Published : 02 Jan 2015 09:55 AM
Last Updated : 02 Jan 2015 09:55 AM
ஏர்ஏசியா விமானத்துக்கு நிகழ்ந்த விபத்து நம் நெஞ்சை உலுக்கக் கூடியது. மலேசிய விமானம் எம்.எச். 370-ன் புதிர் இன்னும் அவிழ்க்கப்படாத நிலையிலும், மற்றுமொரு மலேசிய விமானம் எம்.எச்-17 உக்ரைனில் சுட்டுவீழ்த்தப்பட்ட நிலையிலும், ஆண்டின் இறுதியில் இப்படியொரு துயரம்.
இந்தோனேசியாவின் சுரபயாவிலிருந்து சிங்கப்பூரை நோக்கிச் சென்ற ஏர்ஏசியா விமானம் காணாமல் போனதிலிருந்து, இரண்டு நாட்கள் கழித்து விமானத்தின் உடைந்த பாகங்களும் 40 பேரின் உடல்களும் கடலில் மிதப்பது கண்டறியப்பட்டது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கின்றன.
விமானத்துக்கும் ரேடாருக்கும் இடையேயான தொடர்பு விடுபட்டுப் போன பிறகு, ஏராளமான ஊகங்கள் முன்வைக்கப்பட்டன. மலேசிய விமானத்துக்கு நேர்ந்ததுபோல் நேர்ந்திருக்கக் கூடும் என்ற அனுமானம் அதிகம் கூறப்பட்டது. எனினும் எந்த அனுமானமும் ஆசுவாசப்படுத்தக் கூடியதாக இல்லை. இந்தச் சம்பவத்தை மலேசிய விமானம் மாயமான சம்பவத்துடன் வேறுபடுத்தும் காரணங்கள் ஆரம்பத்திலேயே கண்டறியப் பட்டன. மோசமான வானிலை காரணமாக ஏர்ஏசியா விமானத்தின் விமானிகள் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு, 32 ஆயிரம் அடிகள் உயரத்திலிருந்து 38 ஆயிரம் அடிகள் உயரத்துக்குச் செல்லலாமா என்று அனுமதி கேட்டிருக்கிறார்கள். அந்த வான் தடத்தில் வேறொரு விமானத்தின் பாதையும் குறுக்கிட்டதால் அனுமதி மறுக்கப்பட்டது. அதற்குப் பிறகுதான் ரேடார் தொடர்பிலிருந்து விடுபட்டிருக்கிறது அந்த விமானம்.
விமானம் மாயமான தகவல் கிடைத்ததிலிருந்து தேடல் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. விமானம் புயலில் சிக்கிக்கொண்டு கடலில் மூழ்கி யிருக்கலாம் என்று சில நிபுணர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். ஆனால், விமானத்திலிருந்து ‘ஆபத்துக் கால’ அழைப்பு வராமல் உயரத்தை அதிகரிப்பதுகுறித்து அனுமதி மட்டும் கேட்டிருப்பது இந்த விபத்தை மேலும் மர்மமாக ஆக்குகிறது.
மலேசிய விமானம்போல் இந்த விமானம் பாதை மாறியதுபோல் தெரிய வில்லை என்பதால் தேடலின் திசையும் பரப்பும் சற்றுத் திட்டவட்டமாகத் தெரிந்தது. ஜாவா கடல் பரப்பில் தேடல் முடுக்கிவிடப்பட்டது. தேடலின் முடிவில்தான் விமானத்தின் உடைந்த பாகங்களும் கிட்டத்தட்ட 50 பேரின் உடல்களும் மிதப்பது கண்டறியப்பட்டன. விமானத்துக்கு ஒன்றும் ஆகியிருக்காது என்ற நம்பிக்கையில் இருந்த பயணிகளின் உறவினர்களின் இதயங்கள் நொறுங்கிப்போயின.
விபத்து நடந்திருக்கும் விதத்தைப் பார்க்கும்போது, யாரும் உயிருடன் மிஞ்சியிருக்க வாய்ப்பில்லை என்பது நம் மனதைக் கனக்கச் செய்கிறது. இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்பதை இனிமேல்தான் கண்டறிய வேண்டும். விமானத்தின் கருப்புப் பெட்டி கிடைத்தால் பல உண்மைகள் தெரியவரும்.
மலேசிய விமானம் மாயமானது, அல்ஜீயர்ஸ் விமான விபத்து, உக்ரைனில் மலேசிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது ஆகிய ஒரு சில துயரச் சம்பவங்களைத் தவிர, ஒப்பீட்டளவில் 2014-ம் ஆண்டில் விமான விபத்துகள் குறைவு என்கிறது ஒரு புள்ளிவிவரம். ஆனால், பயணிகளின் உறவினர்களைப் பொறுத்தவரை இந்தப் புள்ளி விவரங்களால் எந்த ஆறுதலையும் அளித்துவிட முடியாது. ஒரு உயிர் என்றாலும் அது ஈடுகட்ட முடியாத இழப்பே. தொழில்நுட்பத்தின் போதாமையையும் தோல்விகளையுமே விபத்துகள் நமக்கு மேலும் மேலும் உணர்த்துகின்றன. ‘வீட்டுக்கு வாருங்கள் அப்பா’ என்று இறைஞ்சிய விமானியின் மகளுடைய அழைப்புக்குப் பதில் இல்லாமல் போனது பெரும் துயரம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT