Published : 18 Nov 2014 09:22 AM
Last Updated : 18 Nov 2014 09:22 AM
பெட்ரோலியப் பொருட்களின் நுகர்வைக் கட்டுப்படுத்துவதில், ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட செயல்திட்டத்தை இந்திய அரசிடமிருந்து அத்தனை எளிதாக எதிர்பார்க்க முடியாதுபோல் இருக்கிறது.
பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு ரூ.1.50 உயர்த்தியிருக்கிறது அரசு. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ள நிலையில், இந்தியாவிலும் பெட்ரோலியப் பொருட்களின் விலை மேலும் சரிந்திருக்க வேண்டும்.
ஆனால், அரசின் வரி விதிப்பால் நுகர்வோருக்குக் கிடைக்க வேண்டிய ஆதாயம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. அதாவது, பெட்ரோலியப் பொருட்களின் விலையை நிர்ணயிக்கும் பொறுப்புதான் தனக்கு இல்லையே தவிர, வரியை அதிகரிக்கும் உரிமை தன்னிடம் இருக்கிறது என்று காட்டியிருக்கிறது அரசு.
இந்த வரி விதிப்பு உயர்வுக்கு டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கும் காரணம் இது. 2014-15 நிதியாண்டில், அரசின் நிதிநிலைப் பற்றாக்குறையை மொத்த உற்பத்தி மதிப்பில் 4.1% ஆகக் குறைக்க வேண்டும் என்று முன்னர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. புதிய அரசு பதவியேற்ற பிறகும் அதற்கு முன்பும் ஏற்பட்ட எதிர்பாராத செலவுகளால் பற்றாக்குறைக்கு அனுமதிக்கப்பட்ட தொகையில் 80%, முதல் 6 மாதங்களிலேயே செலவாகிவிட்டது. இனி, எஞ்சிய மாதங்களுக்கு அரசின் செலவுகளை இறுக்கிப் பிடித்தால்தான் வருவாயைப் பெருக்கி அந்த இலக்கை எட்ட முடியும். தவிர, வருவாயைப் பெருக்க, நேர்முக வரி விதிப்புகளை உயர்த்தினால் அரசை ஆதரிக்கும் விவரம் தெரிந்த வாக்காளர்களின் கோபம் உடனே எதிரொலிக்கும். ஆகையால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கும் சமயத்தை அரசு பயன்படுத்திக்கொண்டது.
2014 ஆகஸ்ட் முதல் பெட்ரோலின் விற்பனை விலை தொடர்ந்து 6 முறையும் கடந்த அக்டோபர் முதல் டீசலின் விற்பனை விலை 2 முறையும் குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த வரி உயர்வால் சில்லறை விலை இப்போதைக்கு உயராது. பெட்ரோலிய நிறுவனங்கள் வார இறுதியில் அறிவிக்கவிருந்த மற்றொரு விலைக் குறைப்பைக் கைவிட்டு, இந்த வரி உயர்வுக்கு ஈடுகட்டிவிட்டன.
பெட்ரோலியப் பொருட்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த, வரி விதிப்புக் கொள்கையை ஓர் ஆயுதமாகக் கையாள்வது உலகெங்கும் உள்ள நடைமுறை. ஆனால், அந்த ஆயுதம் சரியான இலக்குகளை நோக்கிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே நம்முடைய அக்கறை. மீண்டும் மீண்டும் நாம் கேட்பது ஆடம்பர சொகுசு கார்களில் செல்பவர்களுக்கும் மொபெட்டுகளில் செல்பவர்களுக்கும் ஒரே மாதிரியான வரிவிதிப்பு சரிதானா என்பதுதான். பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்களை நம்முடைய அரசின் பெட்ரோலியக் கொள்கைகள் எந்த அளவுக்கு ஊக்கப்படுத்துகின்றன அல்லது தனிப் போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்களை எந்த அளவுக்குக் கட்டுப்படுத்துகின்றன?
மேலும், பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதிச் சுமையைக் கட்டுப்படுத்தவும் பன்னோக்குத் திட்டங்கள் நமக்கு வேண்டும். ஓர் உதாரணம், பெட்ரோலியப் பொருட்களுடன் எத்தனால் கலந்து விநியோகிக்கும் திட்டத்தைப் பற்றி எவ்வளவு காலமாக நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்? எரிசக்தித் துறை, விலை உயர்வு எனும் ஒரு உத்தியை மட்டுமே பிடித்துக்கொண்டிருப்பதிலிருந்து விடுபட வேண்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT