Published : 07 Oct 2016 09:13 AM
Last Updated : 07 Oct 2016 09:13 AM
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மீண்டும் விழுந்திருக்கும் முட்டுக்கட்டை விரக்தியை நோக்கித் தள்ளியிருக்கிறது.
காவிரி நீர்ப் பங்கீடு பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, காவிரி மேலாண்மை வாரியம் எப்போதோ அமைக்கப்பட்டிருக்க வேண்டும். பத்தாண்டுகளில் உருவாகிவந்த இப்போதைய வாய்ப்பும் சரியான பாதையில் செல்வதாகத் தெரியவில்லை.
நான்கு வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 30-ம் தேதி உத்தரவிட்டது. அத்துடன், நான்கு வார காலத்துக்குள் இதுதொடர்பாக அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டது. அப்போது அதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசின் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, “அக்டோபர் 4-க்குள் மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்” என்று கூறினார். அத்துடன், “தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி மாநிலங்கள் தங்கள் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார். அதன்படி, தமிழகத்தின் பிரதிநிதியாக காவிரி தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டார்.
எல்லாம் கூடிவருகிறது என்று தமிழகம் நம்பி யிருந்தது. ஆனால், “நடுவர் மன்ற இறுதி உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மனு, மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணையில் இருக்கும் நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, உதய் லலித் ஆகியோர் அடங்கிய இரண்டு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு செல்லாது” என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துவிட்டது.
மேலும், “காவிரி மேலாண்மை வாரியத்தை நாடாளுமன்றச் சட்டத்தின் வாயிலாகவே அமைக்க முடியும் என்றும், இவ்விவகாரத்தில் மத்திய அரசை உச்ச நீதிமன்றம் நிர்ப்பந்திக்க முடியாது” என்றும் தெரிவித்தது. இதையடுத்து, மேலாண்மை வாரியம் அமைக்கப் பிறப்பித்த தனது உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்திருக்கிறது.
தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை கர்நாடக அரசு மதிப்பதேயில்லை. மத்திய அரசாலும் இந்த விவகாரத்தில் அரசியல் கணக்குகளைத் தாண்டி, நியாயமான மத்தியஸ்தராக நடந்துகொள்ள முடியவில்லை. இந்தச் சூழலில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருந்தால், இந்தப் பிரச்சினையில் சுமுகமான ஒரு தீர்வு உருவாகியிருக்கும். காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான முடிவுகள் வாரியத்தின் கட்டுப்பாட்டில் வந்திருக்கும். எந்தப் பாரபட்சமும் இல்லாமல் எல்லாக் காலங்களிலும் நீர்ப் பகிர்வை அது மேற்கொண்டிருக்கும்.
ஆனால், ஒரு வரலாற்று வாய்ப்பை நழுவவிட்டிருக்கிறது அல்லது தள்ளிப்போட்டிருக்கிறது மோடி அரசு. தமிழகத்துக்கு மட்டும் அல்ல; கூட்டாட்சித் தத்துவத்துக்கும் இழைக்கப்படும் அநீதி இது. தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து களம் இறங்க வேண்டிய விவகாரம் இது. இனியும் தனி ஆவர்த்தனம் உதவாது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT