Published : 21 Oct 2016 08:45 AM
Last Updated : 21 Oct 2016 08:45 AM
தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்சினையான காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்ற தமிழகத்தின் குரல் கிட்டத்தட்ட ஒன்றுபட்டு ஒலித்திருக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழகத்திடம் பாரபட்சமான அணுகுமுறையை வெளிப்படுத்திவரும் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், விவசாயிகளோடு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு சேர கை கோத்து நின்றது நல்ல தொடக்கம்.
முன்னதாக, அக்டோபர் 17,18 தேதிகளில் தமிழகம் முழுவதும் 48 மணி நேரத் தொடர் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது தமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் கூட்டியக்கம். இதற்கு ஆதரவு தெரிவித்து திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், மதிமுக, நாம் தமிழர் இயக்கம், மனிதநேய மக்கள் கட்சி என்று மாநிலத்தின் முக்கியமான எதிர்க்கட்சிகள் பலவும் களம் இறங்கின. தொடர்ந்து, அனைத்துத் தொழிற்சங்கங்கள், வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளும் களம் இறங்கின. புதுவைப் பிரதேசமும் மறியலில் பங்கேற்றது. மாநிலத்தின் முக்கியமான தலைவர்கள் பலரும் நேரடியாக மறியலில் இறங்கியதன் விளைவாகப் போராட்டம் பெரிய அளவில் தாக்கத்தை உண்டாக்கியது.
இந்தப் போராட்டத்தின் காரணமாக, 50-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது மாற்றுப்பாதையில் திருப்பியனுப்பப்பட்டன. சில ரயில்களை ரயில்வே நிர்வாகமே ரத்துசெய்யும் நிலை உருவானது. ஏறத்தாழ இரண்டு லட்சம் பேர் மறியலில் பங்கேற்றுள்ளதாகப் போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர். 50 ஆயிரம் பேர் வரை கைதாகியுள்ளனர் என்கிறது காவல்துறை. இந்தப் போராட்டம் தேசிய அளவில் கவனிக்கப்பட்டிருக்கிறது.
சமீப காலங்களில் குறிப்பிடத் தக்க ஒரு போராட்டமாக இதை உருவாக்கியதில் இதில் பங்கெடுத்த அனைத்துத் தரப்பினருக்குமே பங்கு இருக்கிறது. எனினும், விடுபடல்களும் தெரியாமல் இல்லை. ஆளும்கட்சிகளான அதிமுக, பாஜக இரண்டும் இந்தப் போராட்டங்களில் பங்கேற்கவில்லை. போராட்டத்தை அவை தவிர்த்த பின்னணி ஆச்சரியம் தரக்கூடியது அல்ல. விவசாயிகள் பிரச்சினைக்குத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் பாமக இந்தப் போராட்டத்தில் பங்கேற்காதது ஒரு குறை. அதேபோல, போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துவிட்டு பட்டும் படாமல் நடந்துகொண்ட காங்கிரஸின் செயல்பாடும் ஏற்கத்தக்கது அல்ல. மாநில நலன்சார் பிரச்சினைகளில் எல்லா வேறுபாடுகளையும் கடந்து கை கோப்பதற்குப் பழக தமிழகத்தின் சமகாலத் தலைவர்கள் இன்னும் நிறையப் பயணிக்க வேண்டியிருக்கிறது.
தமிழகத்தின் ஜீவாதார விவகாரங்கள் வெறுமனே போராட்டங் களால் மட்டுமே தீர்க்கப்படக்கூடியவை அல்ல. புதுப்புது யோசனைகளும் தொலைநோக்கிலான முயற்சிகளும் நிறைய தேவைப்படுகின்றன. அரசியல் துணிச்சல் மிக்க முடிவுகள் அவற்றுக்குத் தேவை. துணிச்சலான முடிவுகளுக்கு மக்களைத் தயார்படுத்த அரசியல் கட்சிகள் இடையே வேறுபாடுகளைக் கடந்த ஒற்றுமை வேண்டும். தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு செயல்பட நிறையத் தேவைகள் இருக்கின்றன. மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த ஒற்றுமை தொடரட்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT