Published : 06 May 2016 09:06 AM
Last Updated : 06 May 2016 09:06 AM
இந்தியாவின் ஏழைகளில் பெரும்பான்மையாக உள்ள பட்டியல் சாதியினர், பழங்குடிகளுக்குத் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டுவரும் சூழலில், இந்தக் கொடுமைகளுக்கு முடிவுகட்டும் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.
பட்டியல் சாதியினர், பழங்குடிகள் எதிர்கொள்ளும் சாதிய ஒடுக்குமுறைகளைத் தடுக்க உருவான பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடிகள் (வன்முறைகள்) தடுப்புச் சட்டத்தை மத்திய அரசு மேலும் பலப்படுத்தியிருக்கிறது. பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடிகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனைகளை விதிக்கவும், பாதிக்கப்படுவோருக்கு இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்கவும் புதிய சட்டத்தின் மூலம் வழிபிறக்கும்.
1995 முதல் 2010 வரையிலான 15 ஆண்டு காலகட்டத்தில் அம்மக்களுக்கு எதிராக ஏறத்தாழ 1 கோடியே 50 லட்சம் வன்கொடுமைகள் நடந்துள்ளன. வன்கொடுமை செய்தவர்கள் நீதிமன்றத் தண்டனை பெறுவது என்பது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. அது 0.5%-ல் இருந்து 8% வரை உள்ளது. தமிழகத்தில் 5.2% பேரே தண்டனை பெறுகின்றனர் என்று மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.
1989-ல் அறிவிக்கப்பட்ட சட்டத்தில், வன்கொடுமைக் குற்றங்கள் என வரையறுக்கப்பட்டவற்றுடன் தற்போதைய திருத்தச் சட்டத்தில், வன்கொடுமை வடிவங்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பது, வேலை தராமல் பொருளாதாரரீதியாகப் புறக்கணிப்பது, கையால் மலம் அள்ளுமாறு கட்டாயப்படுத்துவது உள்ளிட்டவை அவை. இச்சட்டத்தை பலப்படுத்த காங்கிரஸ் அரசு தொடங்கிய நடவடிக்கைகள், மோடி ஆட்சியிலும் வளர்த்தெடுக்கப்படுவது இந்திய ஜனநாயகத்தின் சிறப்புகளில் ஒன்று.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989-ன் பிரிவு 14-ன் கீழ், தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் தஞ்சாவூர், திருச்சி, மதுரை, நெல்லை என சில மாவட்டங்களில் மட்டுமே சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. வன்கொடுமைச் சட்டங்களை மட்டுமே விசாரிக்கிற தனியான சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று மாநில அரசுகளை இந்த சட்டத்திருத்தம் வலியுறுத்துகிறது.
தற்போதைய சட்டத்திருத்தத்தின்படி, பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்த உடனே அதைப் பதிவுசெய்து 60 நாட்களுக்குள் விசாரணையை முடித்து, குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்படும் மகளிருக்கு என்னென்ன நிவாரண உதவிகள் அரசால் அளிக்கப்பட வேண்டும் என்பது முதல்முறையாகத் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த நிவாரணத் தொகை ரூ.75,000-லிருந்து ரூ.7.5 லட்சமாகவும் ரூ.85,000-லிருந்து ரூ.8.25 லட்சமாகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. 2016 ஜனவரியிலிருந்து இந்தக் கணக்கீடு தொடங்குகிறது. குற்றம் நடந்த ஒரு வாரத்துக்குள், பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு ரொக்கமாகவோ வேறு வகையிலோ தரப்பட வேண்டும்.
உண்மையில், வன்கொடுமைகளைத் தடுப்பதற்கான சட்டம் இன்னும் ஏட்டளவில்தான் இருக்கிறது. இதுதொடர்பான புகார்களைப் பதிவுசெய்யவும் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் முன்வராததால்தான் இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடக்கின்றன. இந்த நிலையில், புதிய வழிகாட்டு ஆணைகள் எப்படிப் பயன்தரப்போகின்றன என்று பார்க்க வேண்டும்.
நெருக்கமான தோழமை, பழகுதல் மூலம்தான் இந்தத் தீண்டாமையைப் பொசுக்க முடியும். சொந்தச் சகோதரர்களைக் கொடுமைப்படுத்தி இன்பம் காணும் குரூரத்துக்குத் தீர்வுகாண அனைவரும் முடிவெடுக்க வேண்டும். இது மாபெரும் இயக்கமாகக் கட்சிகளைக் கடந்து உருவாக வேண்டும். அப்போதுதான் தீண்டாமைகளையும் வன்கொடுமைகளையும் நம்மால் முற்றாக ஒழிக்க முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT