Published : 14 Oct 2016 09:44 AM
Last Updated : 14 Oct 2016 09:44 AM
தங்க இறக்குமதி இந்த ஆண்டு குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016-ன் முதல் 9 மாதங்களில், தங்க இறக்குமதி கிட்டத்தட்ட 59% அளவுக்குச் சரிந்திருக்கிறது.
இந்த ஆண்டு இறுதியில் மொத்தத் தங்க இறக்குமதி 400 டன்னாக இருக்கக் கூடும். நெருக்கடியான ஆண்டாகக் கருதப்படும் 2010-12-ல் 1,000 டன்னாக இறக்குமதி இருந்தது. அப்போது நடப்புக் கணக்குப் பற்றாக்குறை உச்சத்துக்குச் சென்றது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை என்பது ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரிப்பால் ஏற்படும் பற்றாக்குறையாகும். இந்தியாவில் ஆண்டுதோறும் இறக்குமதியில் பெரும் பங்கை வகிப்பது கச்சா பெட்ரோலியமும் தங்கமும்தான்.
இந்த நிலை இப்படியே நீடிக்குமா, தங்க இறக்குமதியை அரசு விரும்பும் வகையில் கட்டுப்படுத்திக் குறைத்துவிடுமா என்பது போகப்போகத்தான் தெரியும். அதேசமயம், இந்த ஆண்டு ஏன் இந்த அளவுக்குக் குறைந்தது என்பதை அறிவதும் நல்லது. வங்கிகளும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களும் வெளிநாடுகளில் தங்கம் வாங்கி அதை இந்தியாவுக்குக் கொண்டுவருவது உண்டு. இந்த ஆண்டு அவை தங்கக் கொள்முதலைக் குறைத்துக்கொண்டிருக்கின்றன. நகை வியாபாரிகள் தங்கம் வாங்குவதைக் குறைத்துக்கொண்டுள்ளனர். தங்கம் விலை அதிகரித்துள்ளதால், ஏற்கெனவே கையிருப்பில் பழைய தங்கத்தை நகைகளாக வைத்திருந்தவர்கள் அதை விற்றுச் சிறிது லாபம் சம்பாதிக்க முற்பட்டதால் நகை செய்வதற்கு உள்நாட்டிலேயே தங்கம் கிடைத்துவிட்டது. இது தவிர, கிராமப்புறங்களில் விவசாய வருமானம் குறைந்ததால், உள்நாட்டில் தங்கம் வாங்குவோர் கணிசமாகக் குறைந்திருக்கின்றனர். இதனால் மட்டுமே 20% அளவு தங்கத்துக்கான கிராக்கி குறைந்திருக்கிறது. இன்னும் வருமான வரித் துறை நடவடிக்கைகள், மத்திய அரசின் நிபந்தனைகள் என்று நிறைய காரணங்கள் இதன் பின்னணியில் இருக்கின்றன.
மக்களின் சேமிப்புடன் கலாச்சாரரீதியாகத் தொடர்புள்ள தங்க வணிகம் சார்ந்த எந்த ஒரு முடிவும் நம்முடைய அரசு கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்பதை விவரிக்க வேண்டியதில்லை. ரூ. 2.5 லட்சம் கோடி விற்றுமுதல் மதிப்புள்ள துறை இது. இப்போது உருவாகியிருக்கும் சூழலின் பின்னணியில், இறக்குமதியைக் குறைத்துக்கொண்டே தங்க வணிகத்தை மேலே உயர்த்துவது என்பதைப் பற்றி நாம் யோசிக்க வேண்டும். தங்க வணிகத்தில் அரசு புதிய கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் மூலம் தடைகளை உருவாக்கிவிடக் கூடாது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை இப்போதுள்ள 10% என்ற அளவிலிருந்து குறைக்கலாம். தங்கத்தை அப்படியே விலைக்கு வாங்காமல் தங்கப் பத்திரம் மூலம் வாங்கும் திட்டத்தை மேலும் எளிமைப்படுத்தி, ஊக்குவிக்க வேண்டும். வங்கிகளில் தங்கம்சார் புதுப்புதுத் திட்டங்களை நாம் எவ்வளவுக்கு எவ்வளவு யோசிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு உள்நாட்டு இருப்பிலிருந்தே தங்க முட்டைகள் நமக்கு உற்பத்தியாகும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT