Published : 01 Aug 2016 09:12 AM
Last Updated : 01 Aug 2016 09:12 AM
ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு கடந்த 16 வருடங்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்த இரோம் ஷர்மிளா, வரவிருக்கும் ஆகஸ்ட் 9-ம் தேதியோடு போராட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்திருக்கிறார். இல்லற வாழ்வை நோக்கி அடியெடுத்துவைக்கும் விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கும் அவர், தேர்தல் அரசியலில் ஈடுபடவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
சமகாலத்தின் மிக சக்தி வாய்ந்த அமைதிவழிப் போராட்டம் ஷர்மிளாவுடையது. காலனிய ஆதிக்க காலக் கருப்புச் சட்டமான ஆயுதப் படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் எப்படி ஜனநாயகத்துக்கும் மனித நாகரிகத்துக்கும் எதிரானது என்பதை நாடு முழுக்கக் கொண்டுசெல்வதில் மிக முக்கியமான பங்குவகித்தது ஷர்மிளாவின் போராட்டம். இன்றைக்கும் காஷ்மீரிலும் வட கிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளிலும் நீடிக்கும் இச்சட்டம், கிட்டத்தட்ட தன்னுடைய கடைசிக் காலத்தில் இருக்கிறது. சமீபத்தில்கூட, ஒரு வழக்கில் இச்சட்டத்தின் கீழான நியாயங்களாக அரசு முன்வைத்த பல வாதங்களை உச்ச நீதிமன்றம் உடைத்து நொறுக்கியது இங்கு நினைவுகூரத் தக்கது.
மணிப்பூர் தலைநகர் இம்பால் அருகே, கடந்த 2000 நவம்பரில் அசாம் ரைபிள்ஸ் படையினரால் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு நியாயம் கேட்டு ஷர்மிளா உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். படையினருக்குச் சிறப்பு அதிகாரங்களைத் தரும் சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று அவர் கோரினார். மணிப்பூரில் நீண்ட காலமாகவே இப்படியான அடக்குமுறைகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர். அந்தப் போராட்டத்தின் சின்னமாக ஷர்மிளாவின் உண்ணாவிரதப் போராட்டம் மாறியது. ஷர்மிளா உயிரிழந்தால் அது மணிப்பூரைக் கொந்தளிக்க வைத்துவிடும் என்பதாலேயே, அவரைக் கைதுசெய்து மருத்துவமனையில் வைத்துக் குழாய் மூலம் உணவு செலுத்தி, அரசு பாதுகாத்துவருகிறது. கூடவே, அவர் மீது தற்கொலை முயற்சி வழக்குகளும் தொடர்கின்றன.
ஷர்மிளாவின் போராட்டத்தின் மூல நோக்கமான ஆயுதப் படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் இன்னமும் விலக்கிக்கொள்ளப்படாத சூழலிலேயே ஷர்மிளா போராட்டத்தைக் கைவிடுவது மணிப்பூர் மக்களில் ஒரு பகுதியினர் மத்தியில் சோர்வை உண்டாக்கியிருக்கிறது. என்றாலும், இதைப் பின்னடைவாகக் கருத வேண்டியதில்லை. இன்னமும் கருப்புச் சட்டம் நீடிக்கலாம். ஆனால், சர்வதேச அளவில் இன்றைக்கு அச்சட்டம் ஒரு விவாதப் பொருளாக மாற ஷர்மிளாவின் போராட்டம் ஒரு முக்கிய காரணம். மேலும், பல பகுதிகளில் அசாம் ரைபிள்ஸ் படைகளையும் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தையும் அரசாங்கம் விலக்கிக்கொண்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேல் அவர் போராட்டத்தை முழுமையாகக் கைவிடவில்லை; போராட்ட வடிவத்தை மாற்றிக்கொண்டிருக்கிறார். தேர்தல் அரசியலில் ஈடுபடுவதன் மூலம் புதிய வாய்ப்புகளை மணிப்பூர் மக்களுக்கும் இந்திய ஜனநாயகத்துக்கும் அவர் அளிக்கிறார்.
இதுவும் எதிர்ப்பு வடிவம்தான்.
அரசின் பாராமுகம் தொடர்கிற நிலையில், ஒரு லட்சியத்தின் அழியாத சின்னமாக மட்டுமே அவர் நீடிக்க வேண்டியதில்லை. களங்கள் மாறினாலும் அவரது போராட்டம் நீடிக்கும் என நம்பலாம். அதற்கான உறுதி தன்னிடம் இருப்பதை அவர் ஏற்கெனவே நிரூபித்திருக்கிறார். ஷர்மிளா தேர்ந்தெடுத்திருக்கும் புதிய பாதை மணிப்பூர் மக்களுக்குப் புதிய வெளிச்சத்தை அளிக்கட்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT