Published : 14 Oct 2015 08:54 AM
Last Updated : 14 Oct 2015 08:54 AM
பசிபிக் கடலோர நாடுகளுக்கு இடையில் ரகசியமாக நடந்த பேச்சுகளின் அடிப்படையில் புதிய வணிக ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு அந்தந்த நாடுகளின் நாடாளுமன்றங்கள் ஒப்புதல் வழங்கிய பிறகு நடைமுறைக்கு வரும். அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, சிலி, ஆஸ்திரேலியா உட்பட 12 நாடுகளுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தம் ஒரே சமயத்தில் பல நாடுகளுக்கு நம்பிக்கையையும் பல நாடுகளுக்கு கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த 12 நாடுகளும் உலகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பவை. வர்த்தகரீதியிலும் வர்த்தகம் அல்லாத இனங்களிலும் வியாபாரத்துக்கு இடையூறாக இருக்கும் 18,000 அம்சங்களை விலக்கிக்கொள்வதுதான் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும். அமெரிக்காவிலும் ஆசியப் பொருளாதாரத்திலும் வளர்ச்சி ஏற்பட இது உதவும் என்று பசிபிக் கடலோர நாடுகளின் தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால், அமெரிக்காவுக்கு உள்ளேயும் வெளியேயும் பலத்த எதிர்ப்புகளும் தோன்றியுள்ளன. அதிபர் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவுக்குள் இதுதொடர்பாக நடக்கும் விவாதங்கள், ஆடு புலி ஆட்டத்தில் புலிக்காகக் கண்ணீர் வடிக்கும் கதையாக இருக்கிறது. அதை வைத்துப் பார்த்தால், ரகசியமாகப் பேசி இறுதி செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை.
இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, இந்த ஒப்பந்தத்தின் தாக்கம் பல்வேறு துறைகளிலும் எதிரொலிக்கும் என்று கூறப்பட்டாலும், மருந்துத் துறையில் இது முக்கியமான விளைவுகளை உண்டாக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் காரணமாக பிராண்டட் மருந்துகள் மட்டுமே அதிகம் விற்பனைக்குக் கிடைக்கும், பொது மருந்துகளின் உற்பத்தி குறைந்துவிடும். இதனால் ஏழைகள், அதிக விலை கொடுத்து மருந்து மாத்திரைகள் வாங்க நேரிடும் என்று கூறப்படுகிறது. வளரும் நாடுகளில் உள்ளவர்களுக்குப் பொது மருந்துகள் கிடைப்பதே நாளடைவில் அரிதாகிவிடும். இது மிகப்பெரிய அச்சுறுத்தல் என்கின்றனர் சுதந்திர வர்த்தகத்தை ஆதரிக்கும் இணையதளப் பயன்பாட்டாளர்கள்.
தனது வர்த்தக, வெளியுறவுக் கொள்கைகளுக்கு மையப்பொருளாக பசிபிக் கடலோர நாடுகளுக்கு இடையிலான இந்த வர்த்தக ஒப்பந்தத்தை மாற்றியிருக்கிறார் அதிபர் ஒபாமா. நாடாளுமன்றத்தில் இதற்கு ஆதரவு திரட்டுவதுடன், பிற நாடுகளின் அரசுகளும் ஆதரிப்பதை உறுதி செய்ய விரும்புகிறார். பசிபிக் பிராந்தியத்தில் சீனா மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுத்துவருவதால், பசிபிக் கடலோர நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டு, வர்த்தக அளவைப் பெருக்கிக்கொள்ள விரும்புகிறார்.
ராணுவரீதியிலான அமெரிக்கத் திட்டம் தெளிவாகவே இருக்கிறது. தனது எதிரிகளைத் தனிமைப்படுத்துவதும், நேச நாடுகளை ஐக்கியப்படுத்திக் கொள்வதும்தான் அதன் உத்தி. இது ராணுவ நடவடிக்கைகளில் மட்டுமல்லாமல், வர்த்தக - பொருளாதார நடவடிக்கைகளிலும் மேற்கொள்ளப்படும். சீனத்தை அதனால் தனிமைப்படுத்தவும் முடியாது, அதனுடன் சேர்ந்து பிற நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளவும் முடியாது. உலகப் பொருளாதாரத்தில் சீனா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களிலேயே அந்நாடு பல லட்சம் கோடி டாலர்களை முதலீடு செய்திருக்கிறது.
1970-களில் கம்யூனிஸ்ட் நாடுகளுக்குள் ஏற்பட்ட தீவிர கருத்து வேறுபாட்டைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதற்காக 1972-ல் சீனாவுடனான விரோத நிலையைக் கைவிட்டது அமெரிக்கா. ஆனால், சோவியத் ஒன்றியம் சிதறியதற்குப் பின் அந்த இடத்தை நோக்கி சீனம் நகரத் தொடங்கியது.
இன்றைக்கு ‘ஆசிய அடித்தள முதலீட்டு வங்கி’, பட்டு சாலை போன்ற வியூகங்கள் மூலம் அமெரிக்காவுக்கு மாற்றான ஒரு வல்லரசாக சீனா முயலும் சூழலில், அமெரிக்கா தன் சுயரூபத்தைக் காட்டத் தொடங்கியிருக்கிறது. வல்லரசுகளின் ஆட்டம் மூன்றாம் உலக நாடுகளின் ஏழைகளைத் தொடர்ந்து குறிவைக்கும்போது, மூன்றாம் உலக நாடுகள் மாற்றுப் பொருளாதார வியூகங்களை யோசிக்க வேண்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT