Published : 16 Mar 2017 09:05 AM
Last Updated : 16 Mar 2017 09:05 AM

பாகுபாட்டை அழிக்காத கல்வியால் என்ன பயன்?

டெல்லியில் மர்மமான முறையில் நடந்திருக்கும் தமிழக மாணவர் முத்துகிருஷ்ணன் மரணம், சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. இப்படியான செய்திகள் இப்போது தொடராகிவருவது ஆழ்ந்த கவலை அளிக்கும் விஷயம்.

சேலம் மாவட்டம், சாமிநாதபுரத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (27), ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாற்று ஆய்வியல் மாணவர். பல்கலைக்கழகம் அருகில் உள்ள முனிர்கா பகுதியில் உள்ள தனது நண்பரின் வீட்டில் மர்மமான முறையில், தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டிருக்கிறது. எந்த அரசியல் இயக்கத்தையும் சாராதவர் என்றாலும், சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தவர் முத்துகிருஷ்ணன் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நாட்டையே கொந்தளிப்பில் ஆழ்த்திய மாணவர் ரோஹித் வெமுலாவின் மரணத்துக்கு நீதி கேட்டு நடந்த போராட்டங்களில் அவர் பங்கெடுத்திருக்கிறார். தமிழகம் போன்ற இந்தி பேசாத மாநிலங்களிலிருந்து மத்தியக் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் எளிய குடும்பத்து மாணவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களையும் சவால்களையும் அவருடைய முகநூல் பதிவுகள் சொல்கின்றன. தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், மேலதிகம் சாதியப் பாகுபாடுகளையும் அவர் எதிர்கொள்ள வேண்டி இருந்திருக்கிறது. இன்றைக்கு எளிய குடும்பப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்கள், தரம் மிக்க கல்வி நிறுவனங்களை நோக்கிச் செல்கையில், அதுநாள் வரை அவர்களுக்கு அளிக்கப்பட்ட தரமற்ற கல்வி, முக்கியமாக தரமற்ற ஆங்கிலம் எப்படி அவர்கள் மீது பாகுபாட்டைத் திணிக்க ஒரு காரணமாகிறது என்பதையும் முத்துகிருஷ்ணனின் பதிவுகள் சொல்கின்றன.

முத்துகிருஷ்ணனின் மரணத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. “அவர் தற்கொலை செய்துகொண்டிருக்க வாய்ப்பில்லை” என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர். போலீஸார் விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர். கடந்த ஆண்டு, டெல்லி எய்ம்ஸ் நிறுவனத்தில் முதுகலை முதலாமாண்டு பயின்றுவந்த திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரவணன் அவரது விடுதி அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் இங்கு நினைவுகூர வேண்டியது. அவரது மரணம் தற்கொலை அல்ல; உரிய விசாரணை தேவை என்று அவரது குடும்பத்தினரும் தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் வலியுறுத்தினர். அவர் இறந்து ஐந்து மாதங்களுக்குப் பிறகே அவரது மரணம் தொடர்பான வழக்கு கொலை வழக்காக டெல்லி போலீஸாரால் பதிவுசெய்யப்பட்டது. இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை. இந்தச் சூழலில்தான் முத்துகிருஷ்ணனின் மரணம் விவாதங்களை உருவாக்கியிருக்கிறது. இரு மாணவர்களின் மரணங்கள் தொடர்பிலும் உள்ள மர்மங்கள் அனைத்தும் வெளிக்கொணரப்பட வேண்டும்.

எல்லாப் பாகுபாடுகளிலிருந்தும் மாணவர்களை வெளியே கொண்டுவருவதே கல்வியின் தொடக்க நிலை. ஆனால், நம்முடைய கல்விமுறை ஆரம்ப நிலையிலேயே தோற்றுவிடுகிறது என்பதையே உயர் கல்வி நிலையங்களிலும் இன்று பெருகிவரும் மாநில, சாதியப் பாகுபாடுகள், அரசியல் நிலைப்பாடுகள் சார்ந்து உருவாகும் பகையுணர்வு இவையெல்லாம் உணர்த்துகின்றன. எப்போது இவற்றிலிருந்தெல்லாம் விடுபடப்போகிறோம்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x