Published : 03 Dec 2013 12:00 AM
Last Updated : 03 Dec 2013 12:00 AM
விவசாயம் எப்படி மழையை நம்பி இருக்கிறதோ அப்படியே கொள்முதல் விலையை நம்பி இருக்கிறது கரும்புச் சாகுபடி. நாடு சுதந்திரம் அடைந்தபோது கரும்பு உற்பத்தியை ஊக்குவிக்கவே கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகள் தொடங்கப்பட்டன. கூட்டுறவுச் சர்க்கரை அலைகள் அளித்த ஒத்துழைப்பினால் சர்க்கரை உற்பத்தி அதிகரித்து இப்போது தன்னிறைவு பெற்றிருக்கிறோம்.
கரும்பிலிருந்து வெல்லம், சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. அடுத்தது மொலாசஸ் என்று அழைக்கப்படும் கருப்பஞ்சாற்றுக் கசண்டு கிடைக்கிறது. இது மதுபான உற்பத்தியில் முக்கியமான மூலப்பொருள். துணைப்பொருளாக எத்தனாலும் தயாரிக்கலாம். இதை பெட்ரோலுடன் கலந்து எரிபொருளாகப் பயன்படுத்தலாம். சர்க்கரையிலிருந்து சாக்லேட்டுகள் உள்ளிட்ட பல்வேறு இனிப்புகளும் மருந்தும் தயாரிக்கப்படுகின்றன. கரும்பின் பயன்பாடுகள் எண்ணிலடங்காது.
நாடு முழுக்கச் சுமார் 700 சர்க்கரை ஆலைகள் இருக்கின்றன. நேரடியாக 5 லட்சம் தொழிலாளர்கள் ஆலைகளில் பணிபுரிகின்றனர். ஆண்டுக்கு சுமார் 5 கோடி விவசாயிகள் கரும்பு பயிரிடுகின்றனர். கரும்புச் சாகுபடியில் சுமார் 25 கோடி விவசாயத் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். இவ்விதம் வேலைவாய்ப்பிலும் கரும்பு முக்கிய இடம் வகிக்கிறது.
இவ்வளவு இருந்தும் சர்க்கரைத் தொழிலில் மத்திய அரசு நிலையான கொள்கைகளைக் கடைப்பிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இத்துறையில் தனியார் ஆலைகளும் கூட்டுறவு ஆலைகளும்தான் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ‘மதுபான லாபி’ போலவே ‘சர்க்கரை லாபி’யும் அரசியலில் மிகுந்த செல்வாக்கு கொண்டது.
கரும்புக் கொள்முதல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசுகளிடம் தரப்பட்டிருக்கிறது. மத்திய அரசு தன்னுடைய பொறுப்பைத் தட்டிக்கழித்து இதிலிருந்து விலகிக்கொண்டுவிட்டது என்றே பொருளாதார அறிஞர்கள் கருதுகின்றனர்.
கரும்பு அரைவைப் பருவத்தில் எல்லா மாநிலங்களிலும் ஏற்படும் மோதல் உத்தரப் பிரதேசத்திலும் சமீபத்தில் ஏற்பட்டது. “அரசு நிர்ணயித்த விலை கட்டுப்படியாகாது, தர முடியாது” என்று ஆலை நிர்வாகங்கள் முரண்டுபிடித்தன. “முந்தைய பருவ நிலுவையே பாக்கியிருக்கிறது, இந்த விலையையும் குறைக்க ஒப்புக்கொள்ள முடியாது” என்று கரும்புச் சாகுபடியாளர்கள் உறுதியாகத் தெரிவித்தனர். சுமார் 10 நாள்களாக தேக்கநிலையே காணப்பட்டது. சர்க்கரை ஆலைகளுடன் பேச்சு நடத்திய மாநில அரசு, அவற்றின் பொருளாதாரச் சுமையை ஓரளவுக்குக் குறைக்கும் வகையில் கரும்பு ஏற்றிய லாரிகள், டிராக்டர்களுக்கான நுழைவு வரி, கரும்புக் கொள்முதல் வரி, கரும்பு சங்க கமிஷன் ஆகியவற்றை ரத்துசெய்ய முன்வந்தது. இதனால் மாநில அரசுக்கு சுமார் ரூ.500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். இதன் பிறகு சமரசம் ஏற்பட்டது.
மத்திய அரசு முன்னர் ஒப்புக்கொண்டபடி சர்க்கரை ஆலைகளில் எத்தனால் தயாரிக்கப்படவும், பெட்ரோலில் கலந்து எரிபொருளாகப் பயன்படுத்தப்படவும் வழி காணப்பட்டாலே சர்க்கரை ஆலைகளுக்கும் விவாயிகளுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும். எல்லாவற்றிலும் பிற மாநிலங்களுக்கு வடிகாட்டியாக இருக்கும் தமிழ்நாடு அரசு இதிலும் முன்னோடியாகத் திகழ வேண்டும் என்பது தமிழகக் கரும்புச் சாகுபடியாளர்களின் எதிர்பார்ப்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT