Published : 09 Jul 2016 09:40 AM
Last Updated : 09 Jul 2016 09:40 AM
எழுத்தாளர் பெருமாள்முருகன் எழுதிய ‘மாதொரு பாகன்’ நாவல் தொடர்பான வழக்கில், கொண்டாடத்தக்க ஒரு தீர்ப்பை அளித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட அமர்வு அளித்திருக்கும் 160 பக்கத் தீர்ப்பு, ஒரு இலக்கியப் பிரதிக்கான நடையில் மிகத் தெளிவாகச் சில விஷயங்களைத் தீர்க்கமான குரலில் பேசியிருக்கிறது.
எழுத்தாளரும் பேராசிரியருமான பெருமாள்முருகன் 2010-ல் எழுதிய நாவல் ‘மாதொரு பாகன்’. புத்தகம் வெளியாகி நான்கு ஆண்டுகளுக்குப் பின், நாவலின் குறிப்பிட்ட சில பகுதிகளைப் பாலியல் சார்ந்த அவதூறுகளாகச் சித்திரித்து, திடீரென ஒரு சர்ச்சை உருவாக்கப்பட்டது. பொதுவெளியில், நாவலின் சில பக்கங்கள் மட்டும் பிரதியெடுத்து விநியோகிக்கப்பட்டதுடன், சமூக வலைதளங்களிலும் புகைப்படங்களாகப் பரப்பப்பட்டன. ஒரு இலக்கியப் பிரதியை எப்படி அணுகுவது எனும் பிரக்ஞை இன்றி, பொதுவெளியில் சாமானிய மக்கள் மத்தியிலும் ஊரையும் கடவுளையும் பெருமாள்முருகன் அவமானப்படுத்திவிட்டதாகப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. சாதிய, மதவாத, பழமைவாத சக்திகள் பின்னின்று செயல்படுத்திய இந்தப் பிரச்சார வலையில், ஏதுமறியாத பொதுமக்கள் பலரும்கூட விழுந்தார்கள். மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் அவர்களுடைய உணர்வுகள் தூண்டிவிடப்படக் கூடிய நிலையில், என்னென்ன விபரீதங்கள் எல்லாம் நேருமோ அவையெல்லாம் இதன் தொடர்ச்சியாக நேர்ந்தன. உச்சகட்டமாக, பெருமாள்முருகன் மன்னிப்பு கோர வேண்டும், அவருடைய நாவலைத் தடைசெய்ய வேண்டும் என்பதில் தொடங்கி, அவரைக் கைதுசெய்ய வேண்டும், அவருக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்கள் உச்சம் தொட, அரசு இந்த விஷயத்தில் தலையிட்டது.
இது போன்ற விவகாரங்களில் ஒரு ஜனநாயகச் சமூகத்தில் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, கருத்துரிமை எவ்வளவு உயிர்த் துடிப்போடு இருக்க வேண்டும் என்பதை விளக்க வேண்டிய பொறுப்பும் எழுத்தாளருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டிய கடமையும் அரசுக்குத் தார்மிகரீதியிலானது. நாமக்கல் மாவட்ட நிர்வாகமோ ‘அமைதிக் கூட்டம்’ என்ற பெயரில் ‘கட்டப் பஞ்சாயத்து’ நடத்தியது. பெருமாள்முருகன் கடுமையாக அவமதிக்கப்பட்டதுடன் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவும் நிர்ப்பந்திக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, தனக்குள் இருந்த எழுத்தாளர் செத்துவிட்டதாக அவர் அறிவித்தார்.
தமிழ் மக்கள் பொதுவில் தாராளர்கள். இந்தியாவின் ஏனைய பகுதி மக்களுடன் ஒப்பிடுகையில், நவீனத்தின் வாசலில், முற்போக்குப் பாதையில் எப்போதும் ஒருபடி முன்னே நிற்பவர்கள். துரதிர்ஷ்டவசமாக, இந்த விவகாரம் தேசிய அளவில் நமக்குத் தலைகுனிவை உண்டாக்கியது. பெருமாள்முருகனுக்கு நேர்ந்த அநீதியை எதிர்த்து
‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்' நீதிமன்றத்தில் அவர் பக்க நியாயத்தை எடுத்துச் சென்றது. அந்த வழக்கில்தான் புத்தகத்துக்குத் தடை விதிக்க வேண்டும், எழுத்தாளரைத் தண்டிக்க வேண்டும் எனும் கோரிக்கைகளையெல்லாம் புறந்தள்ளி, “படைப்பாளிகளுக்கும் மக்களுக்கும் இடையே தணிக்கையாளர்களாகத் தங்களைத் தாமே அறிவித்துக்கொண்டு, யார் செயல்படுவதையும் அனுமதிக்க முடியாது” என்று உரத்த குரலில் சொல்லியிருக்கிறது நீதிமன்றம். தீர்ப்பின் கடைசி வரியில் கவித்துவமான நடையில், “எழுதுங்கள்” என்று மீண்டும் எழுத்தாளரை எழுதச் சொல்லியிருப்பதன் மூலம், இந்நாட்டில் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் தன்னுடைய பொறுப்பை நீதித் துறை நிலைநாட்டிவிட்டாலும், நீதித் துறை தலையிட்டால்தான் அடிப்படை ஜனநாயக உரிமைகளே காக்கப்படும் என்பதான சூழல் சகிக்கக் கூடியது அல்ல.
முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டு ஒரு சமூகத்தில் கருத்துரிமைக்கான பாதுகாப்பான சூழல் முக்கியம். இதை உருவாக்குவதும் பாதுகாப்பதும் அரசின் அடிப்படைக் கடமைகளில் ஒன்று. அதற்கும் மேலாக, ஜனநாயக சக்திகள் ஒவ்வொன்றின் தார்மிக அறம். எழுத்தாளர் புத்துயிர் பெறட்டும். மொழி மேலும் தழைக்கட்டும். சமூகம் பீடுநடை போடட்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT