Published : 21 May 2016 09:03 AM
Last Updated : 21 May 2016 09:03 AM
ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள், ஐந்து வெவ்வேறு விதமான வெற்றியாளர்கள். வாக்காளர்கள் எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே மாதிரியாக ஆதரவை அள்ளி வழங்கிவிடவில்லை. ஐந்து மாநிலங்களிலும் வெற்றிக்கூட்டணியாகப் பரிமளித்திருக்கக் கூடியவற்றில் இடம்பெற்றிருந்த ஒரே கட்சி காங்கிரஸ். ஆனால் அது புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்தில் மட்டும் கூட்டணிக் கட்சியுடன் சேர்ந்து ஆட்சியைப் பிடித்திருக்கிறது.
அசாமில், தன்னுடைய பிரதானத் தேசிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவிடம் வெற்றியைப் பறிகொடுத்துவிட்டது. கேரளத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்குத் தலைமை தாங்கிய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஐனநாயக முன்னணியிடம் தோற்றுவிட்டது. மேற்கு வங்கத்தில் இடதுசாரி முன்னணியுடன் ஏற்படுத்திக்கொண்ட பொருத்தமில்லாத அரசியல் கூட்டணியால் பலன் ஏதும் இல்லாமல் போய்விட்டது. தமிழகத்தில் திமுகவுடன் புதுப்பித்துக்கொண்ட அரசியல் உறவால் சிறிதளவே பலன் பெற்றுள்ளது.
அசாமில் கிடைத்த வெற்றி பாஜகவுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கும். அசாம் கணப் பரிஷத், போடோலாந்து மக்கள் முன்னணி ஆகிய மாநிலக் கட்சிகளுடன் அமைத்துக்கொண்ட கூட்டணி அதற்குச் சாதகமான பலன்களைத் தந்திருக்கிறது. மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகியவற்றில் முறையே திரிணமூல் காங்கிரஸும் அதிமுகவும் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பதால் பாஜகவுக்கு வருத்தம் ஏதும் இருக்கப்போவதில்லை. இவ்விரு மாநிலங்களிலும் பாஜக இன்னும் கால் ஊன்றவே இல்லை. எனவே மக்களிடையே ஆதரவில்லாத தனக்கு வெற்றி கிடைக்காததைவிட, காங்கிரஸ் கூட்டணி அடைந்த தோல்வியே அதற்குத் திருப்திகரமாக இருக்கும். கூடவே, திரிணமூல் காங்கிரஸையும் அதிமுகவையும் டெல்லி அரசியலில் தனது கூட்டாளிகளாக்கிக்கொள்வதற்கான வாய்ப்பையும் இப்போது அது பெற்றிருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு கேரளத்தில் பாஜக ஒரு சக்தியாக வளர்வதற்கு இது அச்சாரமாக இருக்கக் கூடும். காங்கிரஸுடன் ஒப்பிடும்போது பாஜக அரசியல்ரீதியாகப் பலனடைந்த நிலையிலேயே இருக்கிறது.
கேரளத்தில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி பெரும்பான்மை வலுவுடன் ஆட்சிக்கு வந்திருக்கிறது. கட்சியின் மாநிலச் செயலாளர் பினராயி விஜயன்தான் முதலமைச்சர் என்று தேர்வாகியிருக்கிறது. இதனால் கட்சியின் முன்னாள் முதல்வரும் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் அதிருப்தி அடைந்திருக்கிறார். திரிபுராவுக்கு அடுத்துக் கேரளத்தில்தான் இப்போது இடதுசாரிகளின் ஆட்சி அமைந்திருக்கிறது. கேரள மக்கள் அரசியல் விழிப்புணர்வு மிக்கவர்கள். சினிமா கவர்ச்சியோ கவர்ச்சிகரமான அறிவிப்புகளோ அவர்களிடம் செல்லாது. அதேபோல, ஊழலையும் முறைகேடுகளையும்கூட அவர்கள் சகித்துக்கொள்வதில்லை. எனவே கேரள முதல்வராகப் பதவியேற்பவர் மாநில நிர்வாகத்தைத் திறமையாக நடத்திச் சென்றாக வேண்டும். கல்வியறிவிலும் சுகாதார முன்னேற்றத்திலும் கேரளம் முன்னணியில் இருந்தாலும் தொழில் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இல்லை. எனவே தொழில் துறையிலும் சேவைத் துறையிலும் முதலீடுகளை ஈர்க்கும் செயலில் கண்டிப்பாக ஈடுபட்டாக வேண்டும்.
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. நிர்வாகத்தை நடத்திச்செல்வதில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டதாகக் கூற முடியாது என்றாலும் தேர்தல்களில் வெற்றிபெற என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பனவற்றை இடதுசாரிகளைப் பார்த்தே கற்றுக்கொண்டிருக்கிறது. மக்களின் அடிப்படைத் தேவைகள் என்ன என்று பார்த்து, அவற்றை அளித்து அவர்களுடைய ஆதரவைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார் மம்தா. இடதுசாரிகளும் காங்கிரஸும் இணைந்து போட்டியிட்ட போதிலும், ஆட்சியில் இருக்கும் கட்சி மீது மக்களுக்கு இயல்பாக ஏற்படும் அதிருப்தியும் காணப்பட்டபோதிலும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருக்கிறார். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தது ஏன் என்று மார்க்சிஸ்ட் தலைமை இப்போது வருத்தப்படக்கூடும். ஆனால் கட்சித் தொண்டர்களின் விருப்பம் அதுவாக இருப்பதால் காங்கிரஸுடன் இணைந்து தேர்தலைச் சந்திப்பதாகத் தேர்தலுக்கு முன்னதாக அறிவித்திருந்ததை மறக்க முடியாது. இந்தக் கூட்டின் பலன் காங்கிரஸுக்குத்தான் கிடைத்தது. இடதுசாரிகளுக்கு முன்பைவிட ஆதரவு குறைந்துவிட்டது. முப்பதாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து ஆட்சி செய்து, வெல்ல முடியாத கூட்டணி என்ற மாயையை உருவாக்கி யிருந்த இடதுசாரி கூட்டணி தன்னுடைய இன்றைய நிலைமைக்குக் காரணம் என்ன என்று ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும். தேர்தல் காலத்திய ஆதாயத்துக்காகச் செய்துகொள்ளும் அவியல் கூட்டணி களால் பலன் ஏற்படாது என்ற பாடத்தை இடதுசாரிகள் இத்தேர்தலில் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
அசாமில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றத் தனித்துப் போட்டியிட்டால் முடியாது என்பதை உணர்ந்ததால் அசாம் கண பரிஷத், போடோலாந்து மக்கள் முன்னணி ஆகியவற்றுடன் வலுவான கூட்டணியைப் பாஜக அமைத்துக்கொண்டது. முதல்வர் வேட்பாளர் பெயரையும் முன்னதாகவே தீர்மானித்து அறிவித்துப் பிரச்சாரத்தை மேற்கொண்டது. வட கிழக்கு மாநிலங்களில் தேர்தல்மூலம் முதலில் அசாமில் ஆட்சியைப் பிடித்ததன் மூலம் பிற மாநிலங்க ளுக்கும் பரவும் திட்டத்தை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்தி பேசும் மாநிலங்களில் மட்டும் செல்வாக்குள்ள கட்சி என்ற பிம்பத்தைப் பாஜக தொடர்ந்து உடைத்துவருகிறது.
மேற்கு வங்கம், கேரளம் ஆகிய சட்டப் பேரவைகளில் முதல் முறையாக இடம் பெறும் வாய்ப்பைப் பெற்றிருந்தாலும் அம்மாநிலங்களில் செல்வாக்குள்ள பெரிய கட்சியாகப் பாஜக உருவெடுக்கப் பல ஆண்டுகள் பிடிக்கும். அதையும்கூடக் கூட்டணிகள் மூலம்தான் சாதிக்க முடியும். தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் இப்போதைய வலு, செல்வாக் கைப் பார்க்கும்போது இங்கு தேசியக் கட்சிகள் வேரூன்றவும் விசுவரூபம் எடுக்கவும் பல தசாப்தங்கள் ஆகும் என்று தோன்றுகிறது. தேசியக் கட்சியாகப் பரவ வேண்டும் என்ற லட்சியம் இருந்தாலும் அதற்கான பாதை எளிதானது அல்ல என்பது பாஜகவுக்கும் புரிந்திருக்கும்.
தேர்தல் தோல்விகள் காங்கிரஸ் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களை மேலும் வலியுறுத்துகின்றன. அமைப்புரீதியாகத் தன்னை வலுப்படுத்திக்கொள்ள உள்கட்சி ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும். இரண்டாம் நிலைத் தலைவர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்க வேண்டும். மக்களுடைய பிரச்சினைக்காக உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் போராட்டங்களை நடத்த வேண்டும். மக்களுடனான தொடர்பை விரிவுபடுத்த வேண்டும். முக்கியமாக, காங்கிரஸ் கட்சியில் பேசுகிறவர்களைவிட செயல்படுகிறவர்களை அதிகப்படுத்த வேண்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT