Published : 09 Feb 2021 03:13 AM
Last Updated : 09 Feb 2021 03:13 AM
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில், ‘கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய மொழி மொழிபெயர்ப்புத் திட்டம், அரசின் கொள்கை முடிவுகள் தொடர்பான தகவல்களைப் முக்கிய இந்திய மொழிகள் அனைத்திலும் இணையம் வழியாகக் கொண்டுசேர்க்கும்’ என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது.
ஒன்றிய அரசின் சட்டங்கள் மட்டுமல்லாது அரசாணைகள், சுற்றறிக்கைகள் என அனைத்துமே மாநில மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற நீண்ட காலக் கோரிக்கை நிறைவேறுவதற்கான ஒரு முன்னெடுப்பாக இதை நாம் பார்க்கலாம். அதேசமயம், மும்மொழித் திட்டத்தைச் செயலாக்குவதில் உள்ளபடியே அரசின் ஒருங்கிணைந்த நிலைப்பாடு என்னவென்பதும் வெளிப்படையாக வெளிப்படுத்தப்பட்டால்தான் இத்தகு அறிவிப்புகள் உண்மையான அர்த்தத்தைப் பெறும்.
ஜனநாயகத்தின் திறவுகோல்களில் ஒன்று மொழி. அது கருவி மட்டும் அல்ல; அதிகாரம் அளிக்கும் ஆயுதம். பரந்து விரிந்த இந்தியாவின் ஒன்றிய அரசு தன்னுடைய பிராந்திய மொழிகள் அத்தனையையும் ஆட்சிமொழி ஆக்கிக்கொள்ளும் தொடக்கமாக மும்மொழிக் கொள்கையை வரித்துக்கொள்ள வேண்டும் என்பது இந்தியா சுதந்திரம் நோக்கி அடியெடுத்துவைத்த காலம் தொட்டு வலியுறுத்தப்பட்டுவரும் கருத்து. அதற்கான தொடக்கங்களில் ஒன்று ஒன்றிய அரசின் தகவல்களை பிராந்திய மொழிகளிலும் வெளியிடுவது ஆகும். வளரும் தொழில்நுட்பம் மொழிபெயர்ப்பை இலகுவாக்கிவரும் இக்காலகட்டத்தில், பிராந்தியங்களின் பிரதிநிதித்துவம் பிரதிபலிக்க இப்போது தேவையெல்லாம் அரசின் உண்மையான ஆர்வமும் அக்கறையும்தான். இதற்கு உறுதியானதும், வெளிப்படையானதுமான நிலைப்பாட்டை அரசு எடுக்க வேண்டும்.
கர்நாடகத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்றின் கல்வெட்டில் கன்னடம் புறக்கணிக்கப்பட்ட குற்றச்சாட்டு எழுந்ததன் பின்னணியில், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘ஒன்றிய அரசின் அலுவலகங்களில் மும்மொழித் திட்டம் பொருந்தாது, இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே அலுவல் மொழிகளாக இருக்கும்’ என்று சமீபத்தில் உள் துறை அமைச்சகம் தெரிவித்த கருத்து இங்கே இணைத்துப் பார்க்கப்பட வேண்டியதாகும். இதற்கு 1963 ஆட்சிமொழிச் சட்டம், 1976 ஆட்சிமொழி விதிகள் ஆகியவற்றை விளக்கமாகவும் அது கூறியிருக்கிறது.
கர்நாடகத்தில் இது கடுமையான எதிர்ப்பை உண்டாக்கியதோடு, ‘இந்தியை மட்டுமே தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ளும் அரசமைப்புச் சட்டத்தின் பதினேழாவது பகுதி திருத்தப்பட வேண்டும்’ என்ற நீண்ட காலக் கோரிக்கைக்கும் புத்துயிர் கொடுத்தது. பெயர்ப் பலகையிலும், கல்வெட்டுகளிலும்கூட இந்தி – ஆங்கிலம் தவிர்த்து சம்பந்தப்பட்ட மாநில மொழியை அனுமதிக்க மாட்டோம் என்பது மாநிலங்கள் – ஒன்றியம் இடையிலான நல்லுறவுக்கோ, இந்நாட்டின் பன்மைத்துவத்துக்கோ வளம் சேர்க்காது. கல்வித் துறையின் கீழ் மும்மொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் திறந்த மனதோடு இருப்பதாகக் கூறும் அரசு முதலில் தனது அலுவலகங்களில் அல்லவா மும்மொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்தி முன்னுதாரணமாக விளங்க வேண்டும்?
இந்தியாவின் அனைத்து மொழிகளும் சமமாக பாவிக்கப்பட வேண்டும் என்பது அந்த மொழிகளுக்கான மரியாதை மட்டும் அல்ல; இந்திய ஜனநாயகம் தன்னை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பும் ஆகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT