Published : 24 Sep 2013 07:08 AM Last Updated : 24 Sep 2013 07:08 AM
கையளிக்கப்படும் பொறுப்பு!
இலங்கை வடக்கு மாகாண சபைத் தேர்தலில் பெரும் வெற்றியைக் குவித்திருக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. மொத்தம் உள்ள 38 இடங்களில் 30 இடங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வென்றிருக்கிறது. கூட்டமைப்பால் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட சி.வி. விக்னேஸ்வரனும் விருப்ப வாக்குகள் பட்டியலில் முதலிடம் பெற்றிருக்கிறார்.
போர் தந்த கொடும் இழப்புகளுக்கும் பெருந்துயரத்துக்கும் பிறகு, மீள் குடியேற்றத்தில் உள்ள பிரச்சினைகள், ராணுவமயமாக்கல், சிங்களமயமாக்கல், பொருளாதார நெருக்கடிகள்... எல்லாவற்றையும் தாண்டி சின்ன நம்பிக்கையை விதைக்கிறது இந்தத் தேர்தல் முடிவு.
தேர்தலுக்கு முன் "நாங்கள் கேட்பது பிரிவினையை அல்ல; சுயாட்சியை" என்று சொன்னது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. தேர்தல் வெற்றிக்குப் பின் கருத்து தெரிவித்த விக்னேஸ்வரன், "தமிழ் மக்கள் மிகப் பெரிய பொறுப்பைக் கையளித்திருக்கிறார்கள்" என்று சொல்லியிருக்கிறார். சரியான நேரத்தில் வெளிப்பட்டிருக்கும் சரியான வார்த்தைகள் என்று இவற்றைச் சொல்லலாம். உண்மையில் இந்த வார்த்தைகள் விக்னேஸ்வரனுக்கு மட்டும் அல்ல; இலங்கை அரசு, இந்திய அரசு, சர்வதேச சமூகம் யாவருக்கும் பொருந்தும்.
இந்தியாவில் மாநிலங்கள்போல, இலங்கையில் மாகாணங்கள். இந்தியாவில் சட்டப் பேரவைகள்போல, இலங்கையில் மாகாண சபைகள். பல தேசிய இனங்கள் கூடி வாழும் ஒரு நாட்டில், எல்லோருக்கும், எல்லா நிலைகளிலும், அதிகாரம் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே (கிட்டத்தட்ட இந்திய மாதிரியில்) 1987-ல் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின்படி இலங்கையில் மாகாணங்கள் பிரிக்கப்பட்டன. ஆனால், இலங்கையின் மாகாண முதல்வர்களுக்குப் பெரிய அதிகாரம் ஏதும் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சபை கூடி எடுக்கும் ஒரு முடிவை மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஓர் ஆளுநர் அலட்சியமாக நிராகரிக்க முடியும். இந்த யதார்த்த சூழலின் நடுவில்தான் - மாகாண முதல்வர் பதவியால் தம் மோசமான வாழ்நிலையை மாற்ற முடியும் என்று நம்பி - தமிழ் மக்கள் பெரும் பொறுப்பைக் கையளித்துள்ளனர்.
பல தசாப்தங்களாகப் பிரிவினை கோரியவர்களிடம் சுயாட்சியின் நியாயம் பேசியவர்கள், இன்றைக்கு அந்த மக்கள் சுயாட்சியைக் கேட்டு வரும்போது அவர்களுக்கான நியாயத்தைப் பெற்றுத்தருவது தார்மிகக் கடமை.
ஆக, கையளிக்கப்பட்ட பொறுப்பைக் காப்பாற்றும் கடமை விக்னேஸ்வரனிடம் மட்டும் இல்லை; இலங்கை அரசில் தொடங்கி சர்வதேச சமூகம் வரை நீள்கிறது. ஒன்றுபட்ட இலங்கையின் நிரந்தர அமைதியும் அழகும் அந்தக் கடமையில்தான் அடங்கியிருக்கிறது! செப்டம்பர் 24, 2013 உண்மை நின்றிட வேண்டும்.
WRITE A COMMENT