Published : 14 Jun 2017 09:01 AM
Last Updated : 14 Jun 2017 09:01 AM

ஈரான் தாக்குதலும் கேள்விக்குள்ளாகும் பிராந்தியப் பாதுகாப்பும்

ஈரானில் ஜூன் 7-ல் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவங்களில் 12 பேர் கொல்லப் பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. 1979-ல் நடந்த புரட்சியின் முக்கிய அடையாளங்களாக இருக்கும் ஈரான் நாடாளுமன்றக் கட்டிடத்தையும், இஸ்லாமியக் குடியரசின் நிறுவனரான அயாதுல்லா கோமேனியின் கல்லறையையும் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஈரானில் கடந்த பல ஆண்டுகளில் நடந்திருக்கும் மிகப் பெரிய பயங்கரவாதத் தாக்குதல் இது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படையின் கடும் கண்காணிப்பையும் மீறித் தாக்குதல் நடத்த முடியும் என்று காட்டியிருக்கிறார்கள் ஐஎஸ் பயங்கரவாதிகள். அவர்களைப் பொறுத்தவரை மேற்கு ஆசியாவில், சித்தாந்தரீதியாகவும், வியூக அடிப்படையிலும் அவர்களுக்குப் பிரதானமான எதிரி ஈரான்தான்.

ஷியா முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்கள் மூலம் வளர்ந்துவந்த ஐஎஸ் அமைப்பினர் இராக், சிரியாவில் ஷியா முஸ்லிம்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறார்கள். மேற்கு ஆசியாவில் ஷியா அரசின் வடிவம் என்று ஈரானை அந்த அமைப்பினர் கருதுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, ஐஎஸ் அமைப்புக்கு எதிரான போரில் நேரடியாகவே பங்கேற்றிருக்கும் நாடு ஈரான்.

இந்தத் தாக்குதலில் சவுதி அரேபியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பங்கிருக்கிறது என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படை பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருக்கிறது. இது சவுதி ஈரானுக்கு இடையிலான பதற்றத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது. மேலும், மேற்கு ஆசியாவில் எந்த நாடும் பயங்கரவாத அச்சுறுத்தலிலிருந்து தப்பவில்லை என்பதையும், பயங்கர வாதத்துக்கு எதிரான கூட்டு நடவடிக்கையை இந்தப் பிராந்தியத்தின் நாடுகள் எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்தத் தாக்குதல் உணர்த்துகிறது. ஆனால், அதற்கு நேர்மாறான விஷயங்கள்தான் நடந்துவருகின்றன. பிற நாடுகளுடன் சேர்ந்து ஈரானைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் சவுதி ஈடுபட்டுவருகிறது. ஈரானுடன் போரிடுவோம் என்று சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அல்-சவுத் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார். ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்காவும் ஆதரிக்கிறது.

பயங்கரவாத ஆதரவு நாடு என்று ஈரானைக் குற்றம் சாட்டும் ட்ரம்ப் அரசு, ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் சவுதிக்கு பகிரங்கமாக ஆதரவு வழங்குகிறது. சன்னி ஷியா பிரிவினருக்கு இடையிலான மோதலாக இதை மேற்கொண்டுவருவதால், இந்தப் பிரிவினையைத் தங்களுக்குச் சாதகமாக பயங்கரவாதிகள் பயன்படுத்திக்கொள் கிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளைச் சரியாகக் கையா ளவில்லை என்றால், அது பிராந்தியரீதியில் பதற்றங்களை ஏற்படுத்திவிடும். எனவே, இரண்டு நாடுகளும் தொடர்ந்து பகைமை பாராட்டாமல் பிராந்தியப் பாதுகாப்பு எனும் நோக்கத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்து பணியாற்றுவது மிக முக்கியம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x