Published : 10 Sep 2016 10:36 AM
Last Updated : 10 Sep 2016 10:36 AM

அனைத்து கட்சிக் கூட்டம் ஏன் அவசியமாகிறது?

காவிரிப் பிரச்சினை மீண்டும் தலை தூக்கியிருக்கிறது. இந்த ஆண்டும் குறுவைச் சாகுபடிக்கான தண்ணீர் வந்து சேராத நிலையில், சம்பா சாகுபடிக்கான தண்ணீரும் கேள்விக்குறியானது. கர்நாடகம் தண்ணீர் விட மறுத்துவிட்ட நிலையில், தமிழக அரசு உச்ச நீதிமன்றப் படி ஏறியது. உச்ச நீதிமன்றம் தற்காலிக நிவாரணமாக விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு கூறியது. கூடவே, “நடுவர் மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீர் வேண்டும் என்றால், மூன்று நாட்களுக்குள் தமிழக அரசு காவிரி கண்காணிப்புக் குழுவை அணுகலாம்” என்றும் கூறியது. சுமார் 25 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய உச்ச நீதிமன்றம் திறந்துவிடச் சொன்ன 13 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்குக் காணவே காணாது. இந்த நெருக்கடியான சூழலை உணர்ந்த தமிழக அரசு, கையோடு காவிரி கண்காணிப்புக் குழுவிடம் மனு தாக்கல் செய்திருக்கிறது. காலம் தாழ்த்தாமல், தமிழக அரசு இந்த விவகாரத்தில் எடுத்துவரும் சட்டரீதியிலான நடவடிக்கைகள் வரவேற்புக்குரியன. அதேநேரத்தில், அரசியல்ரீதியாக, கர்நாடக அரசின் செயல்பாடுகளுடன் தமிழக அரசின் நடவடிக்கைகளை ஒப்பிட்டால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

காவிரிப் பிரச்சினையை உற்றுநோக்கும்போது, ஒரு விஷயம் தெளிவாகப் புலப்படுகிறது. தண்ணீர் கேட்டு தமிழகத்தில் விவசாயிகள் மட்டுமே போராடுகிறார்கள். அதுவும் காவிரிப் படுகை விவசாயிகள் மட்டும். ஆனால், கர்நாடகத்திலோ விவசாயிகள் மட்டுமின்றி ஏனைய தரப்பினரும் விவசாயிகளோடு கைகோத்து நிற்கிறார்கள். உச்ச நீதிமன்ற உத்தரவு வெளியான சில மணி நேரங்களில், செய்தி யாளர்களைச் சந்தித்தார் அம்மாநில முதல்வர் சித்தராமைய்யா. “குடிநீருக்கே இல்லை என்கிறபோது எப்படி தினமும் இவ்வளவு தண்ணீரைத் தமிழகத்துக்குத் திறந்துவிட முடியும்? கண்டிப்பாக முடியாது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறேன். அப்போது என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ அதன்படிதான் இந்த அரசு நடந்துகொள்ளும்” என்றார். தமிழகத்திலோ பெரும்பான்மை எதிர்க்கட்சிகள் ‘முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்’ என்று கோரியிருக்கும் நிலையில், அதிமுக அரசு இதுகுறித்து துளியும் அலட்டிக்கொள்ளவில்லை.

தமிழக அரசு ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது புதிய ஆலோசனைகளைக் கேட்டுப் பெற மட்டும் அல்ல; காவிரிப் பிரச்சினையில் ஒட்டுமொத்தத் தமிழகமும் ஓரணியில் நிற்கிறது என்பதை வெளிப்படுத்தவும் இந்த விவகாரத்தில் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளுக்குத் தார்மிகரீதியிலான ஆதரவை வெளிப்படுத்து வதற்கும் அது பெரிய அளவில் உதவும்.

உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று காவிரி கண்காணிப்புக் குழுவிடம் தமிழக அரசு மேல் முறையீடு செய்திருப்பதால் மட்டுமே, இப்பிரச்சினையில் தீர்வு கிட்டிவிடும் என்று கருதிவிட இயலாது. காவிரி கண்காணிப்புக் குழுவுக்குச் சட்ட அங்கீகாரமோ, மாநிலங் களைக் கட்டுப்படுத்துகிற அதிகாரமோ கிடையாது. கடந்த 1.6.2013 மற்றும் 12.6.13 ஆகிய நாட்களில் இதே காவிரி கண்காணிப்புக் குழு டெல்லியில் கூடியபோது, எந்தவித முடிவும் எடுக்கப்படாமல் கலைந்ததை முன்னாள் முதல்வர் கருணாநிதி சுட்டிக்காட்டியிருப்பது இங்கே சுட்டிக்காட்ட வேண்டியது. காவிரி போன்ற மாநிலங்கள் இடையேயான பிணக்குகளில் தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் விரைந்து தீர்வு காண மத்திய அரசின் ஒத்துழைப்பு முக்கியம். அதற்கு அழுத்தம் கொடுக்க வெறுமனே சட்டரீதியிலான நடவடிக்கைகள் போதாது. அரசியல்ரீதியிலான அழுத்தங்கள் தேவை. இந்த விவகாரத்தில் மத்திய அரசிடம் கறாரான குரலில் தமிழக அரசு பேச வேண்டும் என்றால், அதற்கு மாநிலம் ஒருமித்து அதன் பின்னால் நிற்பதையும் தமிழகத்தை இப்படியான விஷயங் களில் வஞ்சிக்க இயலாது என்பதையும் வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

காவிரிப் பிரச்சினையில் தமிழக அரசுத் தரப்பின் வரலாற்றுத் தவறுகள் என்று பட்டியலிட்டால், மாநிலத்தின் இரு பிரதான கட்சிகளான அதிமுக - திமுக இப்படியான ஜீவாதாரப் பிரச்சினை களில்கூடப் பிளவுபட்டு நிற்பதே அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும். இனியும் அந்த அவலம் நீடிக்கக் கூடாது. முதல்வர் ஜெயலலிதா அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். தமிழகம் ஒருமித்த குரலில் தன்னுடைய நியாயத்தை உரக்கப் பேச வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x