Published : 25 Dec 2014 10:14 AM
Last Updated : 25 Dec 2014 10:14 AM

மக்களின் நம்பிக்கை வீண்போகக் கூடாது

ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் சட்டப் பேரவை பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற நான்கு முனைப் போட்டியில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. குறைந்தபட்சம் இரண்டு கட்சிகள் அல்லது மூன்று கட்சிகள் சேர்ந்துதான் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஜம்மு பகுதியில் இந்து வாக்காளர்களின் ஆதரவால் பாரதிய ஜனதா 25 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. லடாக், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் முஸ்லிம் வாக்காளர்கள் மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி.) - 28, தேசிய மாநாடு-15, காங்கிரஸ்-12 ஆகிய கட்சிகளுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

கடுமையான குளிர் பருவத்திலும் பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளின் அச்சுறுத்தலுக்கு இடையிலும் வாக்களித்த ஜம்மு-காஷ்மீர் மாநில வாக்காளர்கள், தேர்தலைச் சுமுகமாகவும் வெற்றிகரமாகவும் நடத்திய தேர்தல் ஆணையம், ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். மத அடிப்படையில் வாக்குகள் பிரிந்திருப்பதைப் போல ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவுகள் அமைந்துவிட்டன.

இந்தப் பிளவு மேலும் நீடிக்காதபடி புதிய அரசு அனைத்துத் தரப்பு மக்களையும் பிரதிநிதித் துவப்படுத்தும் வகையில் அமைய வேண்டும். மக்கள் ஜனநாயகக் கட்சி, தேசிய மாநாடு ஆகிய இரு கட்சிகளுடனும் மாநிலத்தில் ஆட்சியில் இருந்திருக்கிறது காங்கிரஸ்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, மத்திய பாரதிய ஜனதா அரசில் தேசிய மாநாட்டுக் கட்சி பங்கு வகித்திருக்கிறது. முரண்பாடுகளைக் களைந்து இந்தக் கட்சிகள் தங்களுக்கிடையே சாத்தியமாகும் கூட்டணியைப் பற்றி யோசிக்கவில்லை என்றால், இறுதியில் ஆளுநர் ஆட்சியைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விடும். அப்படி ஆகுமென்றால், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து, பெரும் கனவுடன், துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பதிலாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தைத் தேர்ந்தெடுத்த மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைத்ததுபோலாகிவிடும்.

பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல், தீவிரவாதிகளின் ஊடுருவல், சமீபத்திய பெருமழை - வெள்ளம் போன்ற காரணங்களால் மாநிலம் அசாதாரணமான சூழ்நிலைகளைச் சந்தித்துவருகிறது. வெகுகாலமாகப் பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய இந்த மாநிலத்தின் நலனுக்காக தேசிய அரசுபோல, பல கட்சி அரசு பதவிக்கு வருவது தேவையற்ற அரசியல் போராட்டங்களைத் தடுப்பதுடன், பிரிவினை சக்திகளைச் செயலற்றதாகச் செய்ய முடியும். ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேரவையில் பாரதிய ஜனதா கட்சியால் தனிப்பெரும்பான்மையைப் பெற முடியாவிட்டாலும், கூட்டணிக் கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது.

ஜார்க்கண்ட் என்ற மாநிலம் அமைக்கப்பட்டதிலிருந்து இப்போதுதான் ஒரே கட்சிக்கு இவ்வளவு அதிகமான தொகுதிகள் கிடைத்திருக்கின்றன. பிற கட்சிகளுடன் சேர்ந்து காங்கிரஸ் கூட்டணி அமைக்காததால் வலுவான எதிர்ப்பு இல்லாமல்போய்விட்டது.

மத்தியில் ஆறு மாத ஆட்சிக்குப் பின்னால், பாஜக சந்தித்திருக்கும் இந்தத் தேர்தலின் முடிவுகள் அதற்கு அசைக்க முடியாத வெற்றியைப் பறித்துத்தரவில்லை. அதேபோல் பாஜகவின் கை மேலோங்கி வருவதற்கு ஈடாக மேற்கண்ட இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் என்ன செய்திருக்கின்றன என்பதைப் பார்க்கும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. மக்களின் நம்பிக்கையை முழுமையாகப் பெறாததன் விளைவே இந்த இழுபறி என்பதை இனியாவது இந்தக் கட்சிகள் மறந்துவிடாமல் இருக்கட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x