Published : 14 Jan 2015 10:58 AM Last Updated : 14 Jan 2015 10:58 AM
கல்வித் தகுதியும் சமூக விடுதலையும்
ராஜஸ்தான் மாநிலத்தில் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடக் குறைந்தபட்சக் கல்வித் தகுதியைக் கட்டாயமாக்கும் அவசரச் சட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை, ‘நடைமுறை விதிகள் அடிப்படையில்’ விசாரிக்க மறுத்துத் திருப்பி அனுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம்.
சர்பஞ்ச் என்ற ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட குறைந்த பட்சம் எட்டாம் வகுப்பு தேறியிருக்க வேண்டும், ஜில்லா பரிஷத் பதவி களுக்குப் போட்டியிட பத்தாம் வகுப்பு தேறியிருக்க வேண்டும் என்று கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ‘ராஜஸ்தான் பஞ்சாயத்து ராஜ் (இரண்டாவது திருத்த) அவசரச் சட்டம்-2014’ என்பது இச்சட்டத்தின் பெயர்.
இப்போது இந்தச் சட்டத்துக்கு எதிரான மனு, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கிறது. இந்தச் சட்டத்தை எதிர்த்து அரசு சாராத தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க் கட்சிகளும் வழக்கு தொடுத்துள்ளன. மாநிலத்தில் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இது கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பஞ்சாயத்துகளில் 50% பதவிகள் மகளிருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதை யாரும் தவறென்று கூறவில்லை. ஆனால், ராஜஸ்தானின் கிராமப்புறங்களில் மகளிர் எழுத்தறிவு வெறும் 45.88% ஆக இருக்கிறது. அதிலும் பழங்குடிகள் வசிக்கும் பகுதிகளில் 25.22% ஆகவே இருக்கிறது. கல்வித் தகுதி இல்லாதவர்கள் போட்டியிட முடியாது என்றால், இவர்களில் பெரும்பாலானவர்கள் போட்டியிட முடியாத நிலைதான் உருவாகும். ஆடவர் களிடையே எழுத்தறிவு 76.16% ஆக இருப்பதால் பிரச்சினை இல்லை. இந்தச் சட்டம் பெரும்பாலான கிராமத்துப் பெண்களை, பழங்குடிப் பெண்களைப் போட்டியிலிருந்து விலக்கி வைக்கிறது.
மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும், நம்மாலான சேவையைச் சமூகத்துக்குச் செய்ய வேண்டும், நேர்மையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தைவிட எட்டாவது தேறியிருக்க வேண்டும், பத்தாவது தேறியிருக்க வேண்டும் என்ற தகுதிகள் பெரிதானவையாக இருக்க முடியாது. கிராம, மாவட்ட நிலையிலான பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு செயலாற்ற இப்போதுள்ள தகுதிகளே போதுமானவை. கல்வி கற்பதை ஊக்குவிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அப்படியே மக்கள் பிரதிநிதிகளுக்குக் கல்வித் தகுதி அவசியம் என்று கருதியிருந்தாலும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் அவகாசம் அளித்துவிட்டு, பிறகு அமல்படுத்தியிருக்கலாம்.
படித்தவர்கள் மட்டுமே சரியான முடிவுகளை எடுக்கிறார்கள், நேர்மையாக இருக்கிறார்கள் என்று நிரூபிக்க எந்த ஒரு சான்றும் இல்லை. சுதந்திரப் போராட்ட காலத்தில் நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டவர்களிலும் சுதந்திரம் அடைந்த பிறகு, நாட்டின் முன்னேற்றத்துக்கு உழைத்த வர்களிலும் கணிசமானவர்கள் முறையான கல்வித் தகுதி பெறாதவர்களே. ஆனால், நாட்டின் பங்களிப்புக்கு அவர்களுடைய பங்கு அளப்பரியது.
லட்சியம் எது என்பதுகுறித்து இப்போது பிரச்சினையே இல்லை. அதை அடையும் வழிமுறை குறித்துதான் பிரச்சினையே. சட்டப் பேரவைக்கும் நாடாளுமன்றத்துக்குமே குறைந்தபட்சக் கல்வித் தகுதி நிர்ணயிக்கப்படாதபோது, ராஜஸ்தான் மாநில பஞ்சாயத்துகளுக்கு மட்டும் குறைந்தபட்சக் கல்வித் தகுதி என்பது எந்த விதத்திலும் பொருத்தமற்றது!
WRITE A COMMENT