Published : 09 Jun 2016 09:16 AM
Last Updated : 09 Jun 2016 09:16 AM
அதிமுகவில் மீண்டும் உள்கட்சி சீரமைப்பைத் தொடங்கியிருக்கிறார் அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா. கட்சியின் அமைப்புச் செயலர், தலைமைச் செயலர் தொடங்கி மாவட்டச் செயலர்கள் வரை சுமார் 25 நிர்வாகிகள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். சிலரைப் பொறுப்புகளில் இருந்து முற்றிலும் நீக்கியிருக்கிறார் ஜெயலலிதா. நத்தம் விஸ்வநாதன், தோப்பு வெங்கடாசலம், முக்கூர் சுப்பிரமணியம், தளவாய் சுந்தரம் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் ஏழு பேர் இவ்வாறு பொறுப்புகளை இழந்திருக்கிறார்கள். சீரமைப்புப் பணிகள் தொடரும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஊடகங்களால் அணுக முடியாத கட்சி என்று அதிமுக விமர்சிக்கப்பட்டுவந்த நிலையில், கட்சியில் மற்றொரு மாற்றத்தையும் இப்போது ஜெயலலிதா செய்திருக்கிறார். கட்சியின் செய்தித்தொடர்பாளர்களாக பொன்னையன், பண்ருட்டி ராமச்சந்திரன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஆர்.வைத்திலிங்கம், பா.வளர்மதி, நாஞ்சில் சம்பத், வைகை செல்வன், க.பாண்டியராஜன், நிர்மலா பெரியசாமி என்று 11 பேரை நியமித்திருக்கிறார்.
முன்னதாக தேர்தல் சமயத்திலும்கூட அக்கட்சியில் மக்கள் மத்தியில் அவப்பெயரை உண்டாக்கியவர்கள் அல்லது கட்சிக்காரர்களிடம் அதிருப்தியைச் சம்பாதித்தவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது அதிமுக தலைமை தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவந்ததை இங்கு நினைவுகூரலாம்.
தமிழகத்தின் பெரிய கட்சியும் ஆளும் கட்சியுமான அதிமுகவில் மேற்கொள்ளப்படும் இப்படியான தொடர் மாற்றங்கள் அக்கட்சியின் உள்கட்சி விவகாரம் மட்டும் அல்ல. மேலும், எப்படியான சூழலில் அக்கட்சி இந்தச் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்கிறது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். மாநிலத்தில் ஆட்சியைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டிருப்பதோடு, 37 மக்களவை உறுப்பினர்கள், 13 மாநிலங்களவை உறுப்பினர்களுடன் நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக மத்தியிலும் தன் செல்வாக்கை விஸ்தரித்து அதன் வரலாற்றிலேயே பலமான இடத்தில் உட்கார்ந்திருக்கிறது அதிமுக. இப்படியான சூழலிலும், கட்சி அமைப்புக்குள் எங்கெல்லாம் பலவீனங்கள், ஓட்டைகள் இருக்கின்றன என்று அக்கட்சித் தலைமை தேடும் நிலையில், தமிழகத்தில் ஏனைய கட்சிகள் என்ன செய்துகொண்டிருக்கின்றன என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகிறது.
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுக 2011 தேர்தல் தோல்விக்குப் பின் தன்னுடைய நிர்வாகிகளில் குறிப்பாக மாவட்டச் செயலர்களில் - எத்தனை பேரை மாற்றியிருக்கிறது, என்னென்ன சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டிருக்கிறது; காங்கிரஸ் எந்த அளவுக்குப் புதிய தலைமுறைக்கு இடம் அளிக்கும் கட்சியாகத் தன்னைப் புனரமைத்துக்கொண்டிருக்கிறது; இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் கட்சித் தொண்டர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இணைப்பை எந்த அளவுக்கு முக்கியமான ஒரு நடவடிக்கையாகக் கருதுகின்றன; மக்களின் எதிர்பார்ப்புக்கேற்ப காலத்துக்கேற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ளத் தயாராக இருக்கின்றன என்றெல்லாம் கேள்விகள் எழுந்தால் ஏமாற்றங்களே மிஞ்சுகின்றன.
ஒவ்வொரு தேர்தல் முடிவுக்குப் பின்னரும் எல்லாக் கட்சிகளும் அவசியம் உயர்நிலைக் கூட்டங்களை நடத்துகின்றன. தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராயவும் செய்கின்றன. தேர்தல் முடிவுகள் வெறுமனே எதிர்த் தரப்புகளின் போக்குகளால் மட்டுமே தீர்மானிக்கப்படுவது இல்லை. இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் இன்றளவும் கட்சித் தலைமை, கொள்கைகள், முழக்கங்களைத் தாண்டி, கீழே உள்ள கட்சி நிர்வாகிகளின் செயல்பாட்டையும் கருத்தில் கொண்டே கட்சியை மதிப்பிடுகிறார்கள். உண்மையில், கட்சிகளை நேரடியாக ஆள்பவர்கள் நிர்வாகிகள்; ஒவ்வொரு வீட்டையும் நோக்கி கட்சியை எடுத்துச் செல்பவர்களும் அவர்களே. அடிமட்ட அமைப்பு பலம் இல்லாத எந்தக் கட்சியும் நிலைத்து நின்று பிரகாசிக்க முடியாது. ஆனால், இன்றைக்குப் பெரும்பான்மையான கட்சிகள் தம் பலவீனங்களை அறிந்திருந்தும் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது கை வைக்க அஞ்சுகின்றன. அதிமுக எப்படி வீழ்த்தப்பட்டாலும் மீண்டும் அது கிளர்ந்தெழுவதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று, அதன் பலமான அமைப்பு. அங்கே ஏன் பலவீனங்களை அக்கட்சித் தலைமை சகித்துக்கொள்வதில்லை என்பது அதன் எதிரிகள் படிக்க வேண்டிய முக்கியமான பாடம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT