைத் தடுப்பதற்கான எல்லா நடவடிக்கைகளையும் எடுப்போம் என்ற உறுதியும் இந்த மசோதாவில் காணப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை பெறும் உரிமை வலியுறுத்தப்படவில்லை.
அதேசமயம், நல்ல விஷயங்களும் இல்லாமல் இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கான சுகாதார உரிமைகளை இம்மசோதா வலியுறுத்துகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதார சேவை, சொத்துகளை வாடகைக்குப் பெறுதல், காப்புறுதித் திட்டத்தில் சேர்வது போன்றவற்றில் எச்.ஐ.வி.-எய்ட்ஸ் பாதிப்புள்ளோருக் குள்ள உரிமைகளையும் வாய்ப்புகளையும் மறுக்கக் கூடாது என்கிறது இம்மசோதா. இந்த மசோதாவின் நோக்கத்தை நிறைவேற்றும் பொறுப்பு மாநில அரசுகளின் வசம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது என்று சொல்லலாம். எச்.ஐ.வி.-எய்ட்ஸ் பாதிப்புக் குள்ளானோருக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதார வசதிகள் போன்றவை கிடைப்பதில் பிரச்சினைகள் இருக்கின்றனவா என்று பார்த்து, புகார்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க ஒவ்வொரு மாநிலத்திலும் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட சுயேச்சை அதிகாரமுள்ள அதிகாரிகளை நியமிக்க வேண்டும். புகார்களைப் பெற்றதும் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்கிறது இம்மசோதா.
இந்தியாவில் எச்.ஐ.வி. நோய்த்தொற்று அறிகுறி உள்ளவர்கள் எண்ணிக்கை 21 லட்சத்துக்கும் மேல் என்று மதிப்பிடப்பட்டிருக் கிறது. 2015-ல் வெளியிடப்பட்ட தரவுகளின்படி எச்.ஐ.வி. தொற்று நோய் இருப்பதாக அடையாளம் காணப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர், ஏழு மாநிலங்களில் இருக்கின்றனர். மூன்று மாநிலங்களில் தலா ஒரு லட்சம் பேருக்கும் மேல் இருக் கின்றனர். 2030-க்குள் எய்ட்ஸ் இல்லாமலேயே செய்துவிட வேண்டும் என்பது தேசிய இலக்காகும். ஐ.நா. சபையின் நீடித்த வளர்ச்சி இலக்கும் இதுதான்.
எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளானவர்களுக்குக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர உரிமை வழங்கப்படும் என்பது இந்த மசோதாவின் முக்கியமான அம்சம். புதிய நோயாளிகள் ஏற்படாமல் தடுப்பதற்கு அனைவருக்கும் இலவச சிகிச்சை கட்டாயமாகும். இதற்காகத் தனி காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கி, பொது நிதியை அதற்கு அளித்துச் செயல்படுத்தலாம். பாதிக்கப்பட்டவர்கள் கல்வி பயில, தொழில்திறனை வளர்த்துக்கொள்ள, நல்ல வேலை வாய்ப்பைப் பெற மசோதாவில் முற்போக்கான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதேசமயம், இந்தச் சட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட வழிகாட்டிக் குறிப்புகளை மத்திய அரசு வகுக்க வேண்டும். சுயேச்சையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்பதும், குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிக்கை வேண்டும் என்பதும் மாநில அரசுகள் செயல்பட்டாக வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தும்.
எச்.ஐ.வி. மருந்துகள் மீதான காப்புரிமையை, அற்பமான காரணத்துக்காக உற்பத்தி நிறுவனங்கள் நீட்டித்துக் கொண்டே இருக்காமலிருக்க உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டியது விஷயம். இந்த மசோதா எல்லா தேவைகளையும் பூர்த்திசெய்து விடாது. ஆனால், மேற்சொன்ன பலன்கள் கிடைக்க சில சாத்தியக்கூறுகளை அது உருவாக்கியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT