Published : 23 Apr 2016 08:34 AM
Last Updated : 23 Apr 2016 08:34 AM
வருங்கால வைப்பு நிதியில் சேர்ந்துள்ள பணத்தை முன்கூட்டி எடுப்பதற்கு உருவாக்கிய புதிய தடை விதிகளைத் திரும்பப் பெற்றிருக்கிறது மத்திய அரசு. பெங்களூரில் ஆடை தயாரிப்புத் துறைத் தொழிலாளர்களின் ஆக்ரோஷமான போராட்டமே அரசின் இந்த முடிவுக்குக் காரணம்.
வருங்கால வைப்பு நிதியில் ஊழியர்கள் சேமிக்கும் பணம் தொடர்பாக தான் எடுத்த முக்கிய முடிவை அரசு திரும்பப் பெறுவது, ஒரு மாத இடைவெளிக்குள் இது இரண்டாவது முறை. சிறுசேமிப்புத் திட்டங்களில் செலுத்தப்பட்டு யாராலும் உரிமை கோரப்படாதத் தொகையை அரசே எடுத்து பயன்படுத்தும் ஒரு யோசனையும் இப்போது பரிசீலிக்கப்படுகிறது. அடுத்து திரும்பப் பெறப்போகும் முடிவாக அது இருக்கலாம். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது வருங்கால வைப்பு நிதி தொடர்பாக தெரிவிக்கப்பட்ட உத்தேச யோசனையை கடுமையாக எதிர்த்து சமூக வலைதளங்களிலேயே லட்சக்கணக்கானோர் கருத்துகளைத் தெரிவிக்கத் தொடங்கியதையடுத்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஒரு வாரத்துக்குள் அதைத் திரும்பப் பெற்றது நினைவிருக்கலாம். பணியாளர் ஓய்வு பெறும்போது அவருடைய வருங்கால வைப்புநிதி சேமிப்புக் கணக்கில் சேரும் மொத்தத் தொகையில் ஐந்தில் மூன்று பங்குக்கு வரி விதிப்பது என்ற யோசனையை அப்போது ஜேட்லி தெரிவித்திருந்தார்.
வைப்பு நிதியில் சேர்ந்த தொகையை முற்றாகத் திரும்ப எடுத்துவிடக்கூடாது என்ற விதியை சமீபத்தில் மத்திய அரசு எடுத்தது. எதிர்பார்த்ததைப் போலவே மக்கள் அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே இம்முடிவை 3 மாதங்களுக்கு ஒத்திவைத்திருப்பதாக மத்திய அரசு முதலில் கூறிப்பார்த்தது. ஆனால் மிகப் பெரிய தொழிற்சங்கப் பின்னணி இல்லாத, சாதாரணத் தொழிலாளர்களே மேற்கொண்ட தன்னெழுச்சிப் போராட்டம் அரசின் முடிவை 24 மணி நேரத்துக்குள்ளாக மாற்றியிருக்கிறது. முழுத் தொகையையும் பிடித்தம் ஏதுமில்லாமல் எடுத்துக் கொள்ளலாம் என்று முன்பிருந்த நிலையை மீண்டும் அனுமதித்துள்ளது அரசு.
இப்போதுள்ள பொருளாதார சூழல் அரசுக்குப் புரியாததல்ல. வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாவதில்லை. வேலை கிடைத்து வேலை செய்கிறவர்களுக்கும் அது நிரந்தரமான வேலையாக இருப்பதில்லை. பெரும்பாலும் ஒப்பந்த அடிப்படையில்தான் வேலை கிடைக்கிறது. ஊதியமும் போதுமானதாக இருப்பதில்லை. ஊதிய உயர்வும் கணிசமாகவோ ஆண்டுதோறுமோ இருப்பதில்லை. இந்த நிலையில் விலைவாசி உயர்வு காரணமாகவும் கல்வி, மருத்துவச் செலவு காரணமாகவும் தொழிலாளர்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். அவர்களுடைய நெருக்கடி நேரச் செலவுகளுக்குக் கை கொடுப்பதாக இருப்பது வருங்கால வைப்பு நிதி சேமிப்பு மட்டுமே. அதைத் தொழிலாளர்கள் செலவுக்கு எடுத்துக்கொள்ள வரம்பு நிர்ணயிப்பதும், கட்டுப்பாடுகளை விதிப்பதும், வரி விதிப்பதும் குரூரமான செயல்பாடு. இந்நாட்டின் நடுத்தர மக்களின், தொழிலாளர்களின், ஏழைகளின் அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதையே துளியும் அறியாத அதிகார வர்க்கமும் ஆள்வோரும்தான் இப்படியெல்லாம் முடிவுகளை எடுக்க முடியும்.
இப்போது தொழிலாளர்கள் ஒரே நிறுவனத்தில் அல்லது ஒரே தொழிலில் நீண்ட காலம் பணிபுரியும் வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. ஒப்பந்த அடிப்படையில் நிறுவனத்திலோ அல்லது அயல்பணி ஒப்படைப்பு அடிப்படையில் செய்துதரும் நிறுவனங்களிலோதான் அதிகம் பணிபுரிகின்றனர். அந்த நிறுவனங்களில் பல, தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி போன்ற அடிப்படைப் பயன்களைக்கூடச் செய்து தருவதில்லை. அரசுக்கு உண்மையான அக்கறை இருந்தால் முதலில் இந்த ஓட்டைகளையெல்லாம் அடைக்கலாம். அதை விட்டுவிட்டு மேலும் மேலும் தொழிலாளர்கள் தலையில் கை வைக்கும் வேலையிலேயே பாஜக அரசு ஈடுபடுகிறது.
சில வார்த்தைகள் வரலாற்றில் தங்கிவிடும். நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது, “வைப்பு நிதியிலிருந்து பணத்தை எடுத்தால் வரி செலுத்த வேண்டும் என்று ஏன் நிர்பந்திக்கிறீர்கள்?” என்ற கேள்விக்கு, “அவர்கள் தொடர்ந்து அந்த சேமிப்பை வைத்திருக்க வேண்டும் என்று தூண்டத்தான் அப்படிச் செய்தோம்” என்று விசித்திரமான விளக்கம் அளித்தார் நிதியமைச்சர் ஜேட்லி. செலவுக்குப் பணம் இல்லாதவர்களை, சேமிப்பில் வைத்திருங்கள் என்று கட்டாயப்படுத்துவதை எப்படிப் பாராட்ட முடியும்?
வருமானம் அதிகமாகி, செலவுகள் கட்டுக்குள் இருந்தால் எதிர்காலத் தேவைகளுக்காக சேமித்து வைக்க வேண்டும் என்ற உந்துதல் உள்ளவர்கள்தான் இந்தியத் தொழிலாளர்கள். முதலில் அவர்களுடைய கைகளுக்குக் கணிசமான வருவாய் கிடைப்பதற்கான வழிகளை ஏற்படுத்துங்கள். அத்தியாவசியப் பண்டங்களின் விலைகளையும் கல்வி, சுகாதாரத்துக்கான செலவுகளையும் குறையுங்கள். பிறகு அவர்கள் தாங்களாகவே சேமிக்கவும் நல்ல துறைகளில் செலவிடவும் முன்வருவார்கள். அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்ட ஊழியர்களில் 10% பேரின் சேமிப்பை கட்டாயப்படுத்துவதைவிட அமைப்பு ரீதியாகத் திரட்டப்படாத 90% தொழிலாளர்களின் சமூக நல திட்டங்களில் கவனம் செலுத்துவதே நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்படும் என்பதை அரசு உணர வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT