Published : 10 Nov 2016 08:58 AM
Last Updated : 10 Nov 2016 08:58 AM
இந்தியப் பொருளாதாரம் திகைப்போடு பார்த்துக்கொண்டிருந்த நாளாகிவிட்டது 2016 நவம்பர் 9.
முன்னதாக நவம்பர் 8 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின், இரவு 8 மணி அளவில் தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பு நாட்டு மக்களை அதிர்ச்சியிலும் திகைப்பிலும் ஆழ்த்தியது. "கருப்புப் பணத்துக்கு எதிராகவும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை ஒழிக்கவும் புதிய உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது” என்று தொடங்கிய மோடி, “நாடு முழுவதும் நவம்பர் 9 முதல் இப்போது புழக்கத்திலிருக்கும் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது. பொதுமக்கள் தங்கள் அடையாள அட்டைகளைக் காட்டி, தம் வசம் உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுகளை நவம்பர் 10 முதல் டிசம்பர் 30 வரை வங்கிகள், அஞ்சல் நிலையங்களில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம்" என்று அறிவித்தார்.
அடுத்த சில மணி நேரங்களில் தங்கள் வசமுள்ள பணம் மதிப்பற்ற காகிதமாகிவிடும் என்பதும் மறுநாள் வங்கிச் சேவையோ, தானியங்கி பணப் பட்டுவாடா மையச் சேவையோ கிடையாது என்பதும் மக்களைப் பதற்றத்தில் தள்ளியது. சாதாரண மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டார்கள். குறிப்பாக நேற்றைய தினத்தில் விசேஷங்களை வைத்திருந்தவர்கள், பயணத்தில் இருந்தவர்கள், இக்கட்டுகளில் சிக்கியவர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். ஒருபுறம் கள்ளப் பொருளாதாரத்தை ஒழிக்கும் நன்நோக்கத்தைக் கொண்ட நடவடிக்கை இதுவென்றாலும் மறுபுறம் நாட்டின் அமைப்புசாரா பொருளாதாரமும் இதில் சிக்கும் என்ற கவலையையும் புறக்கணிப்பதற்கு இல்லை.
இந்தியாவில் பிரதமரின் அறிவிப்பு அமலுக்கு வந்த அதே நள்ளிரவில், இந்தியப் பொருளாதாரத்தோடு மிக நெருக்கமான பிணைப்பிலிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கின. இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்க அறிவுலகம், ஊடகங்களில் தொடங்கி பெரும்பான்மையினர் மத்தியில் அதிருப்தியைச் சம்பாதித்திருந்த ட்ரம்ப் வெற்றி பெற்றிருக்கிறார். ஹிலாரி கிளின்டன்தான் ஜெயிப்பார் என்ற ஊடகங்களின் கருத்துக்கணிப்புகளையும் நம்பிக்கைகளையும் முற்றிலுமாக அவர் உடைத்தெறிந்திருக்கிறார். போர் ஆதரவாளராகத் தன்னை முன்னிறுத்திக்கொண்டவர் ட்ரம்ப். பிற்போக்குத்தன்மை கொண்டவராகவும், வெளிநாட்டினர், புலம்பெயர்ந்தோர் விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கக்கூட்டியவராகத் தன்னைக் காட்டிக்கொண்டவருமான ட்ரம்ப் அமெரிக்காவின் வேலைவாய்ப்புகள் அமெரிக்கர்களுக்கே எனும் குரலை எதிரொலித்தவர். அமெரிக்கப் பொருளாதாரம் இக்கட்டான சூழலில் இருக்கும் நிலையில், அதிபர் பொறுப்பேற்கும் ட்ரம்ப் இந்தியாவுடனான உறவை எப்படிக் கையாளுவார், இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கான வேலைவாய்ப்புகள் விவகாரத்தில் எத்தகைய முடிவுகளை எடுப்பார் எனும் அச்சம் கவிழ்ந்திருக்கிறது.
இந்த இரு நிகழ்வுகளுக்கும் இந்தியப் பொருளாதாரத்துக்கும் இடையேயான தொடர்பை இந்தியப் பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்கள் எதிரொலித்தன. உடனடியாக விளைவுகளை அறுதியிட்டுச் சொல்ல முடியாத இந்த இருவேறு நிகழ்வுகளும் என்னென்ன மாற்றங்களை உருவாக்கும் என்பதை நிறையவே விவாதிக்க வேண்டியிருக்கிறது. பொறுத்திருந்து பார்த்து விவாதிப்போம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT