Published : 09 Sep 2016 09:15 AM
Last Updated : 09 Sep 2016 09:15 AM
தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப் படுகை தண்ணீருக்குப் பரிதவித்திருக்கும் சூழலில், கர்நாடகம் மிகக் கசப்பான வார்த்தை களோடு தண்ணீர் திறந்துவிட்டிருக்கிறது. கர்நாடகத்தில் நடந்தேறி வரும் வன்முறைகளும், போராட்டங்களும் கவலை தருகின்றன. தண்ணீர் திறக்கப்பட்ட கிருஷ்ணராஜசாகர் அணையைச் சிலர் தீப்பந் தங்களுடன் முற்றுகையிட்டிருக்கிறார்கள். அந்த அணை உட்பட மாநிலத்தில் நான்கு அணைகளுக்குத் துணை ராணுவப்படையின் பாதுகாப்பு அளிக்கும் அளவுக்குக் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. தமிழக, கர்நாடக முதல்வர்களின் உருவ பொம்மைகள் எரிக்கப்படு கின்றன. லாரிகள் உள்ளிட்ட தமிழக வாகனங்கள் மீது தாக்குதல் நடந்திருக்கிறது. தற்கொலை முயற்சிகள், சாலை மறியலைத் தொடர்ந்து முழு அடைப்புப் போராட்டமும் நடத்தப்பட்டுள்ளது.
இந்தக் காட்சிகள் உருவாக்கும் தோற்றம் என்ன? உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஏதோ கர்நாடகத்தை வஞ்சித்துவிட்டதுபோல அல்லவா இருக்கிறது? உண்மையில், தமிழகம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது கர்நாடகமும் அறிந்த உண்மை. தமிழகத்துக்கு ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட வேண்டிய தண்ணீர், செப்டம்பர் 6-ம் தேதி திறக்கப்பட்டிருக்கிறது. அதுவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால். அதுவும் 10 நாட்களுக்கு மட்டும். ஏற்கெனவே, நாம் குறுவைச் சாகுபடியை இழந்துவிட்டோம். இப்போது சம்பா சாகுபடிக்கும் மொத்தமே 13 டி.எம்.சி. தண்ணீர்தான் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. நியாயமாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மூன்று மாதங்களில் தமிழகத்துக்கு வர வேண்டிய காவிரி நீரின் அளவு 94 டி.எம்.சி. ஆனால், கால்வாசித் தண்ணீரை, அதுவும் கால தாமதமாகத் திறந்துவிட்டுவிட்டு ‘கனத்த இதயத்துடன்’ என்று அம்மாநில முதல்வர் கூறுவதும், தமிழகத்துக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களும் துளியும் நியாயமற்றவை.
காவிரி நீரில் தமிழகத்துக்கு 419 டி.எம்.சி., கர்நாடகத்துக்கு 270 டி.எம்.சி., கேரளத்துக்கு 30 டி.எம்.சி., புதுவைக்கு 7 டி.எம்.சி., ஆற்றின் இயற்கையான சுற்றுச்சூழலைப் பாதுகாக்க 10 டி.எம்.சி., கடலில் கலக்கும் அளவு 4 டி.எம்.சி. இதில் கர்நாடகம் தமிழகத்துக்குத் தர வேண்டியது 192 டி.எம்.சி. என்று தன்னுடைய இறுதித் தீர்ப்பில் ஒதுக்கீடு செய்தது காவிரி நடுவர் மன்றம். சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அனைத்துமே இது தமக்குப் போதாது என்ற குறையோடு மேல்முறையீடு நோக்கி நகர்ந்திருக்கின்றன என்றாலும், இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எட்டப்படும் வரையில், காவிரி நடுவர் மன்றம் முன்னதாக அளித்திருக்கும் தீர்ப்பைக் கடைப்பிடிக்க வேண்டிய தார்மிக அறம், இதில் சம்பந்தப்பட்ட எல்லா மாநிலங்களுக்குமே உண்டு. கடந்த நூறாண்டுகளில் கர்நாடகத்தால் அடுத்தடுத்து சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட அணைகள், பல மடங்கு அது விரிவாக்கிய சாகுபடிப் பரப்பு ஆகியவற்றையெல்லாம் கருத்தில் கொண்டும்தான் காவிரி நடுவர் மன்றம் தன்னுடைய இறுதித் தீர்ப்பில் இந்த ஒதுக்கீட்டை அளித்தது என்பதை கர்நாடக மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இது போன்ற விஷயங்களைச் சாதாரண மக்களிடம் ஆக்கபூர்வமாக விளக்கிக் கொண்டுசெல்லும் பொறுப்பு ஆட்சியாளர்கள், அரசியல்வாதி களுக்கு உரித்தானது. துரதிர்ஷ்டவசமாக அரசியல் கணக்குகளுக் காகவும் சுயலாபங்களுக்காகவும் மக்களை உணர்வுரீதியாகத் தூண்டிவிடும் அரசியல்வாதிகளையுமே நாம் பெற்றிருக்கிறோம். நாளுக்கு நாள் இது போன்ற நதிநீர்ப் பிரச்சினைகளில் மாநிலங்கள் இடையேயான உறவுகள் நாசமடைந்துவரும் நிலையில், மத்திய அரசு இது தொடர்பாக தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கான அமைப்புகளை உருவாக்குவது காலத்தின் கட்டாயம். மாநிலங்கள் இடையேயான சிக்கல்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு அது வாளாவிருக்கலாகாது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT