Published : 16 Jul 2020 08:42 AM
Last Updated : 16 Jul 2020 08:42 AM
இந்தியாவில் இந்த ஆண்டும் மழை பொய்க்கவில்லை என்பது மகிழ்ச்சியான செய்தி. ‘இந்திய வானிலை ஆய்வு மையம்’ அளித்த சமீபத்திய தரவின்படி இந்தக் காலகட்டத்தில் வழக்கமாகப் பெய்யும் மழையைவிட 14% அதிகமாகத் தற்போது மழை பெய்திருக்கிறது. ஜூன் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும் பருவமழையின் 17% மழை ஜூன் மாதத்தில் பெய்திருக்கிறது. ஜூன் மாதத்தில்தான் இந்தியாவில் பருவமழை இரண்டு திசைகளில் தொடங்கும். இதன் ஒரு திசைப் பயணம் கேரளத்தில் தொடங்கி வடக்கு நோக்கி நகரும் என்றால் இன்னொரு திசைப் பயணம் வங்கக் கடலிலிருந்து இந்தியாவின் தென்கிழக்கு வழியாகப் புகும். இரண்டு பருவமழைகளும் வடக்கில் ஒன்றுசேரும்; பருவமழை இவ்வாறு சங்கமிப்பதும் வலுப்பெறுவதும் ஜூலை நடுப்பகுதி வரை நிகழும்.
இந்த ஆண்டு இரண்டு முக்கியமான விஷயங்கள் நடந்துள்ளன. பருவமழை சொல்லிவைத்தாற்போல் ஜூன் 1 அன்று தொடங்கியது. வங்கத்தைச் சூறையாடிய உம்பன் புயலால் பருவமழை பிந்திப்போகலாம் என்ற கவலை நிலவிய பிறகு இப்படி சரியாகத் தொடங்கியிருக்கிறது. இரண்டாவது விஷயம், ஒட்டுமொத்த நாட்டையும் இது உள்ளடக்கிய வேகம். இந்த ஆண்டு பருவமழை தொடங்கியபோது, பல நகரங்களில் எப்போது மழை தொடங்கும் எப்போது முடியும் என்ற கணிப்பில் ‘இந்திய வானிலை ஆய்வு மையம்’ ஒரு திருத்தத்தை வெளியிட்டது. இதன்படி வடக்கு, மேற்கு எல்லைகளில் பருவமழை ஜூலை 8-க்கு முன்பு பெய்யும் என்று சொன்னது; அதையும் முறியடிக்கும் விதத்தில் ஜூன் 25-க்குள் நாடு முழுவதையும் பருவமழை தொட்டுவிட்டது. இது 2013-லிருந்து காணப்படாத வேகமாகும்.
ஜூன் மாதத்தில் நிறைய மழை பெய்திருக்கிறது; அதுவும் பரவலாக என்பது நிம்மதி அளிப்பது. வடமேற்கு இந்தியாவில் மட்டும் மழையளவு 3% குறைந்திருக்கிறது. மற்றபடி, தென்னிந்தியா, மத்திய இந்தியா போன்ற பகுதிகளில் 13-20% கூடுதல் மழை பெய்திருக்கிறது. இது நிலத்தைத் தயார்ப்படுத்தவும் குறுவைக்கு விதைக்கவும் விவசாயிகளுக்கான சமிக்ஞையாகும். ஆனால், மிக முக்கியமான மாதங்கள் ஜூலையும் ஆகஸ்ட்டும்தான். இந்த இரண்டு மாதங்களில்தான் பருவமழையில் மூன்றில் இரண்டு பங்கு பெய்கிறது. இந்தக் காலகட்டத்தில்தான் சில சமயம் பருவமழை இடைவெளி விடுவதும் உண்டு.
தரவுகள் திரட்டுவதிலும் தொழில்நுட்பத்திலும் குறிப்பிடத்தகுந்த அளவில் முன்னேற்றம் இருந்தாலும் மழை எப்போது இடைவெளி எடுத்துக்கொள்ளும், அது எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்பது குறித்து வானியல் ஆய்வு மையங்களால் துல்லியமாகக் கணிக்க முடிவதில்லை. ஆகவே, குறுகிய காலம் மற்றும் நடுத்தர கால அளவுக்கான வானிலை முன்னறிவிப்புகள் வலுப்படுத்தப்படுவதுடன் அவை மக்களுக்கு உரிய முறையில் தெரிவிக்கப்பட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT