Published : 13 Jan 2015 09:04 AM
Last Updated : 13 Jan 2015 09:04 AM

அரசுக்காகக் காத்திருக்கிறது காஷ்மீர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சட்டப் பேரவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு முடிவுகள் அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட 3 வாரங்களுக்கு மேல் ஆன பிறகும் புதிய அரசை ஏற்படுத்த அரசியல் கட்சிகளால் முடியவில்லை என்பது வருத்தத்தையே தருகிறது. பாகிஸ்தான் எல்லையிலிருந்து தாக்குதல், கடுமையான டிசம்பர் மாதக் குளிர், வாக்களித்தால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்ற காஷ்மீர் பிரிவினைவாதிகளின் எச்சரிக்கை என்ற மூன்றுவித இடையூறு களுக்கும் இடையே பெரும் எண்ணிக்கையில் வந்து வாக்களித்த வாக்காளர்களின் தீர்ப்பைவிட தங்களுடைய அரசியல் செல்வாக்கே முக்கியம் என்பதைப் போல அரசியல் கட்சிகள் இடைவிடாமல் அரசியல் பேரத்தில் ஈடுபடுவதை என்னவென்று சொல்வது?

இப்போதைய பேரவையின் ஆயுள்காலம் இந்த மாதம் 19-ம் தேதியுடன் முடிகிறது. இடைக்கால அரசின் முதல்வராக நீடித்திருக் கக்கூடிய ஒமர் அப்துல்லா, வெற்றி பெற்ற கட்சிகளின் அரசியல் பேரத்தை அம்பலப்படுத்தும் வகையில் முதல்வர் பதவியிலிருந்து டிசம்பர் 24-ம் தேதியே விலகிக்கொண்டார். எனவே, மாநிலத்தில் இப்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கிறது.

கட்சிகளுக்குள் பேச்சுவார்த்தைகள் நடக்காமலில்லை. ஆனால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு அளிக்கும் சிறப்பு அந்தஸ்து தொடர வேண்டும், ஆயுதப் படைகள் சிறப்பு சட்டத்தின் வரம்பிலிருந்து காஷ்மீர் மாநிலத்தை விலக்கி வைக்க வேண்டும் என்ற இரு அம்சங்களும் இந்தப் பேச்சு வார்த்தைகளில் முக்கிய இடம்பெறவில்லை. முதலமைச்சர் பதவி யாருக்கு என்பதில்தான் பிரச்சினையே. ஆறு ஆண்டுகளும் முதல்வர் பதவியில் பி.டி.பி.தான் நீடிக்க வேண்டும் என்று அக்கட்சி கோருகிறது. குறைந்தது 3 ஆண்டுகளுக்காவது தங்கள் சார்பில் ஒருவர் முதல்வர் ஆக வேண்டும் என்று பாரதிய ஜனதா பிடிவாதம் பிடிக்கிறது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் மாநிலத்தில் முதல் முறையாகத் தங்கள் கட்சியின் சார்பில் ஒருவர் முதல்வர் பதவிக்கு வர வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. இதனால்தான் முட்டுக்கட்டை நீங்காமல் இருக்கிறது. பி.டி.பி. ஆட்சியமைக்க ஆதரவு தரத் தயார் என்று தேசிய மாநாட்டுக் கட்சி அறிவித்ததுதான் நிலைமையை மோசமாக்கிவிட்டது.

ஜம்மு பகுதி மக்களின் நிலை இன்னும் சிக்கல். பாரதிய ஜனதாவை நிராகரித்தால் ஜம்மு பகுதி இந்துக்களை நிராகரித்ததைப் போலவும் ஆகிவிடும். ஏற்கெனவே ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தங்கள் பகுதி புறக்கணிக்கப்படுவதாக ஜம்முவும் லடாக்கும் தொடர்ந்து புகார் கூறிவருகின்றன. ஆட்சியிலும் தங்களுக்கு உரிய பங்கு தரப்பட வில்லை என்பது அவர்களுடைய ஆதங்கம். சில காலத்துக்கு முன்னால் ஜம்முவையும் லடாக்கையும் பிரித்து மத்திய அரசின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவந்தால்தான் தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்றுகூட அப்பகுதியிலிருந்து கோரிக்கை எழுந்தது.

சொந்த ஆதாயங்களைக் கைவிட்டு, மாநில நலனை மட்டும் உத்தேசித்து பேச்சு நடத்தினால் தீர்வு எளிதில் கிட்டிவிடும் என்பதில் சந்தேகமில்லை. முன்னுதாரணமாக எல்லா அரசியல் கட்சிகளும் சேர்ந்து ஒரு தேசிய அரசுபோல அனைத்துக் கட்சி ஆட்சி அமைத்தால் என்ன தவறு என்பதே ஜனநாயகத்தின் மீது அக்கறையுள்ளோரின் கேள்வி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x