Published : 05 Aug 2016 09:23 AM
Last Updated : 05 Aug 2016 09:23 AM
ஒரு முதல்வர் ராஜினாமா செய்வதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், தனது வயதைக் காரணம் காட்டி பதவி விலகியிருக்கிறார் குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல். அவரது ராஜினாமாவை பாஜக தலைமை ஏற்றுக்கொண்டிருக்கிறது. கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவின் தலைமையில் அடுத்த முதல்வர் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார்.
முக்கியப் பொறுப்புகளை வகிப்பவர்கள் 75 வயதைக் கடந்தால் தானாக முன்வந்து பதவி விலக வேண்டும் என்ற நடைமுறை, பாஜகவில் கடந்த சில மாதங்களாக அமலில் இருந்துவருகிறது என்று சுட்டிக்காட்டியிருக்கும் ஆனந்திபென், வரும் நவம்பர் மாதம் தனக்கு 75 வயது நிறைவடைவதால் இந்த முடிவை எடுத்ததாகக் கூறியிருக்கிறார். 75 வயது வரைதான் ஒருவர் அமைச்சர் பதவிகளில் இருக்கலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்த நிபந்தனையின்படி பார்த்தால், அவர் சொல்லும் காரணம் ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால், குஜராத் அரசு நெருக்கடிகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டிருக்கும் நிலையில், அவரது விலகலுக்குக் காரணம் வயது மட்டுமல்ல என்பது எல்லோருக்கும் தெரியும்.
குஜராத்தில் இறந்த பசுவின் தோலை உரித்த தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்வுகளைக் கிளப்பியிருக்கிறது. அகமதாபாதில் தலித் மக்கள் மாபெரும் போராட்டம் நடத்தியதற்கு மறுநாள் தனது ராஜினாமா முடிவை அறிவித்தார் ஆனந்திபென். பசுவைக் காப்பதாகக் கூறிக்கொள்ளும் வலதுசாரி அமைப்புகளால் தலித் மக்கள் தாக்கப்படும் சம்பவங்களிலிருந்து மத்திய அரசும் குஜராத் அரசும் விலகியே நிற்கின்றன என்று தலித் மக்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். தலித் மக்கள் தனிமைப்படுத்தப்படுவதற்கு பாஜக பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்.
2001 முதல் 2014 வரை நரேந்திர மோடியின் இரும்புப் பிடிக்குள் இருந்த ஒரு மாநிலத்தில் இப்படியான ஒரு நெருக்கடி உருவாகியிருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. உத்தரப் பிரதேசத்தில் 2017-ல் நடைபெறவிருக்கும் தேர்தல் முக்கியமானதுதான் என்றாலும், குஜராத்தில் அடுத்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் தேர்தல் மோடிக்கும் பாஜகவுக்கும் மிக முக்கியமானது என்பதை மறுக்க முடியாது. மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி, குஜராத்தின் வடோதரா என்று இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மோடி, வடோதரா மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, வாரணாசியைத் தக்கவைத்துக்கொண்டார். எனினும், குஜராத் மாநிலம் தான் அவரது செல்வாக்கு, அதிகாரத்தின் வேராக இருக்கிறது.
ஹர்திக் படேல் தலைமையில் நடந்த பாடீதார் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஆனந்திபென் அரசு தவறிவிட்டது. திறனற்ற அவரது அணுகுமுறை மாநில அரசுக்குள்ளேயே அவருக்கு எதிரிகளை உருவாக்கிவிட்டது. குஜராத்தில் பாஜகவின் செல்வாக்கில் பாடீதார் சமூகத்தினரின் பங்கு மிக அதிகம். குஜராத்தில் சத்திரியர்கள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் பலமாக இருந்த காங்கிரஸ் கூட்டணியை வெல்வதற்கு பாஜகவுக்குத் துணையாக இருந்தது அந்தச் சமூகத்தினர்தான். இந்நிலையில், இடஒதுக்கீடு கோரி பாடீதார்கள் நடத்திய போராட்டங்கள் பாஜக முன்வைக்கும் வளர்ச்சிப் பிம்பத்தை ஆட்டம்காண வைத்தன.
புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு முன்னதாகக் கட்சியின் செல்வாக்கை மீட்க வேண்டிய கடினமான பணி காத்திருக்கிறது. அதேசமயம், வெறுமனே முதல்வர்களை மாற்றுவதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. பாஜக தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய தருணம் இது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT