Published : 29 Mar 2016 08:17 AM
Last Updated : 29 Mar 2016 08:17 AM

அசாமில் தவறான திசையில் பிரச்சாரம்

அசாம் மாநிலத்தில் தேர்தல் 2 கட்டங்களாக ஏப்ரல் 4, 11 ஆகிய இரு நாட்களில் நடைபெறவிருக்கிறது. 1.98 கோடி வாக்காளர்களைக் கொண்ட மாநிலம் அது. மொத்தத் தொகுதிகள் 126. இரண்டு காரணங்களுக்காக அசாம் தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது. முதலாவதாக மேற்கு வங்கம், கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் அசாமில் மட்டுமே ஆட்சிக்கு வரக்கூடிய நிலையில் பாஜக இருக்கிறது. இதர 4 மாநிலங்களில் வலுவுள்ள அரசியல் சக்தியாக அக்கட்சி இதுவரை உருவெடுக்கவில்லை. அடுத்ததாக, இந்தத் தேர்தல் முடிவும், பிரதமர் மோடியின் ஆட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண் என்ன என்பதை உணர்த்தும் வகையிலேயே இருக்கப்போகிறது என்பதுதான். 2014 மக்களவை பொதுத் தேர்தலின்போது மொத்தமுள்ள 14 மக்களவைத் தொகுதியில் பாஜக அணிக்கு 7 தொகுதிகள் கிடைத்தன.

டெல்லி, பிஹார் சட்டப் பேரவை பொதுத் தேர்தல்கள் பாஜகவின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போட்டன. முதல்வர் வேட்பாளராக டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவாலும் பிஹாரில் நிதிஷ் குமாரும் அறிவிக்கப்பட்டனர். அவர்கள் பெருவாரியான ஆதரவு பெற்று முதல்வர்களாகவும் பதவியேற்றனர். அசாமில் காங்கிரஸ் கட்சியே தொடர்ந்து 3 சட்டப் பேரவை பொதுத் தேர்தல்களில் வெற்றிபெற்று வந்திருக்கிறது. முதல்வர் தருண் கோகோய் நீண்ட அனுபவம் மிக்க நிர்வாகி, சிறந்த ராஜதந்திரி. இந்தத் தேர்தலைத் தனக்கும் பிரதமர் மோடிக்கும் இடையிலான மோதலாக மாற்ற அவர் முயல்கிறார். டெல்லி, பிஹாரில் அடைந்த தோல்விகளிலிருந்து பாடம் கற்ற பாஜக, அசாம் மாநிலத்தின் முதல்வர் வேட்பாளராக சர்வானந்த சோனோவாலை ஜனவரி மாதத்திலேயே அறிவித்துவிட்டது. அசாமில் பிரச்சாரத்தைத் தொடங்கிய மோடியும், இந்த மாநிலத்தில் போட்டி கோகோய்க்கு எதிரானது அல்ல, வறுமைக்கும் ஊழலுக்கும் எதிரானது என்று பேசியிருக்கிறார்.

மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 34%. அத்துடன் இனரீதியாகவும் மக்கள் பிரிந்து நிற்கின்றனர். இதனால்தான் அசாம் கண பரிஷத், போடோலாந்து மக்கள் முன்னணி என்ற இரு மாநிலக் கட்சிகளுடன் பாஜக கூட்டு சேர்ந்திருக்கிறது. மாநிலத்தில் இப்போது மும்முனைப் போட்டி ஏற்பட்டிருக்கிறது. காங்கிரஸ், பாஜக கூட்டணி மற்றும் பத்ருதீன் அஜ்மல் என்பவர் தலைமையிலான அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகியவை களத்தில் நிற்கின்றன.

மேடைகளில் முக்கிய இடத்தைப் பிடிப்பது மாநிலப் பிரச்சினைகள் தான். மனிதவளம் தொடர்பாக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் ஓரளவுக்கே விவாதிக்கப்படுகின்றன. அசாமியர் - அசாமியர் அல்லாதவர் என்ற பிரச்சினைதான் முக்கியமாக விவாதிக்கப்படுகிறது. மண்ணின் மைந்தர்களைக் காப்போம் என்கிறது பாஜக கூட்டணி. காங்கிரஸ் கட்சியோ திட்டவட்டமான பதிலைக் கூற முடியாமல் தவிர்க்கிறது.

வங்கதேசத்திலிருந்து முஸ்லிம்கள் இடம்பெயர்ந்து, சட்டவிரோத மாகக் குடியேறிவிட்டதாக தேர்தல் பிரச்சாரத்தில் பேசப்படுகிறது. தேர்தல் ஆதாயத்துக்காக சிறுபான்மைச் சமூகத்துக்கு ஆதரவாகப் பேசுகிறவரும், பெரும்பான்மைச் சமூகத்துக்கு ஆதரவாகப் பேசுகிறவரும் விஷத்தைக் கக்கினால் அது மாநிலத்தின் சமூக ஒற்றுமையையும் வளர்ச்சி, அமைதி போன்றவற்றையும்தான் பாதிக்கும். அந்நியர்கள் யார் என்று கண்டுபிடித்து வெளியேற்றுவது தொடர்பாக அடிக்கடி கோரிக்கைகள் விடப்படுவதால் எப்போதுமே கொந்தளிப்பு நிலவுகிறது. இதைத் தேர்தல் களத்தில் பேசித் தீர்க்க முயலக் கூடாது. மாறாக, மாநிலத்தை முன்னேற்றுவதற்கான திட்டங்களையும் வழிகளையுமே சிந்திக்க வேண்டும். அசாமியர்கள் ஒற்றுமையாகவும் அமைதியாகவும் இருந்தால்தான் மாநிலம் வளர்ச்சி காண முடியும். இதை களத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x