Published : 23 Dec 2014 09:02 AM
Last Updated : 23 Dec 2014 09:02 AM
புவியின் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்துவருவதையும் அதனால் பருவ காலங்களில் ஏற்பட்டுவரும் மாறுதல்களையும் தடுப்பது குறித்து ஆராய்வதற்கான இருபதாவது சர்வதேச மாநாடு பெரு நாட்டின் லிமா நகரில் சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது. உறுதியான முடிவுகள் இல்லாமலே இந்த மாநாடு முடிந்திருக்கிறது.
வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் ஒரே அளவுகோலை வைத்துக்கொள்ளக் கூடாது என்ற வாதம் இந்த மாநாட்டில் வலுவாக வைக்கப்பட்டிருக்கிறது. வளரும் நாடுகளின் எண்ணிக்கைதான் அதிகம் என்பதாலும், இந்தியா போன்ற நாடுகளின் குரலுக்கு இத்தகைய மாநாடுகளில் செல்வாக்கு இருப்பதாலும் அவற்றின் கருத்து ஏற்கப்பட்டிருப்பது மட்டுமே ஆறுதலான விஷயம். புவி வெப்பமாதலுக்குக் காரணமே தங்களுடைய தொழில்வளர்ச்சி நடவடிக் கைகள்தான் என்பதை வளர்ந்த நாடுகளும் உணர்ந்திருப்பதால் வளரும் நாடுகளின் கருத்துக்கு செவிசாய்த்துள்ளன.
வளரும் நாடுகளுக்குத்தான் இரட்டைக் கடமைகள் இருக் கின்றன. தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்த தொழில் நடவடிக்கைகளை மேலும் முடுக்கிவிட வேண்டியிருக்கிறது. அதற்கு எதிர்புறத்தில், காடுகளையும் நதிகளையும் காப்பாற்ற வேண்டிய கடமையும் இருக்கிறது.
வளர்ச்சியடைந்த நாடுகள் மிகவும் வசதியான இடத்தில் இருந்து கொண்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பத்துக்கு மாறிவிட்டன. ஆனால், வளர்ச்சியையே காணாத நாடுகளை அல்லது வளர்ச்சியில் பின்தங்கியிருக்கும் நாடுகளை நீங்களும் எங்களைப் போலவே மாறிவிடுங்கள் என்று வளர்ந்த நாடுகள் கட்டளையிடுவது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும்? ஒருவேளை சாப்பாடுகூட இல்லாமல் சிரமப்படும் ஏழை நோயாளி ஒருவரைப் பணக்காரர் களுக்கான அதிநவீனத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளச் சொல்வதுபோலத்தான் இது. எனவேதான், வளர்ச்சி அடைந்த நாடுகளின் அணுகுமுறையில் தற்போது ஏற்பட்டிருக்கும் மாற்றம் சற்று நம்பிக்கையை அளிக்கிறது.
சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு மின்சார உற்பத்தியும் ஒரு காரணம். சுற்றுச்சூழலை எந்த வகையிலும் மாசுபடுத்தாத வழிமுறைகளை மின்சார உற்பத்தியில் கையாள்வதற்கான நிதியாதாரம் இல்லாமல் வளரும் நாடுகள் திணறுகின்றன. எனவே, நிலக்கரியைப் பயன்படுத்திக் குறைந்த செலவில் மின்சாரத்தைத் தயாரித்து, பிற தொழில்களுக்கு அளித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. படிப்படியாக தூய்மை யான மின்சாரத் தயாரிப்பை அதிகரிப்பதாகவும் அவை உறுதி அளித்துள்ளன.
தங்களுடைய ஆலைகளிலிருந்து வெளியேறும் கரிப்புகையைக் கணிசமாகக் குறைப்பதென்று அமெரிக்காவும் சீனாவும் கடந்த நவம்பரில், இந்த மாநாட்டுக்கு முன்னதாகத் தனியாகச் சந்தித்து ஒரு முடிவுக்கு வந்தது மிகவும் வரவேற்கப்பட்டது. புவி வெப்பமாதலைக் கணிசமாகக் குறைக்க இவ்விரு நாடுகளின் முடிவும் உதவும் என்பதில் சந்தேகமில்லை. கரிப்புகை வெளியீட்டைக் குறைத்துக்கொள்கிறோம். ஆனால், மாற்று எரிசக்தி தயாரிப்புக்காகும் செலவுக்குப் பணம் தர வேண்டும் என்று வளரும் நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. 2015 நவம்பரில் இது தொடர்பாக புதிய சர்வதேச உடன்பாடு ஏற்படக்கூடும் என்று தெரிகிறது.
சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வழிமுறைகளை எல்லா நாடுகளும் கடைப்பிடிப்பதே புவியைக் காப்பாற்றும் நல்ல வழியாக இருக்க முடியும். ஆனால், வளர்ச்சியடைந்த நாடுகள் அதற்குத் தேவையான நிதியுதவியை அளிப்பதும், சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பத்தில் தனது ஏகாதிபத்தியத்தை வளரும் நாடுகள் மீது திணிக்காமல் இருப்பதும் மிகமிக அவசியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT