Published : 19 Dec 2016 09:22 AM
Last Updated : 19 Dec 2016 09:22 AM
இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளின் மொத்த எண்ணிக் கையில் பெண்களின் சதவீதம் குறைந்திருக்கிறது என்கிறது மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான தலைமைப் பதிவாளர் அலுவலகம். ஆண் குழந்தை வேண்டும் எனும் ஆர்வம் உள்ளிட்ட காரணங்களின் விளைவு இது. வளர்ச்சிப் பாதையில் முன்னேறும் இந்தியாவில் நிலவும் கொடூரமான முரண்பாடு இது. நாளுக்கு நாள் இந்தப் போக்கு அதிகரிப்பதைச் சமீபத்திய ஆய்வுத் தரவுகள் சொல்கின்றன.
2013-ல் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 898 பெண் குழந்தைகள் என்றிருந்த விகிதாச்சாரம் 2014-ல் மேலும் நலிந்திருக்கிறது. பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 887 ஆகக் குறைந்திருக்கிறது. ஆறு வயது வரையான குழந்தைகளின் எண்ணிக்கை, குறிப்பிட்ட சில மாவட்டங்களில் தேசியச் சராசரியைவிடக் குறைவாக உள்ளது. இது தொடர்பான வழக்குகளை விசாரிக்க நேரும்போதெல்லாம், உச்ச நீதிமன்றம் பெண் குழந்தைகளுக்கு எதிரான சூழல் இருப்பதை நம் கவனத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளும், “ஆண் குழந்தைகளைவிடப் பெண் குழந்தைகள் சுமையாகப் பார்க்கப்படுகிற மனப்போக்கின் காரணமாகவே பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துவருகிறது” என்பதைச் சொல்லியிருக்கின்றன.
இந்த நெருக்கடியை எதிர்கொள்ள பாஜக அரசு முன்னெடுக்கும், ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம்’ (பேட்டி பச்சாவ், பேட்டி படாவ்) போன்ற பிரச்சாரங்கள், முழக்கங்கள் உள்ளபடி இந்த விஷயத்தின் தீவிரத்தை அரசு எந்த அளவுக்கு உணர்ந்திருக்கிறது எனும் கேள்வியையே எழுப்புகிறது. பாலினம் பார்த்துக் கருச்சிதைவு செய்வதைத் தடுத்தல், பெண் குழந்தைகளுக்கான கல்வி வாய்ப்புகளையும் பாதுகாப்புகளையும் உருவாக்குவது இத்தகைய செயல்திட்டங்களின் நோக்கம் என்றாலும், சமூகத்தில் இவை உண்மையாகவே ஏற்படுத்திவரும் தாக்கம் என்ன என்பதை ஆய்வுக்குள்ளாக்க வேண்டியிருக்கிறது.
2014 வருடக் கணக்கெடுப்பில், சமூக வளர்ச்சியில் பலமான அடித்தளம் கொண்ட, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள்கூட 1,000 ஆண் குழந்தைகளுக்கு 834 பெண் குழந்தைகள் என்ற நிலைக்குச் சரிந்துபோனது ஏன் என்பதை விரிவாக ஆராய வேண்டிருக்கிறது என்றாலும், இந்த விஷயத்தில் தமிழகத்திடமிருந்து மத்திய அரசு கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. பெண் குழந்தைகள் மறுமலர்ச்சிக்காக 24 ஆண்டுகளுக்கு முன்பே ‘தொட்டில் குழந்தைத் திட்டம்’ போன்ற முன்னோடிச் செயல்திட்டங்களைச் செயல்படுத்திய மாநிலம் இது. தமிழக அரசின் இத்திட்டத்தோடு ஒப்பிட்டால், மத்திய அரசின் இன்றைய திட்டம் எவ்வளவு வலுவற்று இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
கோஷங்களுக்கும் அப்பால் சிந்திக்க முதலில் மத்திய அரசு பழக வேண்டியிருக்கிறது. ஆணா, பெண்ணா என்பதைக் கருவிலேயே அறியும் சோதனைக்கான தடையைக் கறாராக அமலாக்குதல், பிறப்புகளைப் பதிவுசெய்வதை ஊக்கு விப்பதற்கான சலுகைகள், போதுமான மருத்துவப் பராமரிப்பு என மிக அடிப்படையான விஷயங்களையே மீண்டும் மீண்டும் பேசும் சூழலில் நாம் இருந்தால், இந்த விஷயத்தில் அரசால் அதன் இலக்கைச் சாதிக்க முடியாமல் போய்விடும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT