Published : 20 Apr 2017 09:47 AM
Last Updated : 20 Apr 2017 09:47 AM
காஷ்மீர் மாநிலத்தின் புத்காம் மாவட்டத்தில் இளைஞர் ஒருவரை ராணுவத்தினர் மனிதக் கேடயம் போலப் பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருக்கிறது. ராணுவ ஜீப்பின் முன்பகுதியில் இளைஞர் ஒருவர் கட்டப்பட்டு வீதிகள் வழியாக எடுத்துச் சென்றது, கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ஒரு காணொலிக் காட்சியில் பதிவாகியிருந்தது. நகர் மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 9-ல் நடந்த இடைத் தேர்தலின்போது நடந்த சம்பவம் அது. தேர்தல் அதிகாரிகளுக்குக் காவலாகச் சென்ற ராணுவ வாகனத்தில் இந்த மனிதத்தன்மையற்ற செயல் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.
“கல் வீசித் தாக்குதல் நடத்துபவர்களின் கதி இதுதான்” என்று ராணுவ வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒலிப்பதிவுக் கருவி வழியே ஒருவர் கூறுவது அந்தக் காணொலிக் காட்சியில் பதிவாகியிருக்கிறது. வெறும் 100 மீட்டர் தொலைவுதான் அவர் அப்படிக் கொண்டுசெல்லப்பட்டார் என்கிறது ராணுவம். எவ்வளவு தூரம் அவர் அப்படிக் கொண்டுசெல்லப்பட்டார் என்பதல்ல விஷயம். ஒருவரை இப்படி மோசமாக நடத்துவது மனித உரிமை மீறல் என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.
அப்பாவி மக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்துவது பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்தும் மிக மோசமான வழிமுறை. பயங்கரவாதிகள் பொதுமக்களுடன் கலந்துவிட முயற்சி செய்வதால், ராணுவத்தைப் பொறுத்தவரை அவர்களை எதிர்கொள்வது கடினமான காரியம் என்பதை மறுக்க முடியாது. ஆனால், போரின் நடைமுறைச் சிரமங்களைக் காரணம் காட்டி, மனிதக் கேடயங்களைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்த முடியாது. மனிதக் கேடயத்தைப் பயன்படுத்துவது ஜெனீவா ஒப்பந்தத்தின்படி ஒரு போர்க் குற்றம்.
இந்தக் காணொலிக் காட்சி வெளியாவதற்குச் சில நாட்களுக்கு முன்னர்தான், சிஆர்பிஎஃப் வீரர் ஒருவரை காஷ்மீர் இளைஞர்கள் தாக்குவதையும், பதிலுக்குத் தாக்குதல் நடத்தாமல் அவர் அமைதியாக நடந்துகொள்வதையும் காட்டும் காணொலிக் காட்சிகள் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியிருந்தன. அப்போது அந்த வீரர் காட்டிய பொறுமையையும் சுயகட்டுப்பாட்டையும் பாராட்டியவர்கள், இப்போது ராணுவத்தினரின் இந்தச் செயலை நியாயப்படுத்திப் பேசுவதுதான் விநோதம்.
கடும் வன்முறைச் சம்பவங்களுக்கு நடுவில் நடைபெற்ற நகர் இடைத் தேர்தலில் வெறும் 7% வாக்குகள்தான் பதிவாகின. மக்களை வாக்களிக்க விடாமல் தீவிரவாதிகள் மிரட்டினர் என்பதும் உண்மை. ஆனால், பாதுகாப்பு ஏற்பாடு என்பது மக்களின் அச்சத்தைப் போக்குவதற்காக மேற்கொள்ளப்படுவதுதானே தவிர, அவர்களா.. நாங்களா என்ற மனோபாவத்தில் நடந்துகொள்வதற்காக அல்ல. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ராணுவ அதிகாரிகள் முறையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்கள் மீது உரிய நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும். “எந்த விதமான சூழலிலும், நடவடிக்கையின் வெற்றியே பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டாலும், மனித உரிமை மீறல்கள் தவிர்க்கப்பட வேண்டும்” என்று ராணுவத்தின் நடத்தை விதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதை ராணுவம் உறுதிசெய்ய வேண்டும். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் ராணுவத்துக்கு இருக்கிறது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT