Published : 23 Jul 2016 09:37 AM
Last Updated : 23 Jul 2016 09:37 AM
குஜராத்தில் தலித்துகள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நடக்கும் போராட்டங்கள் வலுவடைந்திருக்கின்றன. தலித் அமைப்புகள் கடந்த புதன் கிழமை அழைப்பு விடுத்திருந்த முழு அடைப்பின் காரணமாகச் சவுராஷ்டிரா பகுதியில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. குஜராத்தின் பல பகுதிகளிலும் போராட்டம் பரவியிருக்கிறது.
அம்மாநிலத்தின் சவுராஷ்டிரா பகுதியில் உள்ள உனா நகரில், இறந்த பசுவின் தோலை உரித்த நான்கு தலித் இளைஞர்களை, பசுக்களின் காவலர்கள் என்று கூறிக்கொள்ளும் ‘கவ் ரக்ஷக்’ எனும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் காரில் கட்டிவைத்துக் கடுமையாகத் தாக்கினர். பின்னர், அவர்களை ஊர்வலமாக இழுத்துச் சென்றனர். அப்பசுவைத் தலித்கள் கொன்றதாகச் சொல்லி, இந்தக் கொடூரத்தை அரங்கேற்றினர். மேலும், அதைக் காணொளியாகப் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டனர். ஊடகங்களில் வெளியான காணொளிக் காட்சிகள், தலித் மக்கள் மீதான சாதி வெறியை அப்பட்டமாக உணர்த்தின. உடலிலும் மனதிலும் ஆறாத காயங்களுடன் தலித் இளைஞர்கள் துடித்ததைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இச்சம்பவத்தைக் கண்டித்துச் சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். விஷமருந்திய ஒருவர் மரணமடைந்தார். சிலர், இறந்த பசுக்களின் உடல் பாகங்களைப் அரசு அலுவலகத்துக்கு அருகே போட்டுப் போராட்டம் நடத்தினர். கல் வீசித் தாக்குதலிலும் ஈடுபட்டனர். இதில், போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்தார். இந்நிலையில், தலித் மக்களின் கோபத்துக்குப் பின்னே உள்ள நியாயத்தைக் கணக்கில் கொண்டுதான், அரசு நிர்வாகம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்.
பாதிக்கப்பட்ட தலித்துகளைக் குஜராத் முதல்வர் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி இச்சம்பவத்தைக் கண்டித்திருக்கிறார். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தலித்துகளுக்கு எதிரான இதுபோன்ற சம்பவங்கள் சமூகத் தீமைகள் என்றும் இதற்கு எதிராக அனைவரும் இணைந்து போராட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். தலித் சமுதாயத்தைப் பாஜக அரசு கையாளும் விதத்தைக் காங்கிரஸ் தலைவர் சோனியா கடுமை யாக விமர்சித்திருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.
பசுவின் பெயரால் பாஜக ஆட்சியில் முஸ்லிம்களும், தலித்துகளும் அடக்குமுறைக்கு ஆளாகிறார்கள் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் பேசிய அவர் பாஜக ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். சம்பவம் நடந்து ஒன்பது நாட்களுக்குப் பின்னரே பாதிக்கப்பட்டவர்களைக் குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் சந்தித்தார் என்றும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தகுந்த பாதிப்பு வழங்கப்படுவதும் அவசியம். பசுக்களைக் காக்கிறோம் என்ற பெயரில் அத்துமீறலில் ஈடுபடுவதற்கு யாரையும் அனுமதிக்கக் கூடாது. இதுபோன்ற அமைப்புகளை அரசு ஏன் தடைசெய்யக் கூடாது எனும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் ஷரத் யாதவின் கேள்வி மிக முக்கியமானது. பசுப் பாதுகாப்பு என்ற போர்வையில் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொள்ளும் ஒரு மதவாதப் போக்கு நாட்டின் பல பகுதிகளில் காணப்படுகிறது. அது ஏற்படுத்துகிற வன்முறையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் உணர்வுகளையும் குஜராத் அரசு மட்டுமல்ல, மத்திய அரசும் இணைந்துதான் கட்டுப்படுத்தவேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT