Published : 21 Dec 2016 08:58 AM
Last Updated : 21 Dec 2016 08:58 AM

பேரிடர்களை எதிர்கொள்ள இன்னும் நாம் பழகவில்லை!

டிசம்பர் 2015-ல் பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ளத்தைத் தொடர்ந்து, 2016 டிசம்பரில் இன்னொரு அழிவைக் கொண்டுவந்து சேர்த்துவிட்டுப் போயிருக்கிறது வார்தா புயல். நூற்றாண்டு துயரமான முந்தைய ஆண்டு பெருவெள்ளத்துடன் ஒப்பிட முடியாது என்றாலும், கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்குப் பின் சென்னை எதிர்கொண்ட பெரும் புயலான வார்தா உண்டாக்கிய பாதிப்புகளும் சாதாரணமானவை அல்ல.

புயலின் வேகத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சென்னை மற்றும் சுற்றுவட்டப் பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்தது இந்தப் புயலின் பாதிப்புகளிலேயே மிக மோசமானது என்று சொல்லலாம். புயல் அடித்த அன்று சென்னையின் உள்கட்டமைப்பு முற்றிலுமாக ஸ்தம்பித்தது. பெரும்பான்மை இடங்களில் மின்சாரம், தொலைத்தொடர்பு வசதிகள் செயலிழந்தன. சாலைகளில் தடைகள் ஏற்பட்டு, போக்குவரத்து நின்றுபோனது. சென்னை நகரத்தையே ஒரு போர்வையைப் போல இருள் மூடிவிட்டது. புயலுக்கு ஒரு வாரத்துக்குப் பின்னரும், புறநகர்ப் பகுதிகளில் இன்னமும் மின்சார விநியோகம், குடிநீர் விநியோகம் சீரடையவில்லை என்பது பாதிப்புகளின் தீவிரத்தை உணர்த்தக் கூடியவை.

2015 பெருவெள்ளத்தின்போது கடும் விமர்சனத்துக்குள்ளான அரசும் நிர்வாகமும் இம்முறை கொஞ்சம் கவனத்துடனேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. பொதுமக்களும் சமூக வலைதளங்களில் முன்கூட்டிய எச்சரிக்கைகளையும் வழிகாட்டல்களையும் பகிர்ந்துகொண்டனர். அதிகாரிகள் மட்டத்திலும் மக்கள் மத்தியிலும் வேகமாகப் பரிமாறிக்கொள்ளப்பட்ட செய்திகள், பேரிடரின் விளைவுகளைச் சமாளிக்க உதவின. உயிரிழப்புகள் கணிசமாகத் தவிர்க்கப்பட்டன. புயலுக்குப் பின் அரசின் மீட்பு நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கின. சாத்தியமான இடங்களில் எல்லாம் உடனே போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது; நகருக்குள் அடுத்தடுத்த நாட்களிலேயே மின் விநியோகம் வந்தது. எனினும், இந்நடவடிக்கைகள் போதுமானவையா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

புயலுக்கான எச்சரிக்கை வந்தபோது, அதற்கான முன்தயாரிப்பைக் காட்டிலும் வெள்ளத்தை எதிர்கொள்வதற்கான ஆயத்த நடவடிக்கைகளிலேயே அரசு நிர்வாகம் இருந்ததைப் புயலுக்குப் பின்னர் தெரிந்துகொள்ள முடிந்தது. அதிர்ஷ்டவசமாகப் புயலையொட்டி தொடர் மழை, வெள்ளம் ஏற்படவில்லை. ஒருவேளை அப்படி ஏற்பட்டிருந்தால், அதை எப்படிச் சமாளித்திருப்போம் என்ற கேள்விக்கும் திருப்தியான பதிலை நாம் பார்க்கும் சூழலிலிருந்து பெற முடியவில்லை.

வெப்ப மண்டலச் சூறாவளிகள் வருடந்தோறும் உருவாகிறவை. கிழக்குக் கடற்கரையை அவை தொடர்ந்து தாக்குகின்றன. 1891 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் 262 புயல்கள் உருவாகியுள்ளன. அவற்றில் 92 புயல்கள் தீவிரமாகத் தாக்கியுள்ளன. ஒவ்வொரு பேரிடரையும் முன்னேறிய நாடுகள் பெரும் பாடங்களாகவே எடுத்துக்கொள்கின்றன. நம்மிடையே நிலவும் சூழல் ஏமாற்றத்தையே அளிக்கிறது. ஒரு பேரிடரை எதிர்கொள்ளத் தயாராவது என்பது, அந்தக் காலகட்டத்தில் தயாராவது அல்ல; முன்கூட்டியே கற்பனைசெய்வது, எந்தச் சூழலிலும், எதற்கும் தயாரான குழுக்களைக் கைகளில் வைத்திருப்பது, முடிந்த அளவுக்குச் சேதங்களைக் குறைக்கப் போராடுவது. நம் ஆட்சியாளர்கள் இன்னும் நிறையப் பயணிக்க வேண்டியிருக்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x