Published : 15 Sep 2016 09:11 AM
Last Updated : 15 Sep 2016 09:11 AM
காவிரிப் பிரச்சினையை முன்வைத்து, நடைபெற்றுவரும் வன்முறைகள் கவலை தருகின்றன. கர்நாடகத்தில் ஆம்னி பஸ்கள், லாரிகள் உட்பட நூற்றுக்கும் அதிகமான தமிழக வாகனங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்திலும் இதற்கு எதிர்வினை எழுந்ததை அடுத்து நிலைமை மேலும் மோசமானது. இவ்விவகாரம் தொடர்பாக எதுவும் அறியாத அப்பாவிகள் தாக்கப்படுவதுதான் இன்னும் வேதனை.
தமிழகத்துக்குக் காவிரி நீரைத் திறந்துவிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து உருவான இந்தப் பிரச்சினை, தற்போது விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. பெங்களூருவில் கன்னடத் திரையுலகம் நடத்திய உண்ணாவிரதத்தைக் கண்டித்து சந்தோஷ் என்ற தமிழ் இளைஞர் முகநூல் பதிவு எழுதியதற்காகத் தாக்கப்பட்டார். அதற்குச் சற்றும் குறையாத அளவுக்கு இரு மாநிலங்களிலும் மொழி வெறியை, வன்முறையைத் தூண்டும் விதத்தில் சமூக வலைதளங்களில் பதிவுகள் எழுதப்படுகின்றன.
சட்டம் - ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி, தண்ணீர் தருவதை நிறுத்தச் சொல்லி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகம் முறையிடும்போது, அதற்கு எண்ணெய் ஊற்றுகிற செயல்கள் தமிழகத்தில் நடைபெறலாமா? காவிரித் தண்ணீரின் வரவை எதிர்பார்த்து, லட்சோப லட்சம் விவசாயிகள் ஆற்றைப் பார்த்துக்கொண்டிருப்பதைப் போலவே, கர்நாடகத்தில் வாழும் ஒரு கோடிக்கும் அதிகமான தமிழர்களும் பிரச்சினை எதுவும் வந்துவிடக் கூடாது என்று பரிதவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள், விவசாய சங்கங்கள் தங்கள் பேச்சிலும், செயலிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். பிரபலமாகும் வெறியுடன் நடமாடும் ‘லெட்டர் பேடு’ அமைப்புகளின் எண்ணத்துக்கு இளைஞர்கள் இரையாகிவிடக் கூடாது.
கர்நாடகத்துக்குத் துணை ராணுவப் படை வரவழைக்கப்பட்டிருப்பதும், கைது, துப்பாக்கிச் சூடு என்று வன்முறைக்கு எதிரான நடவடிக்கை தீவிரம் அடைந்திருப்பதும் வரவேற்கத் தக்கவை. ஆனால், இவை எல்லாம் முன்கூட்டியே முதல்வர் சித்தராமையா செய்திருக்க வேண்டியவை.
1991 காவிரிக் கலவரம், வீரப்பனால் ராஜ்குமார் கடத்தப்பட்டபோது நடந்த வன்முறைகள், சென்னைக்கும் பெங்களூருவுக்கும் இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின்போது நடந்த வன்முறை இவற்றில் எல்லாம் ஈடுபட்ட அமைப்புகள், வன்முறையாளர்கள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாவது எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழகம் செய்த முன்னேற்பாடுகளைக்கூட கர்நாடக அரசு செய்யவில்லை.
தண்ணீர் வழங்குவது, அணையின் நீர் இருப்பைப் பொறுத்து சட்டப்படி உரியவர்களுக்குப் பிரித்து வழங்கும் சாதாரண நடைமுறை. அதில் தேவைக்கு அதிகமான அரசியலும், இன உணர்வும் கலக்கப்பட்டதுதான் காவிரிப் பிரச்சினை தீர்க்க முடியாத சிக்கலாகிப்போனதற்குக் காரணம். ஒரு மாவட்டத்தில் உள்ள அணையிலிருந்து இன்னொரு மாவட்டத்துக்குத் தண்ணீர் திறப்பதுபோல, அதிகாரிகளே செய்ய வேண்டிய விஷயம் இது. இதில் இனியும் இனவெறியாட்டத்தைத் தொடரவிடுவது ஆபத்தானது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு போன்றவற்றை மத்திய அரசு உரிய காலத்தில் அமைத்திருந்தால், இதுபோன்ற பிரச்சினையே ஏற்பட்டிருக்காது. தமிழகத் தரப்பு நியாயம் பற்றி மத்திய அரசில் யாரும் கவலை கொண்டதாகத் தெரியவில்லை. மிகத் தாமதமாக, அதுவும் இரு மாநிலங்களையும் ஒரே தட்டில் வைத்து ‘அமைதியாக இருங்கள்’ என்று அறிக்கைவிட்டிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு ஆக்கபூர்வமாகச் செய்ய வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. நதிகளை நிர்வகிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு மாற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும். வெறும் அறிவுரைகள் ஒருபோதும் பலன் தராது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT