Published : 23 Sep 2016 09:59 AM
Last Updated : 23 Sep 2016 09:59 AM

கலவரக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும்!

காவிரி விவகாரத்தின் தொடர்ச்சியாக கர்நாடகத்தில் நடந்த கலவரங்கள் தொடர்பான வழக்குகள் கையாளப்படும் விதத்தைப் பார்க்கும்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்த விஷயத்தில், கர்நாடக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் உண்மையில் கர்நாடகத்தின் எதிர்காலத்துடன் தொடர்புடையவை என்பதை இந்நேரத்தில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

ஏனைய பல மாநிலங்களைப் போல அல்லாமல், கர்நாடகத்தைப் பொறுத்த அளவில் தமிழர்கள் அங்கு ஆகப் பெரும்பான்மை சிறுபான்மையினர். கிட்டத்தட்ட மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு ஏழு பேரிலும் ஒருவர் தமிழ் பேசுபவர். மொத்தமாக உள்ள சுமார் ஒரு கோடித் தமிழர்களில் பெரும்பான்மையினர் பூர்வீகமாக அல்லது பல தலைமுறைகளாக அங்கு வசித்துவருபவர்கள். கர்நாடகத்தின் வளர்ச்சியிலும் அதன் மேம்பாட்டிலும் மிக முக்கியப் பங்கு வகிப்பவர்கள். ஒருபுறம் பொருளாதாரரீதியாகப் பெரும் சங்கடங்களை எதிர்கொண்டுவரும் கர்நாடக அரசு, மறுபுறம் அதன் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் சமூகங்களை இன்னமும் தம்மில் ஒரு பகுதியாகப் பார்க்காமல், இன துவேஷத்தோடு அணுகுபவர்கள் விஷயத்தில் மௌனமாக இருப்பது விசித்திரமானது; கண்டனத்துக்குரியது.

ஒரு உதாரணத்துக்கு, இந்தக் கலவரங்களின்போது கே.பி.என். பஸ்கள் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தை எடுத்துக்கொள்வோம். கே.பி.என். தமிழகத்தைச் சேர்ந்தவரால் நடத்தப்படுவதாலேயே அது தமிழகம் சார்ந்த நிறுவனம் மட்டுமே இல்லை. கர்நாடகத்திலும் அந்நிறுவனத்துக்கு ஊழியர்கள் இருக்கிறார்கள். அந்நிறுவனத்தின் வருவாயிலிருந்து கர்நாடகமும் பயனடைந்திருக்கிறது. செப்டம்பர் 12-ம் தேதி மாலை பெங்களூரு டிசோசா நகரில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கே.பி.என். நிறுவனத்துக்குச் சொந்தமான 42 பஸ்கள் எரிக்கப்பட்டன.

இரு மாநிலங்களுக்கு இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டபோதே கலவரம் மூண்டால், எவையெல்லாம் இலக்குகள் ஆகும் என்பதை யோசித்து, முன்கூட்டி எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்திருந்தால், இந்தச் சம்பவத்தைத் தவிர்த்திருக்க முடியும். ஆனால், அப்படி நடக்கவில்லை. இப்போது, அந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கைதுசெய்யப்பட்டிருக்கும் இளம்பெண் அளித்திருக்கும் வாக்குமூலம், எவ்வளவு மோசமாக இந்த விஷயத்தை அரசு கையாண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. ரூ.100 + ஒரு பிரியாணிப் பொட்டலத்துக்காக கலவரக்காரர்களுடன் இணைந்து இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாகச் சொல்லியிருக்கிறார் அந்தப் பெண். இந்தப் பாதுகாப்பற்ற சூழலை ஒரு முதலீட்டாளர் எப்படிப் பார்ப்பார் என்பதை கர்நாடக அரசு யோசிக்க வேண்டும்.

சமூகங்களுக்கு இடையிலான பிணைப்பும் பரஸ்பர பங்களிப்பும் அமைதியான சூழலுமே உண்மையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தமிழர்கள் - கன்னடர்கள் இடையே வரலாறு நெடுகிலும் சிறப்பான உறவு இருந்திருக்கிறது. இரு சமூகங்களின் இடையே இன துவேஷத்தைத் தூண்டிவிடுபவர்கள் ஒரு சின்ன பிரிவினர் - அவர்கள் எவர் என்றாலும் அவர்கள் மீது அந்தந்த மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுப்பது அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x