Published : 01 Nov 2016 08:42 AM
Last Updated : 01 Nov 2016 08:42 AM
டெபிட் கார்டு என்று அழைக்கப்படும் பண அட்டைகளின் ரகசியக் குறியீட்டு எண்கள் திருடப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக 641 பேர்தான் புகார்செய்திருக்கிறார்கள் என்றும், கையாடல்செய்யப்பட்ட தொகையும் ரூ.1.3 கோடிதான் என்றும் தெரியவந்திருக்கிறது. ஆனால், இப்படித் தங்களுடைய கணக்கிலிருந்து பணம் கழித்துக்கொள்ளப்படுவது குறித்து அங்கொன்றும் இங்கொன்றுமாக வாடிக்கையாளர்களிடமிருந்து புகார்கள் வந்த பிறகும்கூட விழித்துக்கொண்டு முழு வேகத்தில் நடவடிக்கை எடுக்க, வங்கித் துறைக்கு ஆறு மாதங்கள் பிடித்துள்ளன என்பதுதான் அதிர்ச்சி தரும் விஷயம்.
ஒரு தனியார் வங்கியின் ஏடிஎம் தான் இந்தக் குற்றத்தின் நுழைவுவாயிலாக இருந்திருக்கிறது என்று விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அந்த வங்கி மூன்றாவது நபர் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்குப் பணத்தை இட்டு நிரப்பி வந்திருக்கிறது. அரசின் சமூக - பொருளாதாரக் கொள்கைகளைச் சிறப்பாக அமல்படுத்தும் கருவியாக வங்கிக் கணக்குகள் பயன்பட்டுவருகின்றன. எனவே, இந்த நிர்வாகத்தில் அலட்சியமும் திறமைக் குறைவும் ஏற்பட்டுவிடாமல் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும் வங்கிகளைக் கண்காணிக்கும் அமைப்புக்கும் இருக்கிறது.
வங்கித் துறையில் கைக்கொள்ள வேண்டிய தொழில் நுட்பம் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியது கவனத்துக்குரியது. “நிதியமைப்பில் பணப்பட்டுவாடா என்பது தண்ணீரைக் கொண்டுசெல்லும் குழாயைப் போன்றது. குழாய்க்குள் அடைப்புகள் காரணமாகத் தண்ணீர் தேங்கிவிடவும் கூடாது, ஆங்காங்கே இணைப்புகளிலும் பொத்தல்கள் மூலமாகவும் கசிந்துவிடவும் கூடாது. குழாய் வழியே தண்ணீர் எப்படிப் போகிறது என்று நம்மால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. ஆனால், எதிர்பார்த்தபடி இறுதிப் பயன்பாட்டுக்குத் தண்ணீர் போதிய அளவு கிடைக்காமல் வழியில் எங்கோ கணிசமாகப் பொசிந்திருக்குமானால், இறுதிப் பயன்பாட்டுக்கு அதிகம் இருக்காது” என்று அவர் எச்சரிக்கையுடன் குறிப்பிட்டிருப்பதை மறந்துவிடக் கூடாது!
பணப் பரிமாற்றத்துக்கு நவீனத் தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிக்க முடிவுசெய்த வங்கிகள், தொடர்ந்து அதைக் கண்காணித்து மேம்படுத்திக்கொண்டிருக்க வேண்டும். அது எப்படிச் செயல்படுகிறது என்று உற்று நோக்கியபடி இருக்க வேண்டும். ‘கார்பனாக்’ சைபர் குற்றவாளிகள் கும்பல், உலக அளவில் 100-க்கும் மேற்பட்ட நிதிநிறுவனங்களின் வலைக் கட்டமைப்பில் ஊடுருவி, சுமார் ரூ.6,700 கோடிக்கும் மேற்பட்ட தொகையைக் கையாடல் செய்துவிட்டன. இன்றைய குற்றவாளிகள் கணினிப் பயன்பாட்டில் முன்னணியில் இருக்கின்றனர்!
கையாடல் தொடங்கிய பிறகு, சில மாதங்கள் கழித்தே வாடிக்கையாளர்கள் இதை உணர்ந்து வங்கிகளுக்குப் புகார் அளிக்கின்றனர். வங்கிகள் சுதாரித்து நடவடிக்கை எடுக்க மேலும் சில மாதங்களாகிவிடுகின்றன. வங்கிகளின் நிர்வாகங்கள் வாடிக்கையாளர்களுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வு ஊட்டுவதுடன், அடிக்கடி தேவைப்படும் அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் வழங்க வேண்டும். பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT