Published : 02 May 2017 08:54 AM
Last Updated : 02 May 2017 08:54 AM

திட்டங்கள் இனி வெறும் கனவுகளா?

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கூடிய நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தின் முடிவுகள் ஏமாற்றம் தருகின்றன. தலைநகர் டெல்லியில் நிதி ஆயோக் அமைப்பின் நிர்வாகக் குழு கூடிய போது, புதிய திட்ட அணுகுமுறை விவாதித்து இறுதி செய்யப்பட்டுவிடும் என்றும் திட்டமிடலில் புதிய அரசின் அணுகுமுறை என்னவென்று தெரிந்துவிடும் என்றும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த எதிர்பார்ப்புகள் பூர்த்திசெய்யப்படவில்லை.

மாறாக, 2019-20 வரையிலான அடுத்த மூன்று ஆண்டுகளுக் கான வரைவு செயல்திட்ட அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், அடுத்தடுத்து செய்ய வேண்டியவை என்று 300 அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு, கழிப்பறை, சமையல் எரிவாயு, சொந்த வாகனம், மருத்துவ சேவை, அனைவருக்கும் கல்வியறிவு வழங்கப்படுவது லட்சியம் என்கிறது அறிக்கை. ஆண்டுக்கு 8% என்ற விகிதத்தில் பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்ற உத்தேசத்தில் 2031-32-வது ஆண்டில் நம்முடைய பொருளாதாரத்தின் மதிப்பையும் நபர்வாரி வருமானத்தையும் உத்தேசமாகக் கணக்கிட்டிருக்கிறது நிதி ஆயோக். இந்த உத்தேசக் கணக்குகளை சீனாவின் கடந்த 15 ஆண்டுகால வளர்ச்சி வீதக் கணக்குடன் ஒப்பிட்டிருப்பதுதான் வினோதம். அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவின் ஜிடிபி மதிப்பு ரூ.332 லட்சம் கோடியாக உயரும் என்று நிதி ஆயோக் எதிர்பார்க்கிறது. ஆனால், 15 ஆண்டுகளுக்கான எதிர்காலத் திட்ட அறிக்கை, நல்ல நம்பிக்கையில் மேற்கொள்ளப்பட்ட கூட்டல், பெருக்கல் கணக்காகவே இருக்கிறது.

மேலும், ஏழாண்டு கால வளர்ச்சி உத்தி என்ன என்று தெரிவிக்கப்படாமல் மர்மமாகவே இருக்கிறது. நீண்ட காலத் திட்டத்துக்குத் தொலைநோக்கு முன்தயாரிப்புகள் இல்லாமல் அறிக்கைகளைத் தயாரிப்பது பலன் தராது. இதற்கு நிர்வாகக் குழு ஏற்று ஒப்புதல் அளிக்கும் வரையில், இந்தியாவின் கொள்கை வகுப்புக் கட்டமைப்பில் வெற்றிடம் இருந்துகொண்டே இருக்கும்.

மாநில அரசுகள் மூலதனச் செலவை அதிகப்படுத்த வேண்டும், அடித்தளக் கட்டமைப்புகளுக்கு அதிகம் செலவிட வேண்டும் என்கிறார் பிரதமர் மோடி. பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிட மத்திய அரசு மட்டும் முதலீடுகளை அதிகப்படுத்தினால் போதாது. எல்லா மாநில அரசுகளும் அதை மேற்கொள்ள வேண்டும். அதேபோல், ஏப்ரலில் தொடங்கி மார்ச்சில் முடியும் நிதி ஆண்டையும் இனி ஜனவரி தொடங்கி டிசம்பரில் முடியும் காலண்டர் ஆண்டுக்கு இணையாக மாற்றிவிடுமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டிருப்பது வழக்கத்துக்கு மாறாக இருக்கிறது. இத்தகைய மாற்றங்களை முதலில் மத்திய அரசுதான் மேற்கொண்டு முன்மாதிரியாக நடந்துகாட்ட வேண்டும்.

கூட்டுறவுக் கூட்டாட்சி என்ற மோடியின் தத்துவம் வலுப்பெற வேண்டும் என்றால், அனைத்து மாநில முதலமைச்சர்களையும் உறுப்பினர்களாகக் கொண்ட இந்தப் பேரவை அடிக்கடி கூட வேண்டும். மோடி பிரதமராகி இந்த அவை ஏற்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் கூடுகிறது. இதெல்லாம் கூட்டுறவுக் கூட்டாட்சி வலுப்பட வழிவகுக்காது. மத்திய அரசு தனது வழிமுறைகளை மாற்றிக்கொண்டே ஆக வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x