Published : 20 Jul 2016 09:30 AM
Last Updated : 20 Jul 2016 09:30 AM
துருக்கியில் ராணுவத்தின் ஒரு பிரிவினர் நடத்திய ராணுவப் புரட்சியைப் பொதுமக்களே முறியடித்திருப்பது வரலாற்று நிகழ்வாகியிருக்கிறது. ராணுவப் புரட்சி நடப்பதற்கு எல்லா சாத்தியங்களும் கொண்ட, அரசியலமைப்பைக் கொண்ட நாடு அது. சுயாட்சி கொண்ட துருக்கி ராணுவம், இதற்கு முன்னர் ஜனநாயக அரசுகளை நான்கு முறை கவிழ்த்திருக்கிறது. துருக்கியின் ஆட்சியாளர்களுக்கும், ராணுவத்துக்கும் இடையில் எப்போதுமே பதற்றநிலை இருந்துவந்திருக்கிறது. எனினும், 2002-ல் தயீப் எர்டோகன் தலைமையிலான ‘நீதி மற்றும் வளர்ச்சி’ கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், ராணுவப் புரட்சிகளெல்லாம் பழங்கதை என்ற நிலை உருவானது. ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த ராணுவப் புரட்சி அந்த நம்பிக்கையைத் தகர்த்தெறிந்துவிட்டது.
இப்படி நடக்கும் என்று அதிபர் எர்டோகனே எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆட்சியை அவர் இழக்காதது, துருக்கிக்கு மட்டுமல்ல, மேற்கு ஆசியப் பிராந்தியத்துக்கே நல்ல செய்திதான். மேற்கு ஆசியாவில் ஏற்கெனவே பெரும் குழப்பம் நிலவும் நிலையில், அப்பிராந்தியத்தின் பாதுகாப்பு விஷயத்தில் துருக்கியின் ஸ்திரத்தன்மை மிக முக்கியமானது. அதேசமயம், எர்டோகன் ஆட்சியின் பலவீனத்தை இந்தப் புரட்சி வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இந்தப் புரட்சியில் ஏதோ சில ராணுவ வீரர்கள் மட்டும் ஈடுபடவில்லை; ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்றனர். துருக்கியின் ஒற்றுமை, ஸ்திரத்தன்மை குறித்த கேள்விகளை இது எழுப்புகிறது.
எர்டோகனின் ஆட்சி துருக்கியைப் பல விதங்களில் பலவீனப்படுத்தி யிருக்கிறது. அவரது மோசமான வெளியுறவுக் கொள்கை பாதுகாப்புச் சூழலில் பின்னடைவை ஏற்படுத்தியது. நாட்டை இஸ்லாம்மயமாக்குவதில் அவர் காட்டிய தீவிரம், அந்நாட்டின் மத அடிப்படைவாதிகளுக்கும் மதச்சார்பற்றவர்களுக்கும் இடையிலான பிளவை அதிகரித்தது. தனக்கு அதிகாரங்களை அதிகரிக்கும் வகையில், அரசியல் சாசனத்தைத் திருத்தி எழுதுவதில் அவர் ஈடுபட்டது மற்றொரு பிரச்சினை.
உண்மையில், எர்டோகனின் ஆட்சிக்கு எதிரானவர்களும், மதச்சார்பற்ற அரசியல் சக்திகளும் தங்களுக்கு ஆதரவு வழங்குவார்கள் என்றே புரட்சியில் ஈடுபட்ட ராணுவத்தின் ஒரு பிரிவினர் நம்பியிருப்பார்கள். ஏனெனில், மக்களில் பலர் எர்டோகனின் ஆட்சியில் அதிருப்தி அடைந்திருப்பவர்கள்தான். 2013-ல் இஸ்தான்புல்லின் கேஸி பூங்காவில் போலீஸாரின் அடக்குமுறையைத் துணிச்சலுடன் எதிர்கொண்டார்கள் துருக்கி மக்கள். எதிர்க்கட்சிகள், ஊடகம், சமூக ஊடகங்கள் என்று எல்லாவற்றையும் அரசு கட்டுப்படுத்திவந்தாலும், எர்டோகனுக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவது அத்தனை கடினமான விஷயமில்லைதான். ஆனாலும், தங்கள் பிரச்சினைகளுக்கு ஆயுதம் தாங்கிய வீரர்கள் மூலம் தீர்வு கிடைத்துவிடும் என்று அந்நாட்டு மக்கள் நம்பவில்லை. அதனால்தான், பிடித்திருக்கிறதோ இல்லையோ, தாங்கள் தேர்ந்தெடுத்த அரசைக் காக்க மக்கள் வீதியில் திரண்டனர். எர்டோகனைக் காத்திரமாக விமர்சித்துவருபவர்கள்கூட இந்தப் புரட்சியை ஏற்காததன் பின்னணி இதுதான்.
எனினும், துருக்கியில் ஏற்பட்டிருக்கும் இந்த விரிசல், அந்நாட்டில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது. எர்டோகனைப் பொறுத்தவரை, ஜனநாயகத்தின் மீது துருக்கி மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் புரிந்துகொள்ளவும், தனது சர்வாதிகாரக் கொள்கையை மறுபரிசீலனை செய்யவும் இது அவருக்கு ஒரு சந்தர்ப்பம். ஒருவேளை, இந்தப் புரட்சியைச் சாக்காகக் கொண்டு தனது அரசியல் எதிரிகளை முடக்கும் முயற்சியிலும், தனக்கான கூடுதல் அதிகாரத்தைப் பெறுவதற்கான முயற்சிகளிலும்கூட அவர் ஈடுபடலாம். இனி, எர்டோகன் நடந்துகொள்வதைப் பொறுத்தே துருக்கியின் எதிர்காலம் அமையும் என்பது மட்டும் நிச்சயம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT