Published : 31 Aug 2017 09:03 AM
Last Updated : 31 Aug 2017 09:03 AM

டோக்லாம் மோதல் முடிவுக்கு வந்தாலும்...

ந்தியா, பூடான், சீனா ஆகிய மூன்று நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் டோக்லாமில் கடந்த பத்து வாரங்களாக நிலவிய மோதல் போக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. டோக்லாம் மோதல் வளர்ந்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போரில் கொண்டுபோய் விட்டுவிடுமோ என்ற அச்சம் நிலவிய நிலையில் இந்த முடிவு சற்றே நிம்மதியைத் தருகிறது.

டோக்லாம் எல்லையில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்கள் வெகு விரைவாகப் பாசறைக்குத் திரும்ப அழைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று புதுடெல்லி அறிவித்துள்ளதையடுத்து அங்கிருந்து இந்தியத் துருப்புகள் விலகிவிட்டனர். ஆனால், சீனத் துருப்புகள் தொடர்ந்து அந்தப் பகுதியில் காவல் காக்கின்றனர் என்று பெய்ஜிங்கில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இரு அறிக்கைகளும் ஒன்றுக்கொன்று பொருந்துவனவாகவும் விவரமாகவும் இல்லை. அறிக்கைகளில் உள்ள விவரங்களைவிட, சமரசமாகப் போவது என்று இரு நாடுகளும் தீர்மானித்திருப்பதற்குத்தான் நாம் அதிகம் முக்கியத்துவம் தர வேண்டும். குளிர்காலம் தொடங்குவதற்கு முன்னால் பூசலை முடித்துவையுங்கள் என்று பூடான் அரசு விடுத்த வேண்டுகோளுக்கு இரு நாடுகளும் செவிசாய்த்திருக்கின்றன.

சீனாவில் செப்டம்பர் 3-5-ல் நடைபெறவுள்ள ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்நிலையில் இந்த சுமுக முடிவு, நட்புணர்வை வலுப்படுத்த உதவியாக இருக்கும். பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்திக்கும்போது, கடந்த சில மாதங்களாக இருதரப்பு உறவில் ஏற்பட்ட சேதத்தைச் சீர்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கைலாஷ்-மானசரோவர் யாத்திரைக்குச் செல்லும் இந்திய யாத்ரிகர்களை நாது லா பாதை வழியாக அனுமதிக்க முடியாது என்று, டோக்லாம் சச்சரவுக்குப் பிறகு எடுத்த முடிவை சீனா மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்தியா-பூடான்-சீனா இடையில் படாங் லா (டோக்லாம்) அருகில் உள்ள மூவெல்லைச் சந்திப்பு தொடர்பாகப் பேசி இறுதி முடிவு எடுக்கப்பட்டுவிடவில்லை என்பது சீன நிலை. இந்தியாவும் இது இறுதி செய்யப்பட்டுவிட்டதாகக் கூறவில்லை. அதே சமயம் சர்ச்சைக்குரிய பகுதிகளில் தீர்வு ஏற்படும்வரை எதையும் மாற்றுவதில்லை என்று இதற்கு முன்னர் நடந்த பேச்சுகளில் ஒப்புக்கொள்ளப்பட்டதைத் தொடர வேண்டும் என்பதே இந்திய நிலை.

2013-ல் இந்தியாவும் சீனாவும் செய்துகொண்ட எல்லைப் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டு உணர்வின் அடிப்படையில் இரு நாடுகளும் பேச வேண்டும். இரு நாடுகளுக்கும் நடுவில் 3,488 கிலோ மீட்டர் நீளத்துக்கு நில எல்லை இருப்பதால் சுமுகமான அணுகுமுறை மிகமிக அவசியம்.

டோக்லாம் நெருக்கடி மறுபடியும் தோன்றும்போது இந்தியத் தரப்பு தயார்நிலையில் இருக்க வேண்டும். சீனாவுடனான எல்லைப் பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்த்துக்கொள்ள முயற்சிகள் செய்ய வேண்டிய அதே வேளையில் எந்தவித நடவடிக்கைக்கும் தயாராக இருப்பதும் அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x