Published : 22 Feb 2017 09:19 AM
Last Updated : 22 Feb 2017 09:19 AM

ராஜாங்கரீதியில் அடக்குங்கள் வட கொரியாவை!

மீண்டும் ஒரு ஏவுகணைச் சோதனை மூலம் சர்வதேசத்தைச் சீண்டியிருக்கிறது வட கொரியா. கடந்த ஆண்டும் அதிபர் கிம் ஜோங்-அன் தலைமையிலான அரசு 12-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இதேபோல ஏவியதுடன், அமெரிக்காவை இலக்காகக் கொண்டு செல்லக்கூடிய, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையையும் சோதிப்போம் என்று அறிவித்தது இங்கு நினைவுகூர வேண்டியது. இப்படி ஒவ்வொரு முறை ஏவுகணைச் சோதனை செய்யும்போதும் அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் அதைக் கண்டித்துவருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவை, வட கொரியா மீது தொடர்ந்து வெவ்வேறு தடைகளை விதித்துவருகிறது. இந்தத் தடைகளோ பிற நாடுகளின் கண்டனங்களோ வட கொரியாவின் வம்புக்கிழுக்கும் போக்கைச் சிறிதும் மாற்றிவிடவில்லை.

வட கொரியாவின் இந்தச் செயல்பாடுகளில் ராஜ தந்திரம் என்று ஏதாவது இருக்கிறதா என்ற கேள்வி கடலில் ஊசி தேடுவதற்கு ஒப்பானது. ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயைத் தன்னுடைய விருந்தினராக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வரவேற்று உபசரித்துக்கொண்டிருந்த தருணத்தைத் தனது ஏவுகணைச் சோதனைக்குத் தேர்ந்தெடுக்கும் ஒரு அரசின் செயல்பாட்டை விபரீதமாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. அமெரிக்காவுக்குப் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் இப்படி ஏவுகணைச் சோதனை நடத்தி வட கொரியா சீண்டுவது இது முதல்முறையல்ல. 2009-ல் பராக் ஒபாமா முதல் முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தருணத்தைத்தான் அது நிலத்துக்கு அடியில் அணுகுண்டுச் சோதனை நடத்தத் தேர்ந்தெடுத்தது. இது அப்பட்டமான சீண்டல் என்று கருதிய ஒபாமா, உடனே சர்வதேசத் தடையை அதன் மீது விதித்தார். ஒபாமா அன்றிருந்த அதே நிலையில் இப்போது ட்ரம்ப் இருக்கிறார். வட கொரியாவை உடனே கவனித்தாக வேண்டிய நாடுகள் பட்டியலில் ட்ரம்ப் அரசு இதுவரை சேர்க்காமல் இருந்தது. ஆனால், வட கொரியா தானாகவே அந்தப் பட்டியல் நோக்கித் தன்னை நகர்த்திக்கொண்டிருக்கிறது.

சர்வதேச அரங்கிலும் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்ட நாடாக இருக்கும் வட கொரியா, ஏற்கெனவே ஏராளமான பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுவருகிறது. மேலும் மேலும் அது இப்படி அத்துமீறல்களில் ஈடுபடுவது அந்நாட்டு மக்களைத் துயரத்தில் ஆழ்த்துவதாகவே அமையக் கூடும். ஆனால், அதிபர் கிம் ஜோங்-அன் தொடர்ந்தும் அதை நோக்கியே சர்வதேசத்தை நெருக்குகிறார். வட கொரியாவுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் எனும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், ராணுவரீதியாக அதை மிரட்டுவதைவிடவும் அதன் ஒரே பலமிக்க கூட்டாளியான சீனா மூலமாக அதை வழிக்குக் கொண்டுவரும் முயற்சியில் சர்வதேசம் இறங்குவதே புத்திசாலித்தனம். கையில் அணு ஆயுதம் வைத்திருக்கும் ஒரு விபரீதமான அரசை ராஜதந்திரரீதியில் அணுகுவதே உலகின் அமைதிக்கும் நல்லது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x