Published : 10 Nov 2014 08:23 AM
Last Updated : 10 Nov 2014 08:23 AM
'மூன்றாவது அணி’ என்ற கோஷம் மறுபடியும் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. சமீபத்தில், முலாயம் சிங் முன்முயற்சியில் லாலு பிரசாத், நிதீஷ் குமார், சரத் யாதவ், தேவ கவுடா போன்றவர்கள் கூடி, நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவதுகுறித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.
தேசிய அரசியலில் காங்கிரஸ், பாஜக அணிகளுக்கு மாற்று அணி உருவாவதென்பது இந்திய ஜனநாயகத்துக்கு மிகவும் ஆரோக்கியமானதே. அதே நேரத்தில், மூன்றாவது அணிகுறித்துக் கடந்த காலம் நமக்கு அளித்திருக்கும் பாடங்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாதவை.
ஜெயப்பிரகாஷ் நாராயண் என்ற மகத்தான தலைவரின் வழிகாட்டுதலில் 1977-ல் ஸ்தாபன காங்கிரஸ், ஜனசங்கம், சோஷலிஸ்ட் கட்சிகள், பாரதிய லோக்தளம் ஆகிய கட்சிகள் இணைந்து உருவாக்கிய ஜனதா கட்சி இந்திய அரசியலில் காங்கிரஸின் அஸ்திவாரத்தை முதன்முறையாக ஆட்டிப்பார்த்தது. நெருக்கடிக் காலத்தில் காங்கிரஸ் அரசின் ஒடுக்குமுறைகளை எதிர்கொண்ட மக்கள், ஜனதாவை ஆரத்தழுவிக்கொண்டார்கள். விளைவு, நெருக்கடிநிலை வாபஸான பிறகு நடந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. ஆனால், மக்களின் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் அடித்தளமாகக்கொண்டு ஆட்சியமைத்த ஜனதா அரசு, கூட்டணித் தலைவர்களின் அகந்தையாலும் பதவி ஆசையாலும் சுக்குநூறாக உடைந்துபோனது.
அடுத்து வந்த தேர்தலில், மக்கள் மீண்டும் காங்கிரஸையே நாடினார்கள். ஜனதா அரசின் தோல்வி, அதில் அங்கம் வகித்த பாரதிய ஜனசங்கம், பாரதிய ஜனதாவாகப் புது அவதாரம் எடுக்க உதவியது. சோஷலிஸ்டுகள் சமதா என்றும் பிறகு சமாஜ்வாதி என்றும் உருக்கொண்டனர். ஜனதா, ஜனதா தளமானது. அதுவும் மதச்சார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் என்று உடைந்தது. மற்றொன்று, ராஷ்ட்ரிய ஜனதா தளம் என்று அவதாரமெடுத்தது. இந்தக் கட்சிகளைத் தொடங்கிய தலைவர்களின் சாதியைச் சேர்ந்தவர்களும் மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் மட்டுமே இவற்றை ஆதரித்தனர். மதச்சார்பற்ற, சமத்துவக் கொள்கைகளைக் கடைப்பிடித்தாலும் தேசிய அளவில் மக்களுடைய நம்பிக்கையையோ, ஆதரவையோ பெறும் அளவுக்கு இந்தக் கட்சிகள் வளரவில்லை. இந்தத் தலைவர்களின் குடும்பத்தவர் கட்சிகளில் செலுத்திவரும் ஆதிக்கமும் இவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும் கடந்த மக்களவைப் பொதுத் தேர்தலில் இந்தக் கட்சிகளை மக்கள் ஒதுக்கக் காரணங்களாக அமைந்தன.
இவ்வளவு விழுப்புண்களைப் பெற்றிருந்தாலும், மறுபடியும் உருவாகவிருக்கும் மூன்றாவது அணி, கடந்த காலத்திலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, மறுபரிசீலனை செய்து கொண்டிருக்கிறதா என்று பார்த்தால், பெருத்த ஏமாற்றமே மிஞ்சுகிறது. பொதுவான கொள்கை, தேசியக் கண்ணோட்டம், மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகள் என்று ஏதும் இல்லாமல், பாஜகவையும் காங்கிரஸையும் எதிர்ப்பது என்ற ஒற்றைக் கொள்கையை மட்டும் கொண்டிருந்தால் இந்த அணியின் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை ஏற்படும்?
மக்கள் சக்தியாக உருவெடுத்தால் மட்டுமே மாற்று சக்தி நிலைத்து நிற்க முடியும். அதிகாரப் பசிக்காக அமையும் கூட்டணியை அதிகாரமே சிதைத்துவிடும் என்பதுதான் வரலாறு. துரதிர்ஷ்டவசமாக, மூன்றாவது அணியின் தளகர்த்தர்களோ வரலாற்றை மறப்பதில் பேரார்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT