Published : 03 Jan 2015 08:48 AM
Last Updated : 03 Jan 2015 08:48 AM
இந்தியாவில் திட்டக் குழுவின் யுகம் முடிவுக்கு வந்திருக்கிறது. மாற்றாக, ‘நிதி ஆயோக்’என்ற புதிய அமைப்பை ஏற்படுத்த புதிய தீர்மானத்தை இயற்றியிருக்கிறது மத்திய அரசு. இந்தியாவை வளர்ச்சி, முன்னேற்றத்தை நோக்கி மாற்றுவதற்கான தேசிய நிறுவனம் என்ற பொருளில் ‘நிதி’ என்ற சொல் இணைக்கப்பட்டிருக்கிறது.
புதிய அமைப்புக்குப் பிரதமர் தலைவராக இருப்பார். இதற்கொரு துணைத் தலைவரைப் பிரதமரே தேர்ந்தெடுப்பார். அவர் முழு நேரப் பொறுப்பாக இதன் செயல்பாடுகளைக் கவனிப்பார். பல்வேறு துறைகளின் நிபுணர்கள் இதில் முழு நேர உறுப்பினர்களாகச் செயல் படுவார்கள். இருவர் பகுதி நேர உறுப்பினர்களாக இருப்பார்கள். திட்டக் குழுவில் உறுப்பினர்-செயலர் என்ற பதவியில் ஒருவர் இருந்தார். புதிய அமைப்பில் ‘தலைமை நிர்வாக அதிகாரி’ அந்த இடத்தில் இருப்பார். மத்திய அமைச்சர்கள் 4 பேர் இதில் பதவி வழி உறுப்பினர்களாகத் தொடர்வார்கள். இந்த அமைப்புக்குப் பெரியதொரு நிர்வாகக் குழுவும் ஏற்படுத்தப்படும். அனைத்து மாநிலங்களின் முதல்வர்களும் மத்திய அரசின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட மாநிலங்களின் துணை நிலை ஆளுநர்களும் இதன் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
அரசின் அறிவிப்பு, “இந்த அமைப்பு, கொள்கைகளை வகுக்கும் உயர் சிந்தனை அமைப்பாகச் செயல்படும். தேசிய வளர்ச்சி மன்றத்துக்குப் பதிலாக, இந்த அமைப்பு தேசியப் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வு காண உதவும். ஒத்துழைப்புடன் கூடிய கூட்டமைப்புத் தத்துவத்தை உயர்த்துவதே ‘நிதி ஆயோக்’கின் நோக்கம்” என்று சொல்கிறது.
கொள்கைகளை அமல்படுத்த எந்த வகையிலான தொழில்நுட்பங் களைப் பயன்படுத்துவது, நிதி ஆதாரத்தை எப்படிப் பெறுவது, எந்த அமைப்புகள் மூலம் செயல்படுத்துவது என்பதையெல்லாம் இந்த அமைப்பு முடிவெடுக்கும். திட்டமிடல் தனியாகவும் அதை அமல்படுத் தும் உத்திகள் தனியாகவும் பிரிக்கப்பட வேண்டும் என்ற அரசின் நோக்கம் இதில் உள்ளடங்கியிருக்கிறது. வகுக்கப்படும் திட்டங்களை விரைவாகவும் செறிவாகவும் நிறைவேற்ற இது உதவும் என்றும் நல்ல நிர்வாக நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் சொல்கிறார்கள். பொருந்திருந்து பார்ப்போம்.
எந்த ஒரு அமைப்பும் காலப்போக்கில், கொஞ்சம் கலகலத்துப் போவது இயல்பானது. அதற்காக ஒரு அமைப்பை முற்றிலுமாகக் கலைத்துவிடலாமா என்று கேட்டால், அப்படிக் கலைப்பது குழப்பத்தி லும் குளறுபடியிலும்தான் போய் முடியும் என்கின்றன வரலாற்று அனுபவங்கள். மத்திய திட்டக் குழுவின் பணிகள் முழுத் திருப்தி அளிக்கக்கூடியவை இல்லை என்றாலும், நவீன இந்தியாவின் உருவாக்கத்தில் அதன் பங்களிப்பை நாம் என்றைக்கும் மறக்க முடியாது. மேலும், இந்நாட்டில் வறுமை ஒழிப்புப் பணிகளிலும் அது ஆற்றிய பணியைப் புறந்தள்ளிவிட முடியாது. புதிய அமைப்பு எப்படிச் செயல்படும் என்று போகப்போகத்தான் தெரியும். இப்போதே இதை விமர்சிப்பதும் வரவேற்பதும்கூட ஒருவகையில் பொருத்தம் இல்லாமல்தான் இருக்கும்.
மாறிவரும் அரசியல், பொருளாதாரச் சூழல்களுக்கு ஏற்ப நம்முடைய திட்டமிடலிலும் மாற்றம் வேண்டும். அப்படியான மாற்றங்கள் ஆக்கபூர்வ மானதாகவும் துடிப்பான செயல்பாட்டுக்கு வழிவகுப்பதாகவும் இருக்க வேண்டும்.
மோடி அரசு தொடர்ந்து மாற்றங்களைப் பற்றியும் துடிப்பான செயல்பாட்டைப் பற்றியும் பேசுவது நன்றாக இருக்கிறது. ஆனால், அதிகாரப் பரவலாக்கலுக்குப் பதிலாக, அதிகாரங்கள் அனைத்தும் ஓரிடத்திலேயே போய்ச் சேர்வதுதான் கவலையைத் தருகிறது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT