Published : 14 Feb 2015 09:27 AM
Last Updated : 14 Feb 2015 09:27 AM
இந்தியாவின் வளர்ச்சிக்கான சிந்தனைக் குழாம் என்று மோடி அரசால் சொல்லப்பட்ட ‘நிதி ஆயோக்’கின் (இந்தியாவை மாற்றமடைய வைப்பதற்கான தேசியக் கழகம்) முதல் கூட்டம் கூடிக் கலைந்திருக்கிறது. கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான மாநில அரசுகள் முன்வைத்திருக்கும் கோரிக்கை: தங்களுடைய தேவைகள், நலனுக்கேற்ற திட்டங்களைத் தாங்களே வகுத்துக்கொண்டு நிறைவேற்ற சுதந்திரமும் அதிகாரமும் வேண்டும் என்பது; கூடவே நிதியும்!
நவீன இந்தியாவின் வளர்ச்சிக்குத் திட்டமிட்ட திட்டக்குழு இப்போது காலாவதியாகிவிட்டது. இப்போது, அதைப் பற்றிப் பேசுவதில் பயனில்லை. திட்டக்குழுவின் நல்ல அம்சங்களைப் பெற்றுக் கொள்கிறதோ இல்லையோ, அந்த அமைப்பின் போதாமைகள் - குறைகள் ‘நிதி ஆயோக்’கில் தொடராமல் இருப்பது முக்கியம். திட்டக்குழு எதிர்கொண்ட மிகப் பெரிய குற்றச்சாட்டு, மாநிலங்களின் உரிமைக்கு அதுவும் ஒரு சவாலாக இருந்தது. இந்தக் கூட்டத்தில் அது எதிரொலித்திருக்கிறது. கட்சி வேறுபாடு இல்லாமல் முதல்வர்கள் பேசியிருக்கிறார்கள். “கூட்டுறவு அடிப்படையில் கூட்டாட்சித் தத்துவம் கையாளப்பட வேண்டும்; மாநிலங்களுக்கு அதிகச் சுதந்திரம் தரப்பட வேண்டும்” என்பதே இந்தக் கூட்டத்தின் முக்கிய கோரிக்கை. ‘ஜன் தன் யோஜனா’, ‘பேட்டி பச்சாவோ’ இவை இரண்டுமே கேரளத்துக்குப் புதிதல்ல, அங்கு இத்தகைய திட்டங்கள் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கின்றன என்று அந்த மாநிலத்தின் முதல்வர் உம்மன் சாண்டி சுட்டிக்காட்டியிருக்கிறார். மத்திய அரசு முன்மொழிந்து மாநிலங்கள் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களின் எண்ணிக்கையை வெறும் 10 ஆகக் குறைத்தால் நல்லது என்று ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே கூறியிருக்கிறார். மத்தியத் திட்டங்களே வேண்டாம் என்று நிராகரித்திருக்கிறார் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார். எல்லாமும் நமக்கு உணர்த்தும் முக்கியமான செய்தி, இந்தியா போன்ற ஒரு நாட்டில் எல்லா மாநிலங்களுக்கும் ஒரே திட்டம் பொருத்தமாக இருக்காது என்பதுதான்.
திட்டமிடுதலை மத்திய அரசு மட்டுமே சிந்தித்து மாநிலங்களின் மீது திணிப்பது இனி முடியாது. அது தேவையும் இல்லை. இப்போதுள்ள 66 மத்தியத் திட்டங்கள் குறித்துப் பரிசீலித்து, அவற்றில் எத்தனை திட்டங்களை தொடர்ந்து அமலாக்கலாம், எவற்றை மாநில அரசுகளின் பொறுப்புக்கு விடலாம், எவற்றை அறவே கைவிட்டுவிடலாம் என்பதைப் பரிந்துரைக்க மாநில முதல்வர்களைக் கொண்ட துணைக் குழு அமைக்கப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. நல்ல விஷயம். அப்படி வடிகட்டும்போது முடிவுகளை எடுக்கும்போது, வறுமையை ஒழிக்கவும், சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களையவும், அடித்தளக் கட்டமைப்புகளை ஏற்படுத்தவும், கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படைகளை வழங்கவும் உதவக்கூடிய திட்டங்களைக் கைகழுவி விட்டுவிடக் கூடாது என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியாவைப் பொறுத்த அளவில், மாநிலங்கள் எந்த அளவுக்கு வலு பெறுகின்றனவோ, அந்த அளவுக்கு தேசம் வலிமை பெறும் என்பதே உண்மை. ஒரு மாநில முதல்வராக பிரதமர் பதவியை நோக்கி நகர்ந்த மோடிக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். முதல்வராக இருந்தபோது இது பல முறை அவர் பேசிய விஷயம்தான். மோடி இந்த விஷயத்தில் தன்னுடைய அக்கறையைக் காட்டும் சந்தர்ப்பம் வெகு அருகிலேயே இருக்கிறது. வரவிருக்கும் மத்திய நிதிநிலை அறிக்கைதான் அது. வார்த்தைகள் காரியங்கள் ஆகட்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT