Published : 01 Mar 2017 08:55 AM
Last Updated : 01 Mar 2017 08:55 AM

எரியும் ஏரி... பெங்களூருவின் பிரச்சினை மட்டும் அல்ல!

பெங்களூருவில் உள்ள பெள்ளந்தூர் ஏரியின் ஒரு பகுதி வியாழக்கிழமை இரவு கடும் புகையுடன் தீப்பற்றி எரிந்த சம்பவம், சுற்றுச்சூழல் விஷயத்தில் அதிகார வர்க்கம் காட்டும் அலட்சியத்தின் விளைவுகளில் ஒன்று. சம்பவத்தின்போது, தூரத்திலிருந்தும் தெரியும் அளவுக்குப் பெருமளவில் மூண்டிருந்த புகையால், நகரவாசிகள் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர். விஞ்ஞானிகள் சொல்வதுபோல், ஈர நிலங்கள்தான் ஒரு நகரத்தின் சிறுநீரகம் என்றால், பெங்களூரு நகரத்துக்குச் சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். 1973-ல் இருந்ததைவிட, அந்நகரத்தின் நீர்நிலைகளில் 79%, மரங்களில் 80%-ம் குறைந்திருக்கின்றன. கழிவுநீர், தொழிற்சாலைக் கழிவுகள், குப்பைகள் கலந்து பெங்களூரு நகர ஏரிகள் கடுமையாக மாசுபட்டிருக்கின்றன. அதன் விளைவுதான் பெள்ளந்தூர் ஏரியில் ஏற்பட்ட நெருப்பு. பெங்களூரு ஏரியில் உருவான நெருப்பு சென்னையிலோ, மதுரையிலோ, கோவையிலோ இன்னும் ஏற்படவில்லை என்பது மட்டுமே கர்நாடகத்துக்கும் தமிழகத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு.

இயற்கையான ஈரநிலங்கள் அழிந்துவருவது நாட்டில் நடந்துவரும் பேரழிவுகளில் ஒன்று. பத்தாண்டுகளுக்கு முன்னால், செயற்கைக்கோள் தொழில்நுட்ப உதவியுடன் சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையம் ஒரு வரைபடத்தை வெளியிட்டது. இந்தியாவின் நீர்நிலைகள் உள்ளிட்டவற்றைப் பாதுகாப்பதற்கான வழிகாட்டியாக அமைந்த அந்த வரைபடம், பல்வேறு அதிர்ச்சித் தகவல்களைக் கொண்டிருந்தது. நாடு முழுவதும் 38% ஈரநிலங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்றும், சில மாவட்டங்களில் 12% ஈரநிலங்கள்தான் எஞ்சியிருக்கின்றன என்றும் அந்த வரைபடம் குறிப்பிட்டது. இதையடுத்து, நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் விதிமுறைகளை உருவாக்கிய மத்திய அரசு, 24 மாநிலங்களில் உள்ள 115 நீர்நிலைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால், இது மிகக் குறைவான எண்ணிக்கை.

மேலும், நீர்நிலைகளில் தேங்கும் கனரக உலோகங்கள் காரணமாக உருவாகும் வேதிப்பொருட்களின் கலவை, தாவரங்கள், விலங்குகள் மூலம் உணவின் வடிவத்தில் மனிதர்களுக்கும் பரவுகிறது. பெங்களூருவாசிகள் மட்டுமல்ல நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் கவனம் செலுத்த வேண்டிய விஷயம் இது.

ஏரி பாதுகாப்பு தொடர்பான அரசு அமைப்பு, ஒவ்வொரு நகரத்திலும் ஏற்படுத்தப்பட வேண்டும். நீர்நிலைகள் மாசடைந்து வரும் நிலையை முறையாகப் பதிவுசெய்து, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இந்திய அறிவியல் கழகத்தின் சூழியல் அறிவியல் மையம் உள்ளிட்ட பல அமைப்புகள் தொடர்ந்து முன்வைக்கும் பரிந்துரைகளை அரசு பரிசீலிக்க வேண்டிய தருணம் இது. நீர்நிலைகளில் மாசு கலப்பதைத் தடுப்பதுதான் முதன்மையான பணியாக இருக்க வேண்டும். எஞ்சியிருக்கும் நீர்நிலைகளைக் கண்டுபிடித்து, ‘டிஜிட்டல் மேப்பிங்’ உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திப் பிரித்தறிந்து அவற்றைப் பராமரிக்கும் பணிகளைத் தொடங்க வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x