Published : 31 Oct 2016 08:47 AM
Last Updated : 31 Oct 2016 08:47 AM
ஒடிஷாவின் மல்காங்கிரி மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் மீது ஆந்திர - ஒடிஷா கூட்டுப் பாதுகாப்புப் படையினர் அக்டோபர் 24 அன்று நடத்திய தாக்குதலில் அந்த அமைப்பைச் சேர்ந்த 28 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதே பகுதியில் கடந்த வியாழக் கிழமை நடந்த மற்றொரு சம்பவத்தில் மேலும் இரண்டு மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர். மல்காங்கிரி மாவட்டத்தில் 2013 செப்டம்பரில் நடந்த மோதலில் 13 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதற்கு முன் 2008 ஜூனில் இதே மாவட்டத்தில் படகில் சென்ற நக்சல் எதிர்ப்புக் காவல் படையினர் மீது மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் காவலர்கள் தரப்பில் 38 பேர் இறந்தனர்.
இங்கே இரு தரப்பினரின் பெயர்களையும் காவல் படையினர், மாவோயிஸ்ட்டுகள் என்றெல்லாம் பிரித்துச் சொன்னாலும், அடிப்படையில் அவர்கள் ஒரு தாயின் பிள்ளைகள். இந்நாட்டின் குடிமக்கள். அதிலும் மாவோயிஸ்ட்டுகளின் படையில் ஆகப் பெரும்பான்மையினர் இந்நாட்டின் எல்லா வளர்ச்சியிலும் பெருமளவில் புறக்கணிப்பில் இருக்கும் பழங்குடியின மக்கள். இந்தப் போரின் அடித்தளமே ஏழ்மையிலும் புறக்கணிப்பிலும் இருக்கிறது என்பதை அரசுத் தரப்பு உணர வேண்டும். பல வகைகளில் எதிர்கொள்ளப்பட வேண்டிய விவகாரம் இதுவென்றாலும், அரசியல்ரீதியிலான அணுகுமுறைகளுக்குக் கூடுதல் கவனம் அளிக்கப்பட வேண்டும்.
மாவோயிஸ்ட்டுகள் இப்போது வலுவிழந்துவருகிறார்கள். ஒருபுறம் படை பலம் சரிய, மறுபுறம் மக்களிடையிலும் செல்வாக்கு இழந்துவருகிறார்கள். பழங்குடிப் பகுதிகளுக்கு வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டுசெல்வது, நக்சல்களைப் படை பலத்துடன் ஒடுக்குவது என்ற இரட்டை நோக்கோடு மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகிறது. இதில் முழு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், அரசுத் தரப்புக்கு ஓரளவுக்குப் பலன் கிடைத்திருக்கிறது. மாவோயிஸ்ட்டுகள் ஏராளமானோர் சரணடைந்திருக்கிறார்கள். மாவோயிஸ்ட்டுகளின் பழைய தாக்குதல் உத்திகள் எடுபடுவதில்லை. அரசுத் தரப்பில் ஆளற்ற சிறு விமானங்கள் போன்ற தொழில்நுட்பச் சாதனங்கள் வசதி, போக்குவரத்து வசதிகளின் மேம்பாடு, காவல் படைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவை மாவோயிஸ்ட்டுகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றன.
மக்களிடையிலும் முடிவற்ற வன்முறைச் சூழல் பெரும் அதிருப்தியையும் சோர்வையும் உருவாக்கியிருக்கிறது. எல்லோருமே அமைதியை விரும்புகின்றனர். இந்தச் சூழலை ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்திக்கொள்ள அரசு முனைய வேண்டும். அமைதிப் பேச்சுக்கு மாவோயிஸ்ட்டுகளுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். மாவோயிஸ்ட்டுகளும் காடுகளிலிருந்து வெளிப்பட்டு, ஆயுதங்களைக் கைவிட்டு பொதுச் சமூகத்துடன் கை கோப்பதற்கான பாதையை நோக்கி நகர வேண்டும். தேர்தல் ஜனநாயகப் பாதையை வரித்துக்கொள்ள வேண்டும்.
அமைதியையும் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையுமே பழங்குடிகள் விரும்புகின்றனர். அவர்கள் மீதான அக்கறையைக் காட்டவும் கடந்த காலத் தவறுகளிலிருந்து விடுபடவும் இந்தத் தருணத்தை இரு தரப்புமே பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT