Published : 18 Oct 2016 09:20 AM
Last Updated : 18 Oct 2016 09:20 AM

வதந்தி தடுப்பும் ஜனநாயகமும்!

தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக இதுவரை ஏழு பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்; 50-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவுசெய்யப் பட்டிருக்கிறது.

தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சில கேள்விகளை எழுப்புகின்றன.

வதந்தி எனும் வார்த்தையே அடிப்படையில் விஷம் தோய்ந்தது. உயிர் ஆபத்துகளை உண்டாக்கக் கூடியது. ஒருவரின் உடல்நிலை தொடர்பாகப் பொய்யான, மோசமான கருத்துகளைப் பரப்புதல் தனிநபர் உரிமை மீதான தாக்குதல். அரசியல் தலைவர்கள், அதிலும் ஆட்சியாளர்களின் உடல்நலன் என்பது நாட்டின் இயக்கத்தோடும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வோடும் பிணைக்கப்பட்டிருக்கும் சூழலில், இதுதொடர்பில் வதந்திகளை உருவாக்குவோரைக் குற்றப் பின்னணியில் அணுகுவதில் தவறேதும் இல்லை.

வன்மத்துடனும், உள்நோக்கத்துடனும் வதந்திகளை உருவாக்குவோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை வரவேற்கப்பட வேண்டியது. அதேநேரத்தில், ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வந்தடையும் வேகத்தில் அது உண்மையா, பொய்யா என்றே தெரியாமல் ஆர்வத்திலோ, பதற்றத்திலோ தன்னைச் சார்ந்தவர்களிடம் பகிர்ந்துவிடுவது பலரும் செய்துவிடுவது. வதந்திகளை உருவாக்கி, திட்டமிட்டுப் பரப்புவோருக்கும் தன்னையே அறியாமல் வதந்திக்கு இலக்காகிவிடுவோருக்கும் இடையே வேறுபாடு உண்டு. தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் இந்த வேறுபாட்டை அரசும் காவல் துறையும் உணர்ந்திருக்கின்றனவா எனும் கேள்வியை எழுப்புகிறது.

இரு உதாரணங்களைச் சொல்லலாம். கைது செய்யப்பட்டிருக்கும் ஏழு பேரில் ஒருவர், அப்போலோ மருத்துவமனை ஊழியர்போலக் குரல் மாற்றிப் பேசி, முதல்வர் உடல்நிலை தொடர்பாக மிக மோசமான தகவலைப் பரப்பியவர் என்று காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இது உண்மையென்றால், இப்படியானவர்களைக் கடும் நடவடிக்கைக்குள்ளாக்குவதில் எந்தத் தவறும் இல்லை. அதேசமயம், கோவை வங்கியில் முதல்வரின் உடல்நிலை தொடர்பாகப் பேசிக்கொண்டிருந்தார்கள் என்று அங்கு வந்த வங்கி வாடிக்கையாளரான ஆளுங்கட்சியின் பிரமுகர் அளித்த புகாரின்பேரில் வங்கி ஊழியர்கள் இருவரைக் காவல் துறையினர் கைதுசெய்திருக்கிறார்கள். இது அப்பட்டமான மனித உரிமை மீறல்.

முதல்வர் என்பவர் ஒரு மாநிலத்தின் அனைத்து மக்களின் பிரதிநிதி. அவரைத் தம் குடும்பத்தில் ஒருவராகப் பாவிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். அவர் தொடர்பான எந்தச் செய்தியும் மக்கள் மத்தியில் விவாதமாவது இயல்பு. இந்த விஷயத்தில் ஆரம்பத்திலிருந்தே முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியாக இதுவரை வெளிப்படையாக எதையும் பேசாத அரசுத் தரப்பும் ஒரு காரணம் என்பதை மறந்துவிட இயலாது. அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைப்போரின் வாயை அடைக்கும் அச்சுறுத்தல் நடவடிக்கையாக இது சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டுவருவதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். காவல் துறையினர் நடவடிக்கைகளில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசத் தொடங்கியிருப்பதையும் இது ஜனநாயக விரோத நடவடிக்கை என்று அறிவுலகத்தினர் தெரிவித்திருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வதந்தி, விஷமிகளின் பெயரால் ஜனநாயகம் பாதிக்கப்படக் கூடாது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x