Published : 22 Dec 2016 10:15 AM
Last Updated : 22 Dec 2016 10:15 AM
உண்மையை மறைக்க உச்ச நீதிமன்றத்திடம் பசப்பலான வார்த்தைகளைக் கூறுவது ஆபத்தானது என்பதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் அதன் தலைவர் அனுராக் தாக்கூரும் உணர்ந்திருக்க வேண்டும். வேண்டுமென்றே உண்மைகளை மறைத்தது, நீதிமன்றத்தை அவமதித்தது ஆகிய இரு குற்றங்களை தாக்கூர் செய்திருக்கிறார் என்பதை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு முதல் நோக்கில் தெரிந்துகொண்டுவிட்டது.
நீதிபதி லோதா தலைமையிலான குழு, வாரியத்தின் நிர்வாகத்தைச் சீரமைக்கச் செய்த பரிந்துரைகளை அமல்படுத்த வாரியம் தயங்குவது மட்டுமல்ல, இன்னொரு அம்சமும் இதில் இருக்கிறது. கிரிக்கெட் வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களின் வரவு - செலவுக் கணக்குகளைச் சரிபார்க்க நாட்டின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் சொல்பவரைப் பார்வையாளராக ஏற்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இதையும் வாரியம் விரும்பவில்லை. இதை அரசின் தலையீடாகச் சித்தரிக்க, சர்வதேச கிரிக்கெட் பேரவையிடமிருந்து ஒரு கடிதத்தைக் கேட்டிருந்தார் அனுராக் தாக்கூர். இதற்காக துபாயில் இருந்த ஐசிசி தலைவர் சசாங்க் மனோகரை 2016 ஆகஸ்டில் அணுகினார்.
இப்படி ஒரு முயற்சி நடந்ததை உச்ச நீதிமன்றம் விரும்பவில்லை. தான் பிறப்பித்த உத்தரவுகளுக்குப் பதில் நடவடிக்கை எடுக்காமல், பிரச்சினையை வேறு விதமாகச் சித்தரிக்க முயலும் போக்கை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொண்டது. ஆனால், தாக்கூரோ அப்படி எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று மறுத்தார்.
உண்மை என்ன என்பதை சசாங்க் மனோகர் போட்டு உடைத்திருக்கிறார். இப்போது அனுராக் தாக்கூருக்கு இரண்டு வழிகள்தான் உள்ளன. உண்மையை ஒப்புக்கொண்டு, உச்ச நீதிமன்றத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது நீதிமன்ற அவமதிப்புக்காகவும் உண்மையை மறைத்ததற்காகவும் நீதிமன்றம் விதிக்கும் தண்டனையை ஏற்க வேண்டும்.
அனுராக் தாக்கூர் மன்னிப்பு கோருவது மட்டுமல்ல, இதர நிர்வாகிகளும் கிரிக்கெட் வாரியத்தின் மீதான கட்டுப்பாட்டை இழக்கக் கூடிய நிலையும் ஏற்பட்டிருக்கிறது. தங்களுடைய நிர்வாகத்தில் யாரும் தலையிடுவதையோ, தங்களைக் கண்காணிப்பதையோ விரும்பவில்லை என்பதை உச்ச நீதிமன்றத்துக்குப் பல வழிகளில் உணர்த்திவருகிறது கிரிக்கெட் வாரியம். எனவே, அதன் முயற்சிகளைத் தடுப்பதையும், எதிர்ப்பதையும் செய்துகொண்டிருக்கிறது என்று பார்ப்பவர்கள் நினைக்கும் வகையில் நடந்துகொள்கிறது.
உச்ச நீதிமன்றம் நியமித்த குழு பரிந்துரைத்ததைப் போல, புதிய நியதிகளை மாநில கிரிக்கெட் சங்கங்களைக் கடைப்பிடிக்க வைக்க முடியாது என்று கிரிக்கெட் வாரியம் கூறுகிறது.
நீதிமன்றத் தீர்ப்பை ஏற்கிறோம் என்று கூறிவிட்டு, உச்ச நீதிமன்றத்துடனான நேரடி மோதலை கிரிக்கெட் வாரியம் தவிர்த்திருக்கலாம். தாக்கூர் மன்னிப்பு கேட்பதும் வாரியம் புதிய பரிந்துரைகளை முழு மனதாக வரவேற்றுச் செயல்படுத்துவதும் மட்டுமே இதிலிருந்து மீள்வதற்கான வழிகளாகும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT